கன்னியாகுமரியில் கடல் சீற்றம்..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றமாக காணப்பட்டதால் கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 7 ம் தேதி வரை அனைத்து
கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், காற்றின் அளவு 35 கி.மீ முதல் 45 கிமீ வரையிலும் சில நேரங்களில் மணிக்கு 55 கிமீ வேகம் அதிகமாக இருக்கும் எனவும் தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுவித்தது.
கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதோடு கடலோரப்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது எனவும் மீனவர்களும், கடரோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் தங்களது படகுகளை பாதுகாப்பாக கரைகளில் கட்டி வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்த பட்டது. மேலும், சுற்றுலா பயணிகள் கடற்கரைப் பகுதிக்கும், கடலில் குளிக்கவும் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.இதனால் லெமூர் கடற்கரை, முட்டம் கடற்கரை, தேங்காப்பட்டினம் கடற்கரை க்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
மறுக்கப்பட்டுள்ளன.