மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, விநாடிக்கு 45000 கன அடியாகஉயர்வு..!
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் கனமழை காரணமாக, கபினி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணைகளுக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது. இரு அணைகளிலிருந்தும் உபரிநீர் 75,748 கன அடி திறக்கப்படுகிறது.
இதன் காரணமாக, ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.நேற்று முன்தினம் 22 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. ஒகேனக்கலில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக, அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை வினாடிக்கு 35000 இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 45000 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் இதனால் மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கவும் குளிக்கவும் 4வது நாளாகத் தடை விதித்துள்ளது.