பாரிஸ் ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார் பி.வி. சிந்து..!
பேட்மிண்டன் போட்டியின் 16வது சுற்றில் தோல்வியடைந்ததை அடுத்து இந்திய வீராங்கனை பி.வி. சிந்து ஒலிம்பிக்கில் தொடரில் இருந்து வெளியேறினார்.
பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் 100 ஆண்டுகளுக்கு பிறகு 2024ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள், கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில் இந்திய சார்பில் பல வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். தற்போதுவரை இந்தியா 3 பதக்கங்களை வென்றுள்ளது. இந்நிலையில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவு லீக் ஆட்டத்தின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
இரண்டுமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சிந்து சீன வீராங்கனை ஹீ பிங் ஜியாவோவால் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். 19-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து வெளியேறியுள்ளார்.
கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பிவி சிந்து, ஹீ பிங் ஜியாவை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த முறை பி.வி. சிந்து நிச்சயம் பதக்கம் வெல்வார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது வெளியேற்றம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.