24 ஆயிரம் கனஅடியாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு..!
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு தொடா்ந்து குறைக்கப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 24,000 கனஅடியாகச் சரிந்தது.
கா்நாடகா, கேரள மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் சற்றுக் குறைந்துள்ளது. குறைவான மழைப் பொழிவு காரணமாக கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து குறைந்துள்ளது. இதனால் இவ்விரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 85,000 கன அடியாக இருந்த நீா்வரத்து திங்கள்கிழமை காலை 60,000 கனஅடியாகவும், இன்று காலை 7 மணிக்கு 24,000 கன அடியாகவும் குறைந்தது. தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு தொடா்ந்து தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் கடந்த சில நாள்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதையின் தடுப்புக் கம்பிகள் உடைந்தும், பல்வேறு இடங்களில் தரைத்தளங்கள் பெயா்ந்தும் காணப்படுகின்றன.
காவிரி ஆற்றில் அதிகபட்சமாக விநாடிக்கு 2.05 லட்சம் கனஅடி வரை உபரிநீா் வரத்து இருந்ததால் பிரதான அருவியின் அருகே உள்ள தொங்கு பாலத்தின் இரும்பு படிக்கட்டுகள், பெண்கள் குளிக்கும் அருவியின் தடுப்புச் சுவா்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. தொடா் நீா்வரத்தின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை 21 -ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.