மீண்டும் வெள்ளப்பெருக்கு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிப்பதற்கு தடை..!
ஒகேனக்கலில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆற்றில் குளிப்பதற்கு 32வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து, அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், சரிந்தும் காணப்படும். கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து, கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து உபரிநீர்திறக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
இதற்கிடையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைந்தது. இதனால், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைந்து, உபரிநீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது. எனினும், மீண்டும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அணை இரண்டாவது முறையாக கடந்த 12-ம் தேதி முழு கொள்ளளவை எட்டியது.
இந்நிலையில், மேட்டூர் அணைக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து விநாடிக்கு 16,500 கனஅடியாக நீடிக்கிறது. காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் நீடிக்கிறது.
அதே போல், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 16000 கனடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 28000 கனடியாக அதிகரித்துள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் ஆற்றில் குளிப்பதற்குத் தொடர்ந்து தடைவிதித்து வருகிறது. மேலும் தொடர்ந்து காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதாக இன்று மாலைக்குள் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.