அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு சரிவு..!

 அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு சரிவு..!

ஹிண்டன்பா்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழுமத்தைச் சார்ந்த அனைத்து நிறுவனத்தின் பங்குகளும் சரிவுடன் தொடங்கின.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், பங்குச்சந்தைகளில் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த ஆண்டு பரபரப்பு அறிக்கை வெளியிட்டது. அதையடுத்து, அதானி குழும பங்குகளின் விலை சரிந்தது.

இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதானி குழும முறைகேடு தொடர்பாக ‘செபி’ யே விசாரிக்கட்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், ஹிண்டன்பர்க் நேற்று முன் தினம் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனங்களில் செபி அமைப்பின் தலைவர் மாதபி புரி புச் பங்குகளை வைத்துள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியது.

செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி புச், அவரின் கணவர் ஆகியோர் அதானி நிறுவனத்தின் வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு வைத்திருப்பதன் காரணமாகவே அதானி தொடர்புடைய பங்குதாரர்களுக்கு எதிராக செபி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுகளை மாதபி பூரி புச் மறுத்து அறிக்கை வெளியிட்டனர்.

ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முதலீட்டு நிதியத்தில் முதலீடு 2015ம் ஆண்டு இருவரும் சிங்கப்பூரில் வசித்த போது, அதாவது மாதபி செபியில் சேருவதற்கு கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முன்பு முதலீடு செய்யப்பட்டது என்று அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தனர். மேலும், அதானி குழுமமும் மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கின. அதன்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 377 புள்ளிகள் சரிந்து 79,368 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. மேலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 100 புள்ளிகள் சரிந்து, 24,266 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

ஹிண்டன்பா்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழும பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகி வருகின்றன. அந்த வகையில், அதானி குழும நிறுவனங்களான அதானி என்டர்பிரைசஸ், அதானி, போர்ட்ஸ், அதானி பவர், அதானி என்ர்ஜி உள்ளிட்ட பங்குகளின் விலை சரிவைக் கண்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...