பயணம்/உலகச் சிறுகதைகள்/புத்தக விமர்சனம்

 பயணம்/உலகச் சிறுகதைகள்/புத்தக விமர்சனம்

#பயணம்

உலகச் சிறுகதைகள்

(ஆறு கதைகள், ஆறு சர்வதேச எழுத்தாளர்கள்)

தமிழில் எம் ரிஷான் ஷெரிப்/புத்தக விமர்சனம் byகருப்பு அன்பரசன்

M.rishan Shareef

வெளியீடு

#திரவிடியன்_ஸ்டாக்.

Gowtham Sham

93 பக்கங்கள்

விலை.₹.110/- /

புத்தக விமர்சனம் byகருப்பு அன்பரசன்

நாட்டு மக்களாலும் அதிகாரத்தில், ராணுவத்தில் இருக்கும் எவர் ஒருவராலும் நம்பவே முடியவில்லை. கடவுளின் தூதர் கொலை செய்யப்பட்டார்.

தலை தனியாக கிடக்கிறது.

தலையை தனியாக்கிய #மனிதன் யார்..?

______

ஜூன் 25,1975 ஆம் வருடம் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்படுகிறது.

21 மாதங்கள், மார்ச் 21 1977 வரை

இந்தியாவின் எல்லா பொழுதுகளும் காரிருள் கொண்டதாகவே எல்லோருக்கும்.

அதிகாரத் திமிரின் உச்சத்தில்

அன்னை ( !) இந்திரா.!

செங்கதிரை உமிழும் சூரியன் காரிருள் வண்ணத்தை போர்த்திக் கொண்டது. பால் நிலவு வளர்பிறையையும் தேய்பிறையையும் மறந்து ஒற்றைக் கரும்புள்ளியாகவே அந்தக் காலங்களில்.

ராணுவத்தின் அத்தனை படைப் பிரிவுகளும் வானவில்லை துப்பாக்கி தோட்டாக்களால் நிறைத்து மறைத்துக் கொண்டு நின்றார்கள்.

அரசுத்துறை நிறுவனங்களும் நிர்வாகங்களும் இந்திராவின் பெயரை உச்சரிக்காமல் அந்த நாள் பொழுதை தொடங்கவே முடியாது. பெரும்பாலான தின இதழ்கள் மாத இதழ்கள் வார இதழ்கள் இந்தியா முழுவதிலும் இந்திராவின் புகழ் பாடிய விற்பனைக்கு வெளியே வந்தன.

.

அவசர நிலை எதிர்ப்பு போராளிகளை களச் செயல்பாட்டாளர்களை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களை அதிகாரத்திற்கு ஆள் காட்டுபவர்களின் துணையோடு கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இந்தியாவின் சிறைகள் அனைத்தும்

பிதுங்கிக் கிடந்தன கரிய நிற மலை பாம்பு ஒன்று மொத்த இந்தியாவியும் விழுங்கி உப்பிக்கிடப்பது போல்.

அரசை, அதிகாரத்தை எதிர்த்து இம் என்றாலும் ஏன் என்று சப்தம் எழுப்பினாலும், எதிர்ப்பவர்களின் மூச்சுக்காற்று சத்தம் இல்லாமல் நிறுத்தப்பட்டது. நாடு முழுவதும் போராளிகளை தேடி தேடி விஷம் கக்கி வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் இந்திய நாட்டை ரத்தக்கவிச்சை வீசும் மண் பரப்பாகவும் பிணங்கள் எரியும் சுடுகாடாகவும் மாற்றி போட்டது தலைகள் ஆயிரம் முளைத்த அவசரநிலை கரு நாகம்.

ஜனநாயகத்தின் விழிகளை முற்றாக பிடுங்கி எறியத் துடித்தலைந்தது அதிகாரம். ஜனநாயகத்தின் குரல்வளையை குத்திக் குதறி எடுக்க தன்னுடைய ஆயிரமாயிரம் கைகளுக்குள் குத்தீட்டிகளையும்

கொலை வாட்களையும் உயர்த்திப் பிடித்துக் கொண்டு ஓடியாடியது சர்வாதிகாரத்தின் மமதை.

காவல்துறையால் ராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை கூட சொல்ல மறுத்தார்கள்.

அதிகாரத்தின் தாக்குதல்களால் கொன்று புதைக்கப்பட்டவர்களின் பெயர்களையும் இடத்தையும் கூட இது நாள் வரையிலும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட மாணவன் ராஜன் உயிரோடு இருக்கிறானா இல்லை காவல்துறையினரால் கொலை செய்யப்பட்டு உடல் மறைக்கப்பட்டதா.. புதைக்கப்பட்டதா எரிக்கப்பட்டதா என்கிற விவரங்கள் கூட அவர்களின் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படாதது என்பது நம் நாட்டின் ஜனநாயகத்தின் சோகமே.

சிறைக்குள் இருந்த பல போராளிகளின் மண்டைகள் உடைக்கப்பட்டது. கால் கைகள் முறிக்கப்பட்டு முடமாக்கப்பட்டது. கண்களை சிதைத்தார்கள் .முகங்களை சின்னாபின்னப்படுத்தினார்கள்.

பலரின் செவிப்பறைகள் கிழித்து எறியப்பட்டது.

ஆனாலும் கூட கருத்துரிமையின் குரல் எடுத்து பாடக்கூடிய பறவைகள் பல தேசமெங்கும் அவசர நிலை எதிர்ப்பு பாடல்களை வேகம் எடுத்து பாடிக்கொண்டே பறந்தார்கள். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட போராளிகள் பலர் ஓங்கி எழுந்து எதிர்பாட்டம் ஆடினார்கள் சர்வாதிகாரத்திற்கு எதிராக.

இழப்புகளை பலதை சந்தித்துக் கொண்டே அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு எதிரான ஒரு பெரும்படையை திரட்டினார்கள் ஜனநாயகத்திற்கு ஆதரவாக..

இந்தியா முழுவதும் எழுந்த எழுச்சியின் காரணமாக நெருக்கடி நிலையை திரும்பப் பெறுகிறார் 21 மாதத்திற்கு பிறகு இந்திரா. எமர்ஜென்சியை திரும்பப் பெற்ற நிலையில், தான் சந்தித்த பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு மிகப்பெரிய வெற்றி பெறுகிறது. இந்திரா தலைமையிலான காங்கிரஸ் பெரும் தோல்வி அடைகிறது. பிரதேச கட்சிகளின் எழுச்சி காங்கிரஸ் பேரியக்கத்திற்கு பின்னடைவை இந்தியா முழுவதிலும் பல மாநிலங்களில் ஏற்படுத்தியது. அது இன்றைய தேதி வரையிலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. “இந்திரா தான் இந்தியா, இந்தியாதான் இந்திரா” என்கிற முழக்கம் கிழித்து எறியப்பட்டது ஜனநாயகப் போராளிகளால்.

21 மாத கால எமர்ஜென்சி காலமே பேச்சுரிமைக்கும் எழுத்துரிமைக்கும் மிகப்பெரிய சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் இருந்து இந்தியா முழுவதிலும்.

அதிகார வெறி, இலக்கியம் கருத்துரிமை அடிப்படை வாதத்திற்கு எதிராக இருந்து இயங்கக்கூடிய அறிவு சார்ந்த ஆய்வாளர்கள் பலரை கொலை செய்து விழுங்கிய நிஜங்கள் உலகம் முழுவதிலும் ஏராளம் ஏராளம்.

எதிர்கொண்டு எதிர்த்து குரல் எழுப்பி வரும் பலர் மீது அடக்குமுறை நிகழ்த்தி’ கை விலங்கு பூட்டப்பட்டு கொடுமைகளை நடத்தி வருவது இன்றும் கூட தொடர்கிறது இந்தியாவில். நாட்டின் கிளை சிறை முதல் மத்திய சிறை வரை அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், விசாரணை வளையத்திற்குள் இருப்பவர்களின் விவரங்களும் இன்றும் கூட இந்திய பிரஜைகள் எவருக்கும் முழுமையாக தெரிவிக்கப்படாமல் தொடர்வது நடந்து கொண்டு தான் இருக்கிறது

இந்தியாவிற்குள்.

கடந்த 10 ஆண்டு காலமாக ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்டவர்களும் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை இந்தியா முழுவதிலும் அமல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சட்டங்கள், ஆணைகள் வழியாக தேசிய பாதுகாப்பு என்கிற பெயரில் பலவற்றை குறிப்பிட்ட சமூக இனம் சார்ந்த மக்கள் மீது தொடுத்து தொடர்ந்து அத்துமீறலை நிகழ்த்தி வந்து கொண்டிருக்கிறார்கள். அதிகாரத்தின் அத்துமீறலை ஏன் என்று கேட்பவர்கள் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகிறார்கள் அல்லது கொலை ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். ஜனநாயக நாட்டில்தான் இப்படியான அத்துமீறல்கள் என்பது அதிகாரத்தில் இருப்பவர்களால் தினம்தோறும் நடைபெற்று வருவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

சரி.. #பயணம் தொகுப்பிற்குள் இப்பொழுது வருவோம்.

கொங்கோ குடியரசு பாலஸ்தீனம், மொராக்கோ, புரட்சிக்கு முன் இருந்த ரஷ்யா வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் அதிகாரத்தை எதிர்த்து பேசி மக்கள் இலக்கியம் படைத்தவர்களின் கதைகளை உள்ளடக்கி இத்தொகுப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த தொகுப்பில் ஆறு கதைகள் இருக்கிறது. ஆறு கதைகளை எழுதியவர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களால் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள் அல்லது கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் அல்லது காணாமல் போகச் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்த ஆறு கதைகளும் அவர்களின் மரணத்திற்குப் பிறகு உலகின் நோபல் பரிசு உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறது. உலகத்து இலக்கிய பிரியர்களால் போற்றப்பட்டிருக்கிறது.. கொண்டாடப்பட்டிருக்கிறது.

நான்கு கதைகளில் #மனிதன் என்கிற முதல் கதையை மட்டும் உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்.

மற்ற ஐந்து கதைகளையும் நீங்கள் தொகுப்பிற்குள் சென்று வாசித்து அந்த வலியினையும் அனுபவத்தையும் உணருங்கள்.

கதைக்கு வருவோம்.

அவர் நாட்டின் எஜமானர்..

கடவுளின் தூதர்.. அவர் பேசுவதே கடவுளின் பேச்சாக ஆணை பிறப்பிக்கப்படும். அவர் பேசுவதே தர்மம். அவர் வாய் உச்சரிப்பதே சத்தியம்.

அறம் மறந்த அல்லது அறியாத அல்லது மறக்கடிக்கப்பட்ட சுதந்திர நாட்டில்

அதி முக்கியத்துவம் மிகுந்த பாதுகாப்போடு கோட்டைக்குள் குடியிருப்பவர். அவரை எவர் ஒருவராலும் பார்க்க முடியாது.

அவரை எவர் ஒருவராலும் தொடர்பு கொள்ளவும் முடியாது. அவரின் உருவம் பதிந்த ஏதேனும் ஒன்று நாட்டின் பிரஜைகள் ஒவ்வொருவர் வீட்டிலும் அவசியம் வைத்து இருக்க வேண்டும்.

அவரின் உருவ பொம்மையோ புகைப்படமோ இல்லாதவர்களின் வீடு கண்டுபிடிக்கப்பட்டால் குடும்பத்தோடு கொலை செய்யப்படுவார்கள்.

தினப் பத்திரிகை ஒவ்வொன்றும்

மரணமாக இருந்தாலும், மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் அவரின் பெயரை முதலில் அச்சில் ஏற்றி வாழ்க என பதிவு செய்திருக்க வேண்டும். செய்தித்தாளின் தலைப்பு எழுத்து அவரின் பெயரோடு தொடங்கி இருக்குமாறு கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். வானொலியில் செய்திகளை வாசிப்பதற்கு முன்னும் பின்னும் கடவுள் தூதுவரின் பெயரை உச்சரித்து வந்தனம் சொல்வது சட்டமாக்கப்பட்டு இருக்கிறது.

திருமணமாகட்டும், மணமக்கள் சந்தித்து பேசக்கூடிய முதல் இரவாகட்டும்

அவரின் பெயரை உச்சரித்த பிறகு மற்ற சடங்குகள் பேச்சுக்களைத் தொடங்க வேண்டும். மரண வீடு என்றால்

முதலில் அவர் படத்தை வைத்து மாலை போட்டு மரியாதை செய்துவிட்டு பிறகுதான் செத்துப் போனவருக்கு மாலை அணிவிக்க வேண்டும்.

(குறிப்பு: சடலத்திற்கு போடப்படும் பூமாலை கடவுள் தூதுவரின் படத்திற்கு போடப்பட்டிருக்கும் மாலையை விட சிறிய அளவில் இருக்கும்படி கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்)

எவர் ஒருவர் உணவு உண்ண வேண்டும் என்றாலும் பட்டினி கிடக்க வேண்டும் என்றாலும் அவரின் பெயரை உச்சரித்த பிறகே எல்லாவற்றையும் செய்து முடிக்க வேண்டும். மூத்திரம் அடிக்க வேண்டும் என்றாலும் பேல வேண்டும் என்றாலும்

அவரின் பெயரை உரக்க சொல்லிய பிறகு எல்லாம் நடைபெற வேண்டும்.

இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெறும் என்றால் இரண்டு முறை மறக்காமல் உச்சரிக்க வேண்டும். இப்படி எல்லா இடத்திலும் அவர்தான்.

சுதந்திர நாட்டில்

அந்த மகா கடவுளின் தூதரை

சந்திக்க வாய்ப்பு எவருக்கும் வழங்கப்படாது. அப்படி அவரை சந்திக்க வர வேண்டும் என்று அந்த கடவுளின் தூதர் விரும்பினால் மட்டுமே முடியும்..

இளம் பெண் ஒருவரோடு வருவது என்றால் நிச்சயம் தூதுவரின் ஒப்புகை உடனே கிடைத்து விடும். தனியே வரும் ஆண் அவரின் மனசு நோகும்படி நடந்து கொள்ளவும் கேள்வி கேட்கவும் கூடாது. மீறி மனசு நோகும்படி நடந்து கொண்டால் அவரின் தலை கொய்யப்பட்டு அகழியில் இருக்கும் முதலைக்கு வீசப்படும். அவர் உள்ளே நுழைந்ததற்கான அடையாளங்கள் எல்லாம் அழிக்கப்படும்.

சுதந்திர ஜனநாயக நாட்டில் பாதுகாப்பான இடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறார் ராணுவ சேனைகளால் கடவுளின் தூதர். கடவுளின் தூதுவரான

அந்த எஜமான் தான் இந்த நாட்டின் எல்லாமும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அவரை சந்திக்க உள்ளே வருபவர் கோட்டையின் முதல் நுழைவு வாயிலை அடைந்த உடனே கடவுளின் தூதர் தங்கியிருக்கும் அறையின் நிலைக்கண்ணாடியில் யார் வருகிறார் என்பதை காட்டிக் கொடுத்து விடும். அவர் உள்ளே வரக்கூடிய ஒவ்வொரு நாழிகையும் எங்கு வருகிறார் என்பதை கடவுளின் தூதர் இருக்கும் அறையில் இருந்தே கண்ணாடியில் பிரதிபலிக்குமபடி மிகுந்த எச்சரிக்கையாக ஆங்காங்கே பிரதிபலிப்பு கண்ணாடிகள் பொருத்தப்பட்டு இருக்கும். முதலில் இருக்கும் பிரதான வாயிலுக்குள் நுழைந்த உடன் நேராக வந்து விட முடியாது. முதல் நுழைவாயிலுக்கும் கோட்டையின் இரண்டாவது நுழைவாயிலுக்கும் இடையே மிகப் பெரிய நீர் அகழி இருக்கும். அகழியில் பட்டினி போடப்பட்டு இருக்கும் கரு நிற ஆப்பிரிக்க இந்திய முதலைகள் பசியின் வெறிகொண்டு ஒன்றின் மீது ஒன்று புரண்டு கொண்டிருக்கும்.. இரண்டு நுழைவாயிலையும் இணைப்பதற்கு இரும்பு பாலம் பொருத்தப்பட்டிருக்கும்..

அதை இயக்கும் கருவிகள் இரண்டாவது நுழைவாயிலில் வைக்கப்பட்டிருக்கும்.

இரும்பு பாலத்தில் நடந்து வரும் பொழுது இரண்டாவது நுழைவாயிலில் இருக்கும் பாதுகாவலருக்கு சந்திக்க வருபவர் மீது எப்பொழுது சந்தேகம் ஏற்பட்டாலும் பாலத்தின் கீழ் பகுதி திறக்கப்படும். நடந்து வருபவர் பசி வெறியில் கீழே இருக்கும் முதலைகளுக்கு உணவாக்கப்படுவார் அந்த நிமிடமே. நீர் அகழிக்கு அடுத்ததாக காட்டு விலங்குகளையும் கொன்று அழிக்கும் கொடிய விஷம் கொண்ட பச்சை மற்றும் கரிய நிற பாம்புகள் பலதை கொண்ட அகழி ஒன்றும் இருக்கும். இவைகள் அனைத்தையும் மீறிதான் அந்த நபர் கோட்டைக்குள் நுழைய முடியும் கடவுளின் தூதர் தங்கி இருக்கும் பிரதான அறைக்குள்.

இவ்வளவு பாதுகாப்பையும் மீறி கடவுளின் தூதர் ஒரு நாள் கொல்லப்படுகிறார். நாட்டு மக்களாலும் அதிகாரத்தில் இருப்பவர்களாலும் ராணுவத்தில் இருப்பவர்களாலும் நம்பவே முடியவில்லை. ஆனாலும் கடவுளின் தூதர் தலை தனியாக கிடக்கிறது. அவரின் தலையை தனியாக எடுத்து வைத்தவன் தன்னுடைய ஒரு கண்ணை துணியால் மூடி வந்த ஒற்றை கண்ணன் என்பது மட்டும் அவர்களால் தகவல் சேகரிக்கப்பட்டு இருக்கிறது.

நாட்டின் எஜமானரை.. அந்த நாட்டின் அதிபரை.. அந்த நாட்டின் பிரதம அமைச்சரை.. அந்த நாட்டின் மன்னரை..

இவ்வளவு பாதுகாப்புக்கு இடையில் கொலை செய்தது யார்.? அவன் ஏன் ஒற்றைக் கண்ணை மூடி வந்தான்.. ? அரசும் அதிகாரமும் அவனை கண்டுபிடித்தார்களா..? அவனை கண்டுபிடிப்பதற்காக எத்தனை உயிர்களை பலி வாங்கினார்கள்..? எத்தனை கிராமங்களை சூறையாடினார்கள்.. எவ்வளவு இயற்கை வளங்களை கொள்ளையடித்தார்கள்..?

அந்த மனிதன் என்ன ஆனான்..?

உயிரோடு இருக்கிறானா.. ? உயிரோடு இருந்தால் எங்கு இருக்கிறான்..? இல்லை அவன் செத்து விட்டானா..! அப்படி செத்திருந்தால் அதற்கு காரணம் யார்..? இப்படியான நிறைய கேள்விகள் உங்களுக்குள் எழும்..? அதற்கு விடை

பயணம் தொகுப்பை வாசியுங்கள்.

அதில் மனிதனை பாருங்கள்.

மனிதன் எனும் இச்சிறுகதை கொங்கோ குடியரசு நாட்டின் எழுத்தாளர்

ஈ. பீ.டொங்ங்காலா என்பவரால் எழுதப்பட்டது. ஆட்சியாளர்களால் தடை செய்யப்பட்ட சிறுகதை தொகுப்பில் இருந்த கதைதான் மனிதன் . இவரின் தொகுப்புகள் சர்வதேச விருதுகள் பலவற்றை பெற்றிருக்கிறது.

ஈ. பீ.டொங்ங்காலா, ஐசாக் பாபெல்,

பாம் டை தூன், ஹாஸ ன் கனாக்பாநீ, அப்துல் ஜபார் ஸஹிமி, மற்றும் அஹமத் ஹூசைன் அபூ மாஹிர் யெமனி உள்ளிட்ட ஆறு உலக எழுத்தாளர்கள் எழுதி இருக்கக்கூடிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டிருக்கிறது.

தொகுப்பில் இருக்கக்கூடிய அத்தனை கதைகளுமே உலக நிஜங்களை.. அதிகாரத்தின் அத்துமீறல்களை.. எளிய மக்கள் படும் துயரங்களை.. பாடு மிகுந்த வலிகளை பேசுகிறது. அடக்குமுறைக்கு உள்ளான மக்களின் விடுதலைக் குரலாக இந்த தொகுப்பில் இருக்கக்கூடிய ஆறு சிறுகதைகளும்.. அவற்றின் எழுத்தாளர்களும். சர்வாதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்டதாலேயே பலர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதனுடைய தொடர்ச்சிகளை இன்றைக்கும் நாம் காணலாம்.. அறிய முடியும்.. செய்திகளாக கேட்க முடியும் உலகம் எங்கிலும்.

அதிகாரத்திற்கு எதிராக உலக வரலாற்றில் நடைபெற்ற அத்தனை தியாகங்களையும் விடுதலை வேள்விகளையும் நாம் அறிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இன்றைய உலக சமூக சூழல் அதைத்தான் நிதமும் சொல்லிக் கொண்டிருக்கிறது நமக்கு. உழைக்கும் மக்களின் விடுதலையை விரும்பக் கூடியவர்கள், சர்வாதிகாரத்திற்கு எதிரான கருத்துரிமை என்கிற ஆயுதத்தின் தேவையை உணர்ந்தவர்கள் நிச்சயம் இந்த தொகுப்பை வாசிப்பது அவசியமாகும்.

எப்பொழுதும் போல் மூலஎழுத்தின் உயிர் சிதையாமல் அப்படியே மொழி மாற்றி வலியும் போராட்ட உணர்வும் குறையாமல் கடத்திக் கொடுத்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் எம்.ரிஷான் ஷெரிப். சிறப்பான முறையில் அட்டைப்படம் வடிவமைத்து வெளியிட்டு இருக்கிறார்கள் #டிரவிடியன்_ஸ்டாக்.

இருவருக்கும் அன்பும் வாழ்த்துக்களும்.

மனிதனைப் போன்றே பயணம் தொகுப்பில் இன்னும் ஐந்து கதைகள் இருக்கிறது. ஐந்தையும் வாசித்து விடுங்கள் நீங்களும்.

கருப்பு அன்பரசன்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...