“நீட் தேர்வு ரத்து இல்லை”
நீட் தேர்வில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில் நீட் தேர்வு ரத்து இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில், வினாத்தாள் கசிவு உட்பட பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான, 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரனை இன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்தது. இந்நிலையில், இவ்வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
“1.08 லட்சம் மருத்துவ இடங்களுக்காக 23 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளனர். நீட் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாலும், தேர்வு நடத்துவதில் ஏற்பட்ட systematic failure காரணமாக மறுதேர்வு நடத்த வேண்டும் என மனு தாரர்கள் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக 4 நாட்கள் விசாரணை நடைபெற்றது.பல்வேறு தரப்பிலிருந்தும் விரிவாக வாதங்கள் கேட்கப்பட்டது.
பாட்னா, ஹசாரிபாக் ஆகிய இடங்களில் வினாதாள் கசிவு முறைகேடு நடந்துள்ளது என்பதை உறுதி செய்கிறோம். மேலும் இது தொடர்பாக ஜூலை 21 வரை நடைபெற்ற விசாரணை நிலை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. பாட்னா, ஹசாரிபாக் ஆகிய இடங்களில் 155 மாணவர்கள் வினாத்தாள் கசிவால் ஆதாயம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஐஐடி மெட்ராஸ் வழங்கிய அறிக்கையை நாங்கள் ஆய்வு செய்து இருக்கிறோம். நடப்பு ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யும் அளவிற்கு போதுமான தரவுகள் இல்லை. நீட் தேர்வில் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் மீறும் விஷயங்கள் நடந்துள்ளது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் தற்போது வரை இல்லை.நீட் மறுதேர்வு நடத்தப்படாது. நீட் தேர்வு கருணை மதிப்பெண்கள் விவகாரத்தில் மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் தனிப்பட்ட முறையில் அவர்கள் அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களை நாடலாம்” இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.