இன்று பதவி ஏற்கிறார் சந்திரபாபு நாயுடு..!
ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்க இருக்கிறார்.
175 தொகுதிகளை கொண்ட ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 164 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்எல்ஏக்கள் அலோசனைக் கூட்டம் விஜயவாடாவில் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக சந்திரபாபு நாயுடுவை, ஜனசேனா தலைவர் பவன் கல்யான் முன்மொழிந்தார்.
பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கூட்டணி கட்சிகளிடன் ஆதரவு கடிதங்களுடன் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யான் ஆகியோர், ஆளுநர் அப்துல் நசீரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். இதனைத்தொடர்ந்து, ஆட்சியமைக்க வருமாறு சந்திரபாபு நாயுடுவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
இதன்படி, சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராக நான்காவது முறையாக இன்று காலை 11.27 மணிக்கு விஜயவாடாவில் பதவியேற்க உள்ளார். மேலும் துணை முதலமைச்சராக பவன் கல்யாண் பதவியேற்க உள்ளதாக தெரிகிறது. அவர்கள் உள்பட மொத்தம் 26 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி விஜயவாடாவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.