உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 9 – சுதா ரவி

 உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 9 – சுதா ரவி
முதல் நாள் இரவு கடற்கரையில் பார்த்த நிகழ்வுகளை மனதில் ஒட்டி பார்த்தவண்ணம் காலை வேலைகளை செய்து கொண்டிருந்தான் கார்த்தி.
ஜன்னலோரம் வந்து வெளிப்புறத்தை ஆராய்ந்தான். மக்கள் அவரவர் வேலையில் மும்மராக நாட்டிற்குள் நடக்கும் மர்ம நடவடிக்கைகளை அறியாமல் நடமாடிக்கொண்டிருந்தனர். பணம் என்னும் காகிதம் மனிதனை சக உயிர்களை கொன்று புதைக்கும் ஆயுதமாக மாற வைத்ததை  என்னவென்று சொல்வது என்று எண்ணியபடி கட்டிலில் வந்து அமர்ந்து போனை எடுத்து ஆதிக்கு பண்ணினான்.
“ சொல்லு கார்த்தி.நேத்து என்ன நடந்துது?நீ அங்கே இருந்தியா?”
“ நாம நினைச்சபடி தான் எல்லாம் நடந்துது.ஆர்ஜே அந்த சரக்கு எல்லாம் கொண்டு போய்ட்டான்.ரெண்டு பேருக்கும் இடையில் நடந்த சண்டையை மீனவ சண்டையா காண்பிச்சிட்டாங்க”என்று முதல் நாள் நடந்த நிகழ்வுகளை எல்லாம் ஆதியிடம் கூறினான்.
“ பட் அந்த சரக்கு ஆர்ஜே கையில் இருக்கிறது நல்லது இல்லையே கார்த்தி…”
“ ஆமாம் ஆதி, பொருள் இங்கே இருந்து வெளில போக கூடாது…அது நம்ம நாட்டுக்கு அழிவு தான்.எப்படியும் ரெண்டும் குரூப்பும் டீல்  பேசுவாங்க…அப்போ நாம அலெர்ட்டா இருந்து சரக்கை தூக்கிடனும்”என்றான் ஆதி.
“சரக்கை மட்டும் தூக்கினா போதுமா.அந்த மொத்த கூட்டத்தையும் தூக்கணும்.ஒரு அல்லக்கை கூட விடக்கூடாது”என்றான் ஆதி.
 “நான் ஹரியோட கடைசி ஆடியோ பைல் கேட்டேன்.அவன் ஆதாரத்தை எங்கே விட்டு இருப்பான்னு  கொஞ்சம் ஐடியா கிடைக்குது…ஆனா இன்னும் முழுசா தெளிவாகலை.ஆர்ஜேவை பத்தியும் ஏதோ ஒரு முக்கியமான
விஷயம் சிக்கி இருக்கு.ஆனா அவன் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகில் தான் ஏதோ ஒரு இடம்ன்னு புரியுது”என்றான் கார்த்தி.
“அந்த பைல்லை எனக்கும் அனுப்பு …….நானும் கேட்டு பார்க்கிறேன் என்னால கண்டுபிடிக்க முடியுதான்னு பார்க்கிறேன்.”
“சரி,எனக்கு சில விஷயங்கள் செஞ்சாகனும் அந்த சரக்கு வெளில வரதுக்குள்ள.எப்படியும் இன்னும் ஒரு வாரத்துக்குள்ள பெரிய போராட்டம் இருக்கு அதுக்குள்ளே நாம எல்லாத்தையும் கண்டுபிடிச்சாகனும்.”
“ ஓகே டன்.நீ சொன்ன விஷயங்களை நான் பார்க்கிறேன்….இன்னைக்கு உன்னோட பிளான் என்ன, எங்கே  போறே?”
“நான் இன்னைக்கு பிச்சாவரம் போறேன்.என்னை லவ் பண்ணி பின்னாடி சுத்திட்டு இருக்கானுங்களே அவனுங்களுக்கு போக்கு காட்ட போறேன்……..அதே சமயம் எனக்கு வேண்டிய தகவலும் சேகரிச்சிடுவேன்.”
“ஹாஹா கார்த்தி………..ஓகே ஓகே என்ஜாய் பண்ணு உன் லவ்வர்ஸ் கூட…நான் இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள உன் சின்னு வீட்டை யார் வாங்கினது யார்ன்னு விவரம் கொடுக்கிறேன்.”
“ஆதி ரொம்ப ஜாக்கிரதையா மூவ் பண்ணனும்.நான் இருக்கிறது தாண்டவதுக்கும் , ஆர்ஜேவுக்கும் தெரிஞ்சு போச்சு ஆனா நான் தனியா வந்து இருக்கிறதா நினைச்சு இருக்கானுங்க.நம்ம ஆளுங்க இங்கே இருக்கிறது எந்த காரணம் கொண்டும் தெரிய கூடாது.”
“சரி கார்த்தி….அதே மாதிரி மார்கோஸ்சும் அலெர்ட்டா இருக்காங்க.( MARINE கமண்டோஸ்) நம்ம சிக்னல் கொடுத்த அடுத்த நொடி அவங்க செயலில் இறங்கிடுவாங்க.”
“ குட் ஆதி………ஈவினிங் வந்து பாலோஅப் சொல்றேன்”என்றான் கார்த்தி.
ஆதியிடம் பேசி முடித்து விட்டு மடமடவென்று அன்று செய்ய வேண்டியவைகளை முடிவு செய்து விட்டு அடுத்த கட்ட நடவடிக்கையில்
இறங்கினான். கழுத்தில் பைனாகுலரை மாட்டிக் கொண்டு ஒரு சுற்றுலா பயணி போல கிளம்பியவன் ஹோட்டலின் கீழ் தளத்திற்கு வந்து வரவேற்பில் பிச்சாவரதிற்கு செல்லும் வழியினை கேட்டறிந்து கொண்டு சென்றான். அவன் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கியதும் இரு தரப்பு ஆட்களும் அவனை பின் தொடர்ந்தனர்……..சரியாக ஒரு மணிநேர பயணத்திற்குப் பின்னர் பிச்சாவரம் வந்து சேர்ந்தான். அங்கு அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் படகு துறைக்கு சென்று ஒரு படகுக்கான கட்டணத்தை கட்டி சீட்டை வாங்கி கொண்டு நகர்ந்தான். எல்லோரும் வரிசையில் நின்று படகில் எறிக் கொண்டிருக்க, கார்த்திக் ஏறிய படகில் அவன் மட்டுமே இருக்க அவனை தொடர்ந்தவர்கள் அவசரமாக அதில் ஏறத் தொடங்க அதை பார்த்த படகோட்டி” தம்பி இந்த படகுக்கு அவரே முழு பணம் கட்டி இருக்கார்………நீங்க இதிலே வரணும்னா அவர் அனுமதி கொடுத்தாதான் உண்டு” என்றார்.
அதை கேட்டு அவன் கார்த்திக்கின் முகம் நோக்க” நான் தனியா இயற்கையை ரசிக்க நினைக்கிறவன். நீங்க வேற படகிலே வாங்க” என்றான். அவன் பதிலில் ஏமாற்றம் அடைந்த மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு வேறு வழியில்லாமல் அடுத்த படகை நோக்கி சென்றனர்.
மெல்ல படகு அங்கிருந்து நகர ஆரம்பித்ததும் கார்த்திக்கின் மனதில் அதுவரை இருந்த சலனம் எல்லாம் மறைந்து தன் கண்முன்னே விரிந்து கிடந்த காட்சியில் மயங்கி இருந்தான். ஒரு பக்கம் இயற்கை காட்சியை கண்டு மயங்கியவனுக்கு மற்றொரு பக்கம் படகோட்டி இந்த வயதான காலத்தில் துடுப்பு போடுவதை கண்டு மலைத்து போனான்.
அவன் மனதில் ஓடிய எண்ணத்தைப் புரிந்து கொண்ட படகோட்டி” என்ன தம்பி இந்த வயசில் துடுப்பு போடுறதை பார்த்து மலைச்சு போயிட்டீங்களா?”என்றார்.
அதற்கு  தலையை ஆட்டி” ஆமாம் தாத்தா, ரொம்ப ஆச்சர்யமா இருக்கு” என்றான்.
 “ஹாஹா……..இதெல்லாம் வயிரம் பாய்ஞ்ச உடம்பு தம்பி….காட்டிலேயும், மேட்டிலேயும் உழண்ட உடம்பு.உங்களை எல்லாம் மாதிரி குளுகுளு அறையில் இருந்து பழகினவங்க இல்லை நாங்க”என்றார்.
அவரிடம் பேச்சுக் கொடுத்தாலும்  அவன் மனம் இயற்கையின் எழில் கண்டு  பிரமித்து போய் இருந்தது…..இரு புறமும் செடிகளின் நடுவே ஓடும் நீர் வழி சில இடங்களில் பரந்து விரிந்தும் , சில இடங்களில் தோணி நுழைகின்ற அளவும் இருந்தது….எங்கெங்கும் பச்சை பசேலென்ற மரங்களின் நடுவே ஆங்காங்கே அமர்ந்திருந்த பறவைகள் அழகுக்கு அழகு சேர்த்தது…….அந்த அமைதியான சூழலில் பறவைகளின் ஒலி இனிய நாதமாக அமைந்தது.
இயற்கையை ரசித்துக் கொண்டே மெல்ல படகோட்டியிடம் பேச்சுக் கொடுத்தான். “ ஏன் தாத்தா…….இங்கே சுமாரா எத்தனை தீவுகள் இருக்கும் ?”
“ அது இருக்கும் நானூறுக்கு மேல”என்றார்.
அங்குள்ள தாவரங்களில் இருந்து பறவை இனம் வரை அனைத்தையும் அவர் அறிந்து வைத்திருப்பதை அறிந்து அதிசயித்து போனான்.”உங்களுக்கு எப்படி தாத்தா இதெல்லாம் தெரியும்?”
துடுப்பை சர்வசாதாரணமாக போட்டபடியே” எல்லாம் கேள்வி ஞானம் தான், இங்க எவ்வளவோ பேர் ஆராய்ச்சி பண்ண வராங்க அவங்க சொல்ற விஷயங்களை காதில் வாங்கி வாங்கி பதிஞ்சு போச்சு..”
அப்போது அங்கே கால்வாய் ஓரங்களில் மீன் வலை போன்று நரம்புகளை போட்டுக் கொண்டே சென்றனர் சில மீனவர்கள்…..அதை பார்த்தவன் அதை பற்றி வினவ” அதுவா நண்டு வலை.இங்கே இருக்கிற நண்டுகள் நல்ல ருசியா இருக்கும்……..இந்த மாதிரி கூடை வலையில் ரெண்டு மூணு மீன் துண்டை போட்டு அந்த வலையை தண்ணிக்குள்ள இறக்கிடுவாங்க…இந்த நண்டு என்ன செய்யும் நல்லா வலைக்குள்ள இறங்கி மீனை  சாப்பிடும்….அப்போ இவங்க  அந்த வலையை தூக்கும் போது அந்த நண்டுகள் மேல் வழியா வெளியே வராம கீழ் வழியா வெளியேற முயற்சிக்கும்
அதனால் மாட்டிக்கும்.ஒரு நாளைக்கு ஒரு கிலோலே இருந்து மூணு கிலோ வரை பிடிப்பாங்க”என்றார்.
“ஒ..சரி…….இங்கே எவ்வளவு ஆழம் இருக்கும்…..பார்த்தா ரொம்ப ஆழமா தெரியலையே”என்றான்.
“நாம போற இடத்தில் இப்போ மூணு அடி ஆழம் இன்னும் உள்ளே போக போக சில இடங்களில் பத்து அடிவரை கூட போகும்.”
தன் மேலிருந்த லைப் ஜாக்கெட்டை ஆராய்ந்து கொண்டே” இங்கே அடிக்கடி விபத்துக்கள் நடக்குமா தாத்தா…இதெல்லாம் கொடுத்து இருக்காங்களே.”
அவன் கேள்விக்கு மறுத்து தலை ஆட்டிக் கொண்டே” இல்ல தம்பி….அதிகமா நடந்தது இல்லை……..ஒரு நாலு  வருஷத்துக்கு முன்னே இந்த காலேஜ் பசங்க எல்லாம் கூட்டமா வந்துதுங்க……..அப்ப தான் அதுங்க ஒன்னோட ஒன்னு விளையாடிகிட்டே வரும்போது ஒரு பொண்ணு தவறி விழுந்து செத்து போச்சு”என்றார்.
அவர் சொன்ன பதிலில் சற்று சந்தேகத்துடன் “ஏன் தாத்தா இங்கே ஆழம் இல்லேன்னு சொல்றீங்க….பொண்ணு விழுந்தவுடனே யாராவது தூக்கி இருக்க்கலாமே…”
“அது இங்கே இல்ல தம்பி இந்த பசங்க அந்த படகோட்டி பயலை நல்லா காட்டுக்கு உள்பக்கம் கொண்டு போய்ட்டானுங்க……அங்கே பத்தடி ஆழம்…அது மட்டும் இல்ல அந்த படகில் இருந்த போட்காரனை தவிர வேற யாருக்கும் நீச்சல் தெரியாது….”
“ அந்த பெண்ணை எப்போ தான் வெளில கொண்டு வந்தாங்க?”
“ ரெண்டு நாள் கழிச்சு தான்……அதுவும் முகமெல்லாம் மீனும் நண்டும் பிடுங்கி வச்சு இருந்துதுங்க.பார்க்கவே பரிதாபமா இருந்துது.”
அவர் சொன்ன நிகழ்வுகளை நினைத்தவனது முகத்தில் ஒரு நிமிடம் வேதனையின் சாயல் வந்து போனது…..அதை அவர் பார்க்கும் முன்
சட்டென்று மாற்றிக் கொண்டான்……அதன் பின் அவனால் கேள்விகளை கேட்க இயலாமல் அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்த்த்துக் கொண்டு வந்தான்….அப்போது தாத்தா படகை துடுப்பு போடுவதை நிறுத்திவிட்டு ஒரு திசையில் கூர்ந்து நோக்குவதை பார்த்தன்……அவனும் அந்த திசையில் பார்க்க அங்கே பறவைகள் வட்டம் வட்டமாக சுற்றி இங்கும் அங்கும் அலைபாய்ந்த வண்ணம் பறந்தன…….
அதுவரை அமைதி காத்தவன் அந்த பறவைகள் பறந்த விதம் அவன் மனதை உறுத்த” ஏன் தாத்தா அந்த பறவை எல்லாம் அப்படி பறக்குது..”
அவனை திரும்பி ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்து விட்டு” அது ஒன்னும் இல்லை….ஏதாவது மிருகம் செத்து கிடக்கும் அதை பார்த்திட்டு தான் இப்படி சுத்துங்க” என்றார்.
அவரின் பதிலுக்கு மெல்ல சிரித்து விட்டு” எனக்கும் இந்த பறவைகளை பத்தி கொஞ்சம் தெரியும் தாத்தா.அங்கே ஏதோ புது நடமாட்டம் தெரியுது அது தானே இப்படி பறக்குதுங்க” என்றான்.
“ம்ம்..”என்று முனகலை மட்டும் பதிலாக கொடுத்து விட்டு வேறு புறம் திரும்பிக் கொண்டார்.
“இங்கே இந்த கடற்கரையோரம் ஏதோ தப்பான விஷயம் நடக்கிறதா கேள்விப்பட்டனே.உண்மையா?” என்று கேள்வியுடன் அவர் முகம் பார்த்தான்.
தன்னை மறந்து” ஆமாம் ஆமாம்..அது ஒரு பதினஞ்சு இருபது வருஷமாவே அப்படி தான் நடக்குது” என்றார்.
“அப்படி என்ன தப்பு நடக்குதுன்னு தெரியுமா உங்களுக்கு?”
அவனை தன் பார்வையால் அளந்து விட்டு” நீ தனியா வரும் போதே நினைச்சேன்.நீ என்ன போலீசா?”என்று கேட்டார்.
தலையை இடம் வலமாக அசைத்து” போலீஸ் மாதிரி ஆனா போலீஸ் இல்ல” என்று சொல்லி சிரித்தான்.
 அதுவரை அவர் முகத்தில் இருந்த இலகு தன்மை மாறி……” நீ எதுவா வேணா இருந்திட்டு போ…ஆனா இங்கே நடக்கிற விஷயத்தில் தலையை கொடுக்காம ஒழுங்கா உயிரோட ஊர் போய் சேருகிற வழியை பாரு”என்றார்.
“இல்ல தாத்தா என்று மறுத்து பேச ஆரம்பித்தவனை கையை காட்டி நிறுத்தி விட்டு……….இனி என் வாயில் இருந்து எதுவும் உனக்கு கிடைக்காது” என்று சொல்லி வந்த வழியே திரும்பினார்.
கரையில் வந்து இறங்கியதும் அவரிடம்” ரொம்ப நன்றி.எனக்கு இந்த பிச்சாவரத்தை பற்றி நிறைய விஷயங்கள் சொன்னீங்க…..உங்க கூட இருந்த இந்த ரெண்டு மணி நேரம் ரொம்ப உபயோகமானது.உங்களை என்னைக்கும் மறக்க மாட்டேன்” என்றான்.
அதற்கு பதிலேதும் சொல்லாமால் மெல்லிய புன்சிரிப்புடன் அங்கிருந்து சென்று விட்டார். அவர் சென்ற திசையையே சிறிது நேரம் பார்த்திருந்தவன் மெல்ல நடந்து மெயின் ரோட்டிற்கு வந்தான்……அங்கு இருந்த கடையில் ஒரு குளிர்பானத்தை வாங்கி கொண்டு ஓரமாக நின்று குடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று அவன் முன்னே அழுக்கு உடையுடன் தலை எல்லாம் சடை பிடித்து போன தோற்றத்துடன் வந்து நின்ற ஒருவன் இரு வினாடிகள் அவன் முகத்தை உற்று நோக்கி விட்டு…….
“மறக்க மாட்டேன்னு சொல்லிட்டு நெஞ்சு குழிக்குள்ள உசிர் காத்தை இழுத்து பிடிச்சுக்கிட்டு இருக்கிற உசிரை மறந்திட்டியே….வருவே ..வருவேன்னு வைராக்கியத்தோட ஒரு உசிரு உனக்காக காத்துகிட்டு இருக்கு….போ..போ..அந்த உசிருக்கு ஆபத்து வர போகுது……ரொம்ப நாளு காக்க வச்சிட்டே..” என்று கத்தினான்.
அதற்குள் அங்கு வந்த கடைக்காரன் அந்த பைத்தியக்காரனை விரட்டி விட்டான்….அவன் அங்கிருந்து ஓடினாலும் தன்னையே திரும்பி பார்ப்பதை பார்த்து குழம்பி போனான் கார்த்தி.
பில்லுமேட்டில் ஆர்ஜே வந்து சென்ற பிறகு அவன் ஏற்படுத்தி விட்டு சென்ற அதிர்ச்சியில் அப்படியே சுவற்றோரம் சாய்ந்து அமர்ந்திருந்த உத்ராவின் மனம் புயலில் சிக்கிய படகாக தவித்துக் கொண்டிருந்தது……..அவளின் மனம் போலவே வெளியிலும் லேசான தூறலுடன் மழை ஆரம்பிக்க அதை விடாமல் கலைக்க காற்று போராட இடையிடையே மின்னல் என்று இயற்கையும் போராட்டம் செய்து கொண்டிருந்தது. ஜன்னலின் ஊடே இருந்த இடைவெளியின் வழியாக நுழைந்த மண்ணின் மணமும் , மழை வேகமாக ஜன்னல் கதவுகளில் அடித்த ஓசையை கேட்டு அவளின் நினைவுகள் பின்னோக்கிப் பயணித்தது.
அந்த பௌர்ணமி இரவிற்குப் பிறகு அவனை பார்க்கவில்லை என்றாலும் மனதை விட்டு அகலவில்லை அவன் நினைவுகள். பதினைந்து நாட்களுக்கு பின் ஒரு மாலை நேரம் கல்லூரியில் இருந்து வந்து கொண்டிருக்கும் போது விஸ்வா அண்ணனின் வீட்டின் வாயிலில் நின்றிருந்தவனை பார்த்ததும் ஏனோ நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. இவன் தான் அவனோ என்று எண்ணி அவன் முகம் பார்க்க முயன்றாள். அவனோ காரை பூட்டி விட்டு உள்ளே செல்ல வாயிலில் காலடி எடுத்து வைத்தான். அவன் முதுகு புறமே மட்டுமே அவளுக்கு தெரிந்தது. அந்த நிலவொளியில் பார்த்த கம்பீரமான உருவத்துடன் ஒத்து போய் இருந்தது அவனுருவம். அவளின் மனதை படித்தவன் போல உள்ளே போகும் முன் சட்டென்று அவள் நின்று கொண்டிருந்த பக்கம் திரும்பி அதே வசீகர புன்னகையை சிந்தி லேசாக கண்சிமிட்டிவிட்டு உள்ளே சென்று விட்டான்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...