கடலூரில் அகழாய்வில் ராஜராஜ சோழன் காலச் செம்பு நாணயம் கண்டெடுப்பு..!

 கடலூரில் அகழாய்வில் ராஜராஜ சோழன் காலச் செம்பு நாணயம் கண்டெடுப்பு..!

கடலூர் மாவட்டம் மருங்கூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் ராஜராஜ சோழன் காலத்து செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை கீழடி, வெம்பக்கோட்டை, திருமலாபுரம்,
பொற்பனைக்கோட்டை, கீழ்நமண்டி, கொங்கல்நகரம், சென்னானூர், மருங்கூர் ஆகிய 8
இடங்களில் அகழாய்வுப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.அதன்படி மருங்கூர் அகழாய்வுப் பணிகள் அகழாய்வு இயக்குநர் சிவானந்தம் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது மூன்று அகழாய்வுக்குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில் அதில் ஒரு குழியில் 40 செ.மீ ஆழத்தில் சோழர் காலச் செப்பு நாணயம் ஒன்று கண்டறியப்பட்டது. இந்நாணயம் முதலாம் ராஜராஜ சோழன் காலத்தைச் சார்ந்ததாகும். இந்நாணயம் 23.3. செ.மீ விட்டமும், 2.5 மி.மீ தடிமனும் 3 கிராம் எடையும் கொண்டுள்ளது.

இந்த நாணயத்தின் முன்பக்கத்தில் மனித உருவம் இடம் பெற்றுள்ள நிலையில்,  இடது கையினை கீழ்நோக்கியும் வலது கை மேல் நோக்கியவாறும் காணப்படுகிறது. பின் பக்கத்தில் அமர்ந்த நிலையிலுள்ள மனித உருவம் வலது கை கீழ் நோக்கியும் இடது கை மேல் நோக்கிய நிலையிலும் காணப்படுகிறது. மருங்கூர் அகழாய்வுத் தளத்தின் மேலுள்ள பண்பாட்டு மண் அடுக்கு வரலாற்றுக் காலத்தைச் சார்ந்தது என்பதைக் குறிக்கும் வகையில் மாமன்னன் முதலாம் ராஜராஜனின் செப்புக் காசுக் கிடைத்திருப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...