வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250ஐ கடந்தது..!
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஐ கடந்துள்ளது, மேலும் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து ஜுலை 29 அன்று வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டு, தற்போது வரை கிட்டதட்ட 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், கனமழை காரணமாக நேற்று முன் தினம் நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று முதல் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 1000-த்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்த நிலையில், தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்களை மேப்பாடி என்ற பகுதியில் தற்காலிக மின்மயானம் அமைத்து எரியூட்டி வருகின்றனர். உயிரிழந்தவர்களை அவரவர் மதத்தின் சார்பில் இறுதி மரியாதைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதாக, ஆம்புலன்ஸ் மூலம் தற்காலிக மின்மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது செல்லும் போது சாலையோரம் இருந்த பொதுமக்கள் பூக்கள் தூவி இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர், தற்காலிக மின்மயானத்தில் 100க்கும் மேற்பட்ட உடல்கள் ஒரே இடத்தில் வைத்து எரியூட்டப்பட்டது.
இந்நிலையில் இன்று கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மீண்டும் வயநாட்டிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காசர்கோடு,கண்ணூரர்,கோழிக்கோடு போன்ற மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.
மேலும், வட கேரளாவில் கனமழைக்கான தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்கள் கனமழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலப்புரம்,பாலக்காடு,திருச்சூர்,எர்ணாகுளம்,இடுக்கி போன்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கோட்டயம்,ஆலப்புழா,பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கடல் அலை ஆக்ரோஷமாக எழும் எனவும் படகுகள் பாதுகாப்புடன் வைக்கவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.