நீயெனதின்னுயிர் – 10 – ஷெண்பா

 நீயெனதின்னுயிர் – 10 – ஷெண்பா
10
ஷவரில் நனைந்துகொண்டிருந்த விக்ரமின் மனம் முழுவதும் கோபமும், ஆத்திரமும் நிறைந்திருந்தது. ‘தான் அவளருகிலேயே இருந்தும், இத்தகைய நிலையை ஏற்பட விட்டுவிட்டோமே’ என்ற இயலாமையில், தன் மீதே அவனுக்குக் கோபம் எழுந்தது. கண்மூடிக் கண் திறப்பதற்குள் நடந்து முடிந்த அந்த நிகழ்வு, இப்போதும் அவனது உடலை அதிரச் செய்தது.
ராகவுடன் பேசிக்கொண்டிருந்த விக்ரம், தங்களுக்குப் பக்கவாட்டில் வந்து நின்ற பைக்கில் இருந்தவர்கள் பேசியதைக் கேட்டு, அவர்கள், “அதோ!” என்று வைஷாலி இருந்த பக்கமாகக் கைகாட்டிவிட்டு வேகமாகக் கிளம்பினர். சூழ்நிலையை உணர்ந்து அவன் சுதாரிப்பதற்குள், அவர்கள் வைஷாலியை நெருங்கியிருந்தனர்.
அவளது கரத்தைப் பற்ற முயற்சித்தவனின் கைகளில் அகப்படாமல், திரும்பி நகர முயன்றவளது துப்பட்டா, அவனது கையில் சிக்கிக் கொண்டது. துப்பட்டாவை அவளது கழுத்தைச் சுற்றிப் போட்டிருந்ததால், பைக்கின் வேகத்தோடு இழுக்கப்பட்டு, தடுமாறி அவள் கீழே விழ, வலது பக்க நெற்றி முழுவேகத்துடன் தரையில் மோதியதில், அப்படியே மயங்கிச் சரிந்தாள்.
சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்தவர்கள், அவள் விழுந்து கிடப்பதையும், “ஏய்!” என்றபடியே தங்களை நோக்கி ஓடிவந்த ஆண்கள் இருவரையும் கண்டதும், பயத்துடன் பைக்கில் பறந்தனர். அவர்களைப் பிடிக்க ராகவ் பின்னோடு ஓட, விக்ரம் தவிப்புடன் அவளருகில் குனிந்தான்.
“வைஷாலி!” -அவனது வார்த்தைகள், தொண்டைக் குழியோடு நின்று போனது. பதற்றத்துடன் குனிந்து, அவளது தலையைப் பிடித்துத் தூக்கியவனின் கைகள் முழுவதும் இரத்தம். வாழ்க்கையில் முதன்முறையாக செய்வதறியாமல் திகைத்தான்.
திரும்பி வந்த ராகவ், “சார்! வைஷாலியைத் தூக்குங்க; நான் காரை எடுக்கிறேன்” என்று சீமாவிடமிருந்து சாவியை வாங்கிக்கொண்டு ஓடினான்.
அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்து, அவளுக்குத் தேவையான மருத்துவ உதவியை அளித்து விட்டு, டாக்டர் அவனிடம் பேசும் வரை, தனது உணர்வு களை முகத்தில் பிரதிபலித்துவிடாமல் இறுக்கமாக அமர்ந்திருந்தான் விக்ரம்.
“மிஸ்டர். விக்ரம்! நத்திங் டு வொர்ரி. காயம் கொஞ்சம் ஆழமாக இருப்பதால் ஸ்டிச்சஸ் போட்டிருக்கு. தூங்க மருந்து கொடுத்திருக்கறதால, காலையிலதான் கண்விழிப்பாங்க. நீங்க பார்த்துட்டுக் கிளம்புங்க, டிஸ்டர்ப் பண்ண வேணாம்.”
“தேங்க்யூ டாக்டர்…” என்றவன் சற்று ஆசுவாசத்துடன் மூச்சுவிட்டான். “சீமா! நீ போய்ப் பாரு. நான் வரேன்” என்றவன், வராண்டாவில் ஒரு பக்கமாக நின்றிருந்த ராகவின் அருகில் சென்றான்.
அவனைக் கண்டதும் நிமிர்ந்து நின்றவனை, “ராகவ்! நம்பரை நோட் பண்ணியா?” என்று கேட்டான்.
“இல்லை சார்” என்றான் தயக்கத்துடன்.
“ம்ப்சு! நானும் அந்த நேரத்தில் கவனிக்கல” என்றபடி நெற்றியைத் தடவிக் கொண்டான். “அவன் யாரு என்னன்னு எனக்குத் தெரியணும். கமிஷனரைக் கூப்பிட்டு நான் சொன்னேன்னு சொல்லு. நான் பிறகு பேசறேன்னும் சொல்லு” என்றான் அழுத்தமாக.
“சரி சார்” என்று நகர்ந்தவனின் தோளைப் பற்றி, “விஷயம் வெளியே தெரியக்கூடாது” என்றான் உறுதியான குரலில்.
“புரியுது சார்” என்றபடி தலையசைத்தான் ராகவ்.
நலுங்கிய தோற்றத்துடன், மருந்தின் ஆதிக்கத்தால் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்த விக்ரமிற்கு, வலியில் துடித்துக் கசங்கிய அவளது முகமே கண்முன்னே தோன்றியது.
டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்த அவளது கரத்தை மென்மையாகப் பற்றினான். “சாரி ஷாலு! என்னால் தானே…” என்றவனது குரல் தழுதழுக்க, வேதனையுடன் அவளது கரத்தில் முகம் பதித்துக்கொண்டான்.
“விக்ரம்! ரிலாக்ஸ். இது ஹாஸ்பிட்டல்…” என்று அவனது தோளில் அழுத்தினாள் சீமா. நிமிர்ந்தவனின் முகம் குற்றவுணர்வில் தவித்தது.
“நான் மட்டும் கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொல்லாமல் இருந்திருந்தால், இந்த நிலைமை வராமல் இருந்திருக்குமே சீமா!” என்றான்.
“ஹேய்! என்னப்பா நீ? உன்னை இப்படி நான் பார்த்ததேயில்லை. நடந்ததுக்கு நீ என்ன செய்வ? இப்படி நடக்கப் போகுதுன்னு உனக்குத் தெரியுமா? தெரிஞ்சிருந்தா, அவளைக் காத்திருக்கச் சொல்லியிருப்பியா? நீ அங்கே இருந்ததால், பிரச்சனை இதோடு முடிஞ்சிருக்குன்னு நினைச்சிக்கோயேன்” என்று பரிவுடன் சொன்னாள்.
“ஹும்! நான் என்னென்னவோ நினைத்து வந்தேன். ஆனால்…” என்று பேசிக்கொண்டிருக்கும் போது, கதவைத் தட்டி உள்ளே வர அனுமதி கேட்டான் ராகவ்.
வைஷாலியின் கரத்தை விடுவித்த விக்ரம், “எஸ்…” என்றான்.
“சார்! கமிஷனரிடம் பேசிட்டேன். அவர் உங்ககிட்ட நாளைக்குப் பேசறேன்னு சொன்னார். நான் நீங்க நாளைக்குப் பிசினஸ் விஷயமா ஃபாரின் போறதைச் சொன்னேன். சரி, நானே பார்த்துக்கறேன்னு சொல்லிட்டார்” என்றான்.
கைக்கடிகாரத்தைப் பார்த்த சீமா, “ஆமாம் விக்ரம். அதை நான் மறந்தே போயிட்டேன். மணி இப்போவே பதினொன்னு ஆகிடுச்சி” என்றாள்.
“ம், வைஷாலிகூட…” என்று இழுத்தான் விக்ரம்.
“காலையில் தானே அவ கண் விழிப்பா? அது வரைக்கும் நர்ஸ் பார்த்துப்பாங்க… நாம கிளம்புவோம்.”
திரும்பி வைஷாலியைப் பார்த்துவிட்டு அரை மனத்துடன் கிளம்பியவன், “ராகவ்! உன்னை நானே…” என்றவனை இடைமறித்து,  “நான் ஹோட்டலுக்குப் போய் என்னோட பைக்கை எடுத்துட்டு கிளம்பிடுவேன் சார். அப்புறம், டிரைவருக்கு ஃபோன் செய்து உங்க காரை எடுத்துக்கச் சொல்லியிருந்தேன். அதையும் பார்த்துட்டு அப்படியே கிளம்பறேன்” என்றான்.
“தேங்க்யூ!” என்று புன்னகைத்தவன், “உன் பிரச்சனையை என்னிடம் விட்டுடு. மனசைப் போட்டுக் குழப்பிக்காதே. நான் பார்த்துக்கறேன்” என்று சொல்லி விட்டுக் காரைக் கிளப்பினான்.
நடந்த அனைத்தையும் நினைத்தபடியே தலையைத் துவட்டிக்கொண்டு வந்தவன், அன்று வைஷாலி காரில் மறந்து வைத்துவிட்டுச் சென்ற கிஃப்ட் பார்சலை, தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்தான்.
“இன்னைக்காவது, இதை உன்னிடம் சேர்த்திடணும்னு நினைச்சேன் ஷாலு. ஆனா, முடியாமல் போச்சு. ஆனால், கட்டாயம் என்னோட இந்த விலைமதிப்பில்லாத அன்புப் பரிசை உனக்குக் கொடுப்பேன். விலை மதிப்பில்லாததான்னு கேட்கறியா நிச்சயமா. ஏன்னா, இது என்னோட காதல் பரிசு. உனக்குக் கொடுக்க ஸ்பெஷலாக இருக்கணும்ன்னு பார்த்துப் பார்த்து வாங்கின போதும், அன்னைக்கு என்னோட காதலை நான் உணரல.
இதை நீ மறந்து வச்சிட்டுப் போனதும் நல்லதுக்குத் தான்; ஏன் தெரியுமா? அதனால் தானே நீ எனக்கு எவ்வளவு ஸ்பெஷல்ன்னு புரிஞ்சுது. நீ குணமாகி நல்லபடியா வா. அதுவரைக்கும் நானும் இந்த கிஃப்ட் டைப் போல, பொறுமையா காத்திருப்பேன்” என்றவன், கப்போர்டைத் திறந்து அதைப் பத்திரமாக வைத்தான்.
கனவுலகில் சஞ்சரித்தபடி புன்னகையுடன் திரும்பியவன், கதவருகில் கேலிப் பார்வையுடன் நின்றிருந்த சீமாவைப் பார்த்தான். சங்கடத்துடன், “என்ன?” என்று புருவம் உயர்த்தி மென்குரலில், அப்பாவியாக முகத்தை வைத்தபடியே கேட்டவும், அவனைப் பார்த்துச் சிரித்தாள். அவள் தன்னைக் கண்டுகொண்டு விட்டாள் என்பது புரிய, லேசாக முகம் சிவக்க, தலையைக் கோதிக் கொண்டான்.
சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிய சீமா, அவனது செய்கையைக் கண்டு மீண்டும் சிரிக்க ஆரம்பித்தாள். “விக்ரம்! நான் பார்க்கறதெல்லாம் கனவில்லையே…?” என்று கேட்டுவிட்டு தன்னையே கிள்ளிப் பார்த்துக்கொண்டவள், “ஆ! வலிக்குது! அப்போ நிஜம் தான்!” என்று சிரித்தாள்.
“சீமா! போதும்…” என்று அவன் பற்களைக் கடித்தபடி சொன்னாலும், மலர்ந்திருந்த முகத்தை அவனால் மறைக்க இயலவில்லை.
“ஓகே! சிரிக்காமல் இருக்க முயற்சி செய்யறேன்; முடியுமான்னு தெரியலை!” என்று கலகலத்தாள்.
“முடியலைன்னா, உன் வாய்ல பிளாஸ்டரைப் போட்டு ஒட்டுறேன்” என்று எரிச்சலுடன் உரைத்தவன், “நீ எதுக்கு இந்த நேரத்துக்கு, என் ரூமுக்கு வந்த?”
“ஹாஸ்பிட்டல்ல இருந்து வரும் போதே கொஞ்சம் ஒரு மாதிரி இருந்த… அதுல, நாளைக்கு ஊருக்குக் கிளம்பறதை மறந்துடப் போறேன்னு அலாரம் வைக்கச் சொல்லலாம்னு நினைவுபடுத்த வந்தேன். இங்கே என்னடான்னா, காதல் மன்னன் ரேஞ்சுக்கு டயலாக் பேசிட்டு இருக்க. வந்ததுதான் வந்தோம்… அப்படி என்னதான் நீ பேசறன்னு பார்க்கலாம்னு விட்டுட்டேன்” என்றாள் குறும்புச் சிரிப்புடன்.
“கதவைத் தட்ட வேண்டியது தானே?” என்றான் கோபத்துடன்.
“அப்படி மேனர்ஸ் இல்லாமல், எங்க வீட்டில் என்னை வளர்க்கலைப்பா” என்றவள், கண்களைச் சிமிட்டினாள்.
“ஓ!” என்றவனின் முகம் லேசாகச் சிவந்தது.
“டோண்ட் வொர்ரி ஸ்வீட் பாய்! நீ உளறியதை அத்தை, மாமா, அப்புறம் உன்னோட ஷாலு… இந்த மூணு பேரைத் தவிர வேற யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். ஓகேவா?” என்று கர்மசிரத்தையாகச் சொன்னாள்.
“ஏய் ஆர்வக் கோளாறு! நிறுத்து. கடவுளே! நான் வேற உன் எதிர்ல… எல்லாத்தையும் உளறி… யாருக்காவது விஷயம் தெரிஞ்சுது… கொன்னுடுவேன்” என்றான் சலிப்பும், மிரட்டலுமாக.
“ஐயோ! நான் ரொம்பவே பயந்துட்டேன்” என்று நடுங்குவது போல நடித்தவள், “நல்லா… வகையா மாட்டியிருக்க… விட்டுடுவேனா? இதைச் சொல்லியே, என் காரியத்தையெல்லாம் சாதிச்சுக்குவேன் இல்ல” என்று கிண்டலாகச் சிரித்தாள்.
“என் தலையெழுத்து. சரி, நீ நாளைக்கு எப்போ கிளம்பற?” என்று பேச்சை மாற்றினான்.
“எஸ்கேப்பிஸமா…?” என்று சிரித்தவள், விளையாட்டுத்தனத்தை விட்டுத் தீவிரமான பாவத்திற்கு மாறி, “இல்லப்பா. வைஷாலி டிஸ்சார்ஜ் ஆனதும், அவளை ஹாஸ்ட்டலில் விட்டுட்டுத் தான் நான் கிளம்புவேன். நீயும் ஊரில் இருக்கமாட்ட இல்ல” என்றாள்.
“ரொம்ப தேங்க்ஸ் சீமா” என்று நெகிழ்ந்தான் அவன்.
“ரொம்ப ஃபீல் பண்ணாதப்பா! இதுக்கெல்லாம் வட்டியும், முதலுமா வசூல் பண்ணிடுவேன்.”
“அதுக்கு மேலே ஏதாவது வேணும்னாலும் சொல்லு, தாராளமா செய்யறேன்” – புன்னகைத்தான்.
“ஓகே! நீ தூங்கு. நான் நாளைக்குக் கிளம்பணும்… ஹாஸ்பிட்டல் வந்துட்டு அப்புறம்தானே கிளம்புவே…?”
“கண்டிப்பா… ஷாலுவைப் பார்த்துட்டு, அப்படியே கிளம்பறேன்.”
“குட் நைட்ப்பா…” என்று கிளம்ப, “சீமா! நான் இல்லாத போது ஷாலுகிட்ட… எதையும்…” என்று கெஞ்சலாகக் கேட்டவனை, புன்னகையுடன் பார்த்தாள்.
“தைரியமா போய்ட்டு வா. உன்னோட வாழ்க்கையை, நேசத்தை, உனக்குச் சொந்தமாகப் போறவளோட பகிர்ந்துக்க வேண்டிய அற்புதமான தருணம். நிச்சயமா உன்னோட அந்தச் சந்தோஷத்தைப் பறிக்கமாட்டேன்!” என்றவள் புன்னகையுடன் சென்றாள்.
(தொடரும்)
——————————————————————————————————————————————————-

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...