மாஞ்சோலை பகுதிகளில் சூழல் சுற்றுலா சேவை நிறுத்திவைப்பு..!
கனமழை எச்சரிக்கை காரணமாக மாஞ்சோலை பகுதிகளில் சூழல் சுற்றுலா சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியிலிருந்து மாஞ்சோலை 57 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மாஞ்சோலை மலைச்சுற்றுலா தளத்தில் நான்கு தேயிலை எஸ்டேட்டுகள் அமைந்துள்ளது. மாஞ்சோலையில் இருந்து பார்க்கும் வியூ பாயிண்ட்கள் அனைத்தும் மனதை கவரும் வகையில் உள்ளன. இதனால் இங்கு வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.
மற்ற சுற்றுலா தலங்களைப் போல இல்லாமல் மாஞ்சோலைக்கு செல்ல வனத்துறை அனுமதி பெற வேண்டும். மழைக்காலங்களில் அவ்வப்போது சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மாஞ்சோலைக்கு வர தடை விதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது கனமழை எச்சரிக்கை காரணமாக மாஞ்சோலை சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளி நபர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, மறுஅறிவிப்பு வரும் வரை மாஞ்சோலை பகுதிகளில் சூழல் சுற்றுலா சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் இளையராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.