சண்டு_சாம்பியன்/Chandu Champion/
மனவுறுதி
கனவு மெய்ப்படும்.
சண்டு_சாம்பியன்
Chandu Champion
(தமிழிலும் உண்டு)
அமேசான் பிரைம் OTT தளத்தில்./திரைப்பட விமர்சனம்
மனவுறுதி
கனவு மெய்ப்படும்.
மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி என்ற கிராமத்தின் காவல் நிலையம்.. காவல் அதிகாரி குற்றவாளி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.. அந்த நேரத்தில் வயது முதிர்ந்த ஒருவர் புகார் மனு ஒன்றை கொடுப்பதற்காக வந்திருப்பதாகவும்.. காவல்துறை அதிகாரியை நேரில் சந்தித்துதான் புகார் மனுவை கொடுக்க வேண்டும் என காத்திருப்பதாகவும் தகவல் சொல்கிறார் காவலர் ஒருவர்.
காவல் அதிகாரி முதியவரை நேரில் சந்தித்து ‘சரி.. சொல்லுங்கள் என்ன பிரச்சனை உங்களுக்கு” என்று கேட்க
அதற்கு முதியவர் “1974 ஆம் வருடம் தொடங்கி 2018 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக பொறுப்பு வகித்த தலைவர்களின் பெயரை சொல்லி அவர்கள் மேல்தான் புகார்.. மேற்கண்ட ஒருவரும் எனக்கு அர்ஜுனா விருது வழங்கவில்லை” என்று தெரிவிக்கிறார்.
இப்படியான புகார் தெரிவிக்கப்பட்டதும் அந்த அறையில் இருந்த காவல் துறை அதிகாரியும் காவலர்களும் சிறையில் இருக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் எப்படியான மனநிலையோடு அவரைப் பார்த்திருப்பார்கள்..?! அங்கு அந்த அறையில் எந்த மாதிரியான சூழல் நிலவி இருக்கும் என்பதை படத்தை நாம் பார்க்கும் பொழுது உணர முடியும்.
காவல்துறை அதிகாரி மேலதிக விவரங்களை கேட்க விவரங்களை சொல்ல ஆரம்பிக்கிறார் முதியவர். அங்கிருந்து கதை பின்னோக்கி நகர்கிறது.
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்று ஊர் திரும்பவும் விளையாட்டு வீரர்களுக்கு ஊரே கூடி நின்று அளிக்கும் வரவேற்பை பார்க்கிறான் அந்தச் சிறுவன். தானும் குஸ்தி போட்டியில் பங்கேற்று அப்படியான ஒரு வீரனாக வர வேண்டும் கனவு காணத் தொடங்குகிறான். ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பது அவனுடைய கனவின் உச்சம். வெள்ளை சட்டையும் காக்கி டவுசரும் அணிந்து கொண்டு பள்ளி செல்லும் அந்த சிறுவன் தான் ஏழை டைலரின் மகன் முரளி. முரளியின் தகப்பனாரோ அவனை பள்ளி சென்று பாடம் படிப்பதிலேயே கவனம் செலுத்த சொல்லி கண்டிப்போடு நடந்து கொள்வார் ஒவ்வொரு நாளும். அவனுக்குள் துளிர்விடும் கனவுகளை அவ்வப்போது சிதைத்துக் கொண்டே இருப்பார் பேசும் சொற்களாலும் கைகளில் கிடைக்கும் பிரம்பாலும்.
முரளியின் ஆழ் மனதில் சூல் கொண்ட கனவு ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக வீரியத்தோடு வளர்ந்து கொண்டே இருக்கும். முரளி பள்ளிக்குச் செல்லாமல் போக்கு காட்டி விட்டு அவனுக்குள் நிறைந்து இருக்கும் கனவின் விருப்பப்படி அந்தக் கிராமத்தில் இளைஞர்களுக்கு குஸ்தி பயிற்சி அளிக்கும் வாத்தியார் ஒருவருக்கு உதவியாளனாக சேர்ந்து கொள்கிறான். குஸ்தி வாத்தியாரோ முரளியை வெறும் எடுபிடி வேலை செய்வதற்கு மட்டும் வைத்துக் கொள்கிறார். வாத்தியாருக்கும் குஸ்தி பயில வரும் இளைஞர்களுக்கும் உதவிகள் பல செய்து கொண்டே அவர்கள் செய்து வரும் சண்டைப் பயிற்சிகளை கவனிக்கிறான் முரளி. கிடைக்கும் நேரங்களில் தினமும் கண்டு உணர்ந்த பயிற்சிகளை வீட்டிற்கு வெளியே உழு நிலங்களில், ஆற்றின் கரை ஓரங்களில், களத்து மேடுகளில் அவரின் அப்பாவுக்கு தெரியாமல் செய்து வருகிறான். சிறுவன் முரளி இளைஞனாக வளர்ந்தாலும் கூட அவனுக்கு குஸ்தி பயிற்சி அளிப்பதில் வாத்தியார் கவனம் செலுத்துவது கிடையாது. அவனை எப்பொழுதும் எடுபிடி வேலை செய்வதற்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்.
ஒரு நாளொன்றில்
கிராமங்களுக்கு இடையே குஸ்தி போட்டி நடைபெற திட்டமிடப் படுகிறது அதிகாரத்தில் இருப்பவர்களால். அதிகாரம் கொண்ட மாமன் மகன் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக குஸ்தி தெரியாத ஒருவனை தன்னுடைய கிராமத்தின் குழுவில் இருந்து அனுப்பி விட வேண்டும் என்று குஸ்தி வாத்தியார் அதிகார ஆதிக்கம் மிகுந்த குஸ்தி வீரர்களை கலந்து பேசி முடிவு செய்கிறார். அதற்காக அவர் தான் பயிற்சி அளிக்காத இளைஞன் முரளியை போட்டியில் கலந்து கொள்ளச் சொல்கிறார். இளைஞன் முரளியும் குஸ்தி வாத்தியாருக்குள் இருக்கும் வஞ்சகம் அறியாமல் போட்டியில் கலந்து கொள்வதை பெருமையாக நினைக்கிறான். தன்னுடைய வீட்டுக்கு தெரியாமல், தன்னுடைய அப்பாவுக்கு தெரியாமல் போட்டியில் பங்கேற்கிறான் முரளி.
தனக்கு பயிற்சி அளிக்கவில்லை என்ற பொழுதிலும் தன்னுடைய வாத்தியார் மற்றவர்களுக்கு கொடுக்கும் குஸ்தி பயிற்சியை பார்த்து வளர்ந்தவன் முரளி. இரண்டு ஊரும் கூடி நிற்கக்கூடிய அந்த குஸ்தி களத்தில் எவரும் எதிர்பாராத வகையில் நன்கு பயிற்சி பெற்ற குஸ்தி வீரனை போன்று சண்டையிட்டு வெற்றி பெறுகிறான். அவன் பெற்ற வெற்றியை சற்றும் எதிர்பார்க்காத அதிகாரத்தில் இருக்கக்கூடிய குஸ்தி போட்டியாளர்கள், ஏற்பாட்டளர்கள் முரளியை கொல்வதற்காக போட்டி முடிந்ததும் போட்டிக் களத்தில் இருந்து விரட்டிக் கொண்டு வருகிறார்கள். முரளி கிராமத்தை விட்டு ஓடி ரயில் ஏறி வெளியேறுகிறான். கிராமத்தை விட்டு அருகில் இருக்கும் நகரம் சென்று சேருகிறான்.
மனது முழுவதும் ஒலிம்பிக் போட்டியும் தங்கப் பதக்கமும் என்ற கனவுகளை நிரப்பிச் சென்றவன் எதிர்பாராத நண்பர்கள் உதவியால் ராணுவத்தில் சேர்கிறான். ராணுவத்தில் சேர்ந்த முரளி அங்கே அதிகாரி டைகர் அலியின் உதவியால் குத்துச்சண்டையில் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு எல்லோரும் அறியப்படும் வீரனாக வளர்ந்து நிற்கிறார் முரளி. ஜப்பானில் நடைபெறும் உலகளாவிய குத்துச்சண்டை போட்டியிலும் இந்தியாவின் பிரதிநிதியாக இராணுவத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறார். ஆரம்ப நிலை போட்டியில் வெற்றி பெற்றவர் இறுதிப் போட்டியில் வெற்றி பெற முடியாமல் தோல்வியடைகிறார். பயிற்சியாளரான தன்னுடைய ஆலோசனை காதில் வாங்காமல் முரளி போட்டியில் கவனக்குறைவாக நடந்து கொண்டதின் விளைவாகவே தோல்வியை சந்திக்க நேர்ந்தது என்பதால் மன வருத்தத்தை தொடர்கிறார் டைகர் அலி முரளியிடம்.
கிராமத்தில்
குஸ்தி வீரனாக ஆரம்பித்தவன்.. ராணுவத்தில் சேர்ந்து குத்துச்சண்டை வீரனாக போட்டிகள் பலதில் கலந்து கொண்டவன்..
குத்துச்சண்டை வீரனாக மேடை ஏறி சுழன்று சுழன்று எதிரியை அடித்து வீழ்த்தியவன்..
நீச்சல் வீரனாக எப்படி மாறினான்..?
குத்துச்சண்டை..ஒலிம்பிக் போட்டி… தங்கப் பதக்கம் என்ற கனவுகளை சுமந்தவன்
பாரா ஒலிம்பிக்
நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு
தங்கப் பதக்கம் வென்ற
சோகம் நிறைந்த மகிழ்வை முரளியால் எப்படி நிகழ்த்தி காட்டப்பட்டது
என்பதே படம் சண்டு சாம்பியன்.
சண்டு சாம்பியன் என்று எல்லோராலும்
கேலி பேசப்பட்ட முரளி
உலகச் சாம்பியானாக எப்படி
பரிணாமம் அடைந்தான்..?
ஊரை விட்டு ஓடி வந்த பொழுது கடும் பாய்ச்சல் வேகத்தில் ஓடி, ஓடும் ரயிலில் ஏறிய குஸ்தி சண்டை வீரனின் கால்களுக்கு என்ன ஆயிற்று..?
அவனுடைய கால்களை செயலிழக்கச் செய்தது எது..?
பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுக்க முடியாது என்று அறிவித்த இந்தியா…
பிறகு எப்படி பங்கெடுத்தது.. !
அந்த மன மாற்றத்தை செய்தவர்கள் யார்..?
பாரா ஒலிம்பிக் வரை சென்று தங்கப்பதக்கம் என்ற முரளியின் பெயரை அவரின் துறை சார்ந்த கோப்புகளில் சேர்க்காமல் விட்டது எவரின் கைகள்..
பிறகு அவரின் பெயர் சேர்க்கப்பட்டு
இந்திய அரசு
பத்மஸ்ரீ விருது வழங்குவதற்கான வேலைகளை யார் பார்த்தது..?
இப்படி நிறைய கேள்விகளை எழுப்பிக் கொண்டே செல்லலாம்.
தனிமனிதன் கண்ட கனவு
நிறைவேறாத பொழுது..
அவன் வாழ்வது எதற்காக..?
அந்தக் கனவை நிறைவேற்றவே. !
இது எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும்.
இந்திய ராணுவத்தில் பணியாற்றி;
பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்று;
தங்கப்பதக்கம் வென்று
இந்தியாவின் உயர்ந்த விருதான
பத்மஸ்ரீ பட்டத்தை பெற்ற
முரளிகாந்த் பெட்கர் குறித்தான
வரலாற்று நிஜ நிகழ்வுகளை உள்ளடக்கியது தான் இந்தத் திரைப்படம்.
முரளியாக கார்த்திக் ஆர்யன் மிகச் சிறப்பாக பாத்திரத்தின் தன்மை ஏற்று, முழுவதுமாக உள்வாங்கி நடித்திருக்கிறார். அதேபோன்று
நம் அனைவருக்கும் அறிமுகமான அற்புதமான திரைக் கலைஞர் விஜய்ராஜ் தன்னுடைய பங்கிற்கு சிறப்பாக பணியாற்றி பார்க்கும் நமக்கு உத்வேகத்தை அளிக்கிறார்.
மே மாதம் படத்தில் நடித்த சோனாலி குல்கர்னி பத்திரிக்கை நிருபராக தோழராக பணியாற்றி முழு விவரங்களையும் வெளிக் கொண்டு வந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார். படத்தில் தோழர் என்கிற வார்த்தை ஒரு முறை தான் உச்சரித்தாலும் அதனுடைய மகா சக்தியை பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்த்து இருக்கிறார் இயக்குனர் கபீர் கான்.
எண்ணங்களை கனவுகளை
ஒவ்வொரு மனிதனும் கொண்டாட வேண்டும்
கொண்டாடி மனதில் துளிர்விட்ட கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்கிற சக்தியை கொடுக்கும் இப்படத்தை கபீர் கானே தயாரித்திருக்கிறார்.
படத்தில் பணியாற்றிய அத்தனை திரை கலைஞர்களும் அவர்களின் பங்களிப்பை மிகச் சரியாக செய்திருக்கிறார்கள். தொழில்நுட்ப கலைஞர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
இந்த படம்
அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது..
தமிழிலும் நீங்கள் பார்க்கலாம்.
அவசியம் பார்த்து விடுங்கள்.
ஒவ்வொரு மனிதனின் கனவும்
மெய்ப்பட வேண்டும்.
#சண்டு_சாம்பியன்
(Chandu Champion)
(தமிழிலும் உண்டு)
அமேசான் பிரைம் OTT களத்தில்
நடிகர்கள்
கார்த்திக் ஆர்யன்
விஜய் ராஜ்
புவன் அரேரோ
சோனாலி குல்கர்னி ..
தயாரிப்பு, இயக்கம்:கபீர்கான்
ஒளிப்பதிவு: சுதீப் சட்டர்ஜி
இசை: ப்ரீத்தம்.
by கருப்பு அன்பரசன்.