SK.23 படத்தில் இணையும் டான்ஸிங் ரோஸ்..!

 SK.23 படத்தில் இணையும் டான்ஸிங் ரோஸ்..!

சினிமாவை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டு வேலை செய்பவர்களை எப்போதும் சினிமா கைவிட்டதில்லை என்றால், ஒருவர் மீது அன்பு செலுத்தத் தொடங்கிவிட்டால் அவரை எப்போதும் கைவிடாத மக்களாக தமிழ்நாடு மக்கள் என்றைக்கும் இருந்துள்ளனர். அது யாராக இருந்தாலும் சரி. அப்படி இருக்கும்போது சினிமாவையும் சீரியஸாக எடுத்துக் கொண்டும், சினிமாவுக்குள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னர் தமிழ் மக்களின் மனதை வென்றவராக வலம் வந்தவர் சிவகார்த்திகேயன்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், அதன் பின்னர் விஜய் டிவியின் அது இது எது நிகழ்ச்சியின் தொகுப்பாளரானார். தனது அசாத்திய திறமையால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சிவகார்த்திகேயன் ஒரு கட்டத்தில் விஜய் டிவியின் தவிர்க்க முடியாத தொகுப்பாளரானார்.

இப்படி இருக்கும்போது கடந்த 2012ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான மெரினா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தனுஷின் 3 படத்தில் தனுஷுக்கு நண்பனாக நடித்த பின்னர், தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தால், தனுஷ் சிவகார்த்திகேயனின் ஆரம்பகால சினிமாவில் முக்கிய அங்கமாக இருந்தார்.

தொடக்க காலத்தில் நகைச்சுவையை மையப்படுத்திய ஜனரஞ்சகமான படங்களில் நடித்து வந்தவர், ஒருகட்டத்திற்கு மேல் தன்னை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக நிலைநிறுத்தும் பணியில் தீவிரமாக செயல்பட்டார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான அயலான் படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றது. இதுமட்டும் இல்லாமல் இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளனர். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கின்றார். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அமரன் படத்தினை வரும் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து தற்போது சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடித்து வருகின்றார். பக்க ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் இந்த படத்தில், ஏற்கனவே துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்முவல், நடிகர் விக்ராந்த் நடிக்கின்றனர் என்ற அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் சார்ப்பட்டா பரம்பரை படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த ஷபீர் நடிக்கின்றார் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

ஏற்கனவே படத்தில் வித்யூத் ஜம்முவல் நடிக்கின்றார் என்றவுடன் படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் படம் வெற்றிதான் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டு இருக்கும்போது, படத்தில் டான்ஸிங் ரோஸ் ஷபீர் இணைந்துள்ளதால், படத்தில் இரண்டு வில்லன்கள் இருக்கின்றனர். எனவே படம் கட்டாயம் வெறித்தனமான சண்டைக் காட்சிகள் கொண்ட படமாக இருக்கும் என கூறப்படுகின்றது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...