உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 7 – சுதா ரவி

 உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 7 – சுதா ரவி

பெண் பார்த்துவிட்டு வந்த பிறகு நடந்த அமர்க்களத்திற்கு பிறகு வீடே அமைதியாய் இருந்தது. சிவதாண்டவம் தன் மனதில் ஆயிரம் கவலைகள் சூழ மனைவியின் அருகில் அமர்ந்திருந்திருந்தார். மகன்களோ நடந்தவைகளை எல்லாம் மறந்து ஈஸ்வரியின் உடல்நலம் மட்டுமே முக்கியம் என்று கருதி பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

ஈஸ்வரியோ கண் விழித்ததும் கதிரை தேடினார். அவன் வந்து அருகில் அமர்ந்ததும்,அவன் தலையை மெல்ல கோதி விட்டு மற்ற மகன்களை பார்த்து ”இவன் உங்க தம்பிடா இவனை கண்டபடி பேச உங்களுக்கு எப்படி மனசு வருது? அப்பா பேசுறது வேற,நீங்க அப்படி நடந்துக்கிலாமா? நான் இருக்கும் போதே எல்லோருமா என் புள்ளையை இந்த பாடுபடுத்துறீங்களே?”

 

அவர் பேசியதை கேட்டு கண் கலங்கியபடி நின்றிருந்த மகன்களை பார்த்த சிவதாண்டவம்,“உடம்பை அலட்டிக்காதே ஈஸ்வரி………நான் பேசின கோவத்துல அவனுங்க அடிச்சிட்டானுங்க.இனி இது மாதிரி நடக்காது.நீ நல்லா தூங்கி ரெஸ்ட் எடுமா” என்றார்.

 

அனைவரும் அறையை விட்டு வெளியேற கதிர் மட்டும் தாயின் அருகில் இருந்து கொண்டான். தாண்டவம் மகன்கள் இருவரையும் தனது ஆபீஸ் அறைக்கு அழைத்து சென்றார். அங்கிருந்த சோபாவில் சற்று நேரம் கண்

 

மூடி அமர்ந்திருந்தார். அவரின் அமைதியை கலைக்கா வண்ணம் இருவரும் அவரின் முகத்தை பார்த்தபடியே உட்கார்ந்திருந்தனர்.

 

சிறிது நேரத்திற்கு பிறகு கண்ணை திறந்தவர் பெருமூச்சுடன்…இவன் ஏண்டா இப்படி இருக்கான் உங்களை மாதிரி இருந்து இருக்க கூடாதா? பாரு அவனை பத்தி நினைச்சு நினைச்சே அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போச்சு”என்றார் வேதனையுடன்.

 

“விடுங்கப்பா இன்னைக்கு நேத்தா பார்க்கிறோம்.எல்லாம் சரியா போகும்”என்றான் கந்தவேல்.சிறிது யோசனைக்கு பின்…”கந்தா இன்னைக்கு ஏத்த வேண்டிய சரக்கு எல்லாம் தயாரா” என்று கேட்டார் தாண்டவம்.

 

“ எல்லாம் பக்காவா ரெடி பண்ணியாச்சுப்பா.லாரியில ஏத்த வேண்டியது தான் பாக்கி”என்றான் கந்தவேல்.

 

குமாரின் பக்கம் திரும்பியவர்” பாதுகாப்பு எல்லாம் எப்படி குமாரு? இந்த முறை அந்த ஆர்ஜே பயலை ஓட ஓட விரட்டனும்.”

 

“அவன் எந்த எந்த இடத்தில் ஆளை இறக்கி இருப்பான், என்னென்ன பண்ணுவான்னு புரிஞ்சு பிளான் பண்ணி இருக்கோம் பா…இந்த முறை சரக்கு சரியா கை மாறிடும்.”

 

அவன் சொன்ன பதிலை கேட்டுக் கொண்டே நெற்றியை நீவியபடி…” இந்த முறை தப்பாச்சு.நமக்கு தொழிலில் விழுந்த மிகப் பெரிய அடியா தான் இருக்கும்.அதுக்கு விடவே கூடாது.ஒரு பொடிபய நம்ம கிட்ட விளையாட்டு காட்டிக்கிட்டு இருக்கான்”என்றார் தாண்டவம்.

 

அவர் கூறியவற்றை கேட்ட கந்தவேல் தலையை வேகமாக ஆட்டி”விட மாட்டோம் பா………நாங்க உங்க பசங்க முடிஞ்ச வரை அவனை இந்த முறை தூக்க பார்க்கிறோம்.”

 

“ம்ம்ம்ம்..சரி என்றவர்……..எத்தனை மணிக்கு சரக்கு எல்லாம் பாக்டரியை விட்டு கிளம்புது?”

 

 “பனிரெண்டரை மணிக்கு எல்லா வண்டியும் கிளம்பும்.ஒன்னு பின்னாடி ஒன்னு கிளம்பும். முன்னாடி என் காரும் பின்னாடி குமார் காரும் வரும்…….அங்கெங்கே இருக்கிற சின்ன சின்ன சந்துகளில் நம்ம ஆட்கள் இருப்பாங்க….இது கடற்கரைக்கு போகிற வரை.”

 

அவன் விட்டதை தொடர்ந்தான் குமார்” கடற்கரையில் போய் வண்டி எல்லாம் வரிசையா  நிறுத்திட்டு கொஞ்ச நேரம் வரை எந்த சத்தமும் இல்லாம எல்லோரும் வண்டியிலேயே இருப்போம்…….அங்கே  நம்ம ஆட்கள் முழுக்க காவலுக்கு இருப்பாங்க..சந்தேகப்படுற மாதிரி ஒரு ஆள் வந்தாலும் போட்டு தள்ளிகிட்டு போய் கிட்டே இருப்பாங்க….கொஞ்ச நேரத்துக்கு பிறகு நடு கடலில் போட்டோட சுத்தி கிட்டு இருக்கிற ஆட்கள் கரையை நோக்கி வருவாங்க……..அப்போ கீழே இருக்கிற ஆட்கள் மடமடன்னு லாரியை திறந்து உள்ளே இருக்கிற சரக்கு பெட்டிகளை எல்லாம் கீழே இறக்கி வச்சிட்டு போட் பக்கத்தில் வரும் வரை காத்திருப்பாங்க……

 

நான் இந்த இடத்தில் தான் ஆர்ஜே தன் ஆட்களோட வருவான்னு நினைக்கிறேன்…….அப்படி வந்தா அவனோட ஆட்களை எதிர்க்கிறதுக்கு தனியா ஒரு செட் ஆட்களை தயார் பண்ணி இருக்கேன்………..ஒரு பக்கம் சண்டை நடந்தாலும் பொருள் எல்லாம் போட்டில் ஏற்றி விட்டுடுவோம்…..போட்டில் ஏற்றி விட்டு ஒவ்வொரு போட்லையும் காவலுக்கு ஆறு ஏழு ஆட்கள் போய்டுவாங்க……….போட்ல சரக்கு ஏறினதுமே நாம கடலில் இருக்கும் கப்பலுக்கு விளக்கை காண்பிச்சிடனும் அப்போ அது நகர்ந்து வரவும் போட் கிட்ட போகவும் சரியா இருக்கும்.”

 

அவர்கள் சொன்னவற்றை கேட்ட சிவதாண்டவம் ..” நீங்க சொன்னவரை எல்லாம் சரியா தான் இருக்கு….ஆனா எனக்கு இந்த முறை ஒரு சந்தேகம் இருக்கு….ஆர்ஜே தானே களத்தில் இறங்குவான்னு.”

அவர் சொன்னத்தை ஆமோதித்து தலையை ஆட்டி” நானும் நினைச்சேன் பா.அவன் மட்டும் நேரில் வரட்டும்.நானே என் கையால அவனை தூக்குறேன்” என்றான் கந்தவேல்.

 

அவன் சொன்னதில்  இருந்த வந்த சஞ்சலம் நீங்க. வேகமாக எழுந்து வந்து மகனின் தோளில் தட்டி” நீ செய்வேன்னு தெரியும் கந்தா…ஆனா எல்லாவற்றையும் விட என் மகன்கள் பாதுகாப்பு எனக்கு முக்கியம் ஜாக்கிரதையா இருங்க” என்றார்.

 

அப்பொழுது குமார் அவரிடம் சென்று”நாங்க இந்த முறை சாதிப்போம் பா…உங்க சாம்ராஜ்யத்தை காப்பாத்த வேண்டியது புள்ளைகளான எங்க கடமை என்று சொல்லிவிட்டு……அப்பா இந்த கதிர்”என்று ஆரம்பித்தவனை கையை காட்டி நிறுத்த சொல்லிவிட்டு…..”நான் பார்த்துக்கிறேன்…நீங்க இப்போ இதில் மட்டும் கவனத்தை வைங்க, இப்போ கொஞ்ச நேரம் போய் ஓய்வு எடுங்க…மணி பத்து ஆச்சு….பதினொரு மணிக்காவது பாக்டரிக்கு போக வேண்டாமா?”சரி என்று சொல்லிவிட்டு மகன்கள் சென்ற பின் மெல்ல எழுந்து மனைவியை பார்க்க சென்றார். அங்கு தாயின் கைகளை பற்றியபடி கண் மூடி அமர்ந்திருந்த கதிரைப் பார்த்ததும் மனதில் மறைந்திருந்த கோவம் மீண்டும் தலைகாட்டத் தொடங்கியது.

 

அவனுங்க ரெண்டு பேரும் எவ்வளவு பொறுப்பா இருக்காங்க இவன் மட்டும் ஏன் இப்படி இருக்கான் என்ற ஆயாசம் எழுந்தது. அறைக்குள் சென்றால் மீண்டும் அவன் மேல் கோவப்பட்டு ஏதாவது பேசி விடுவோம் என்று எண்ணி அங்கிருந்த விருந்தினர் அறையில் சென்று படுத்து விட்டார்.

 

சரியாக ஒரு மணி நேரம் கழிந்த நிலையில் கந்தனும், குமாரும் தங்கள் அறையில் இருந்து கிளம்பி கீழே வந்தனர். அப்பா எங்கே என்று தேடி அம்மா இருந்த அறைக்குச் செல்ல அங்கே கதிரும், அம்மாவும் உறங்கி இருக்க, விருந்தினர் அறையை நோக்கி சென்றனர். கதவை தட்டலாம் என்று கையை வைக்கும் சமயம் தாண்டவமே வெளியே வந்தார்.அவர் ஒன்றும் பேசாமல் பூஜை அறையை நோக்கி நடக்க , மகன்களும் அமைதியாய் அவரை பின் தொடர்ந்து சென்றனர். அங்கு ஓரிரு நிமிடங்கள் கண் மூடி வேண்டி நின்ற தாண்டவம்…சில நொடிகளுக்கு பிறகு கண்ணை திறந்து மகன்களுக்கு விபூதி  கொடுத்து வெற்றியுடன் வருமாறு வாழ்த்தினார்..

 

அவர்கள் காரில் ஏறும் வரை கூடவே வந்து நின்றவர் மகன்களின் கார்கள் கேட்டை தாண்டும் வரை நின்று வழி அனுப்பி விட்டு வீட்டிற்குள் நுழைந்தார்.

 

தனித் தனி கார்களில் பாக்டரிக்கு வந்த கந்தவேலும், குமாரவேலும் உள்ளே சென்று சரக்குகள் வண்டியில் ஏற்றப்படுவதை மேற்பார்வையிட்டனர். ஒன்றரை மணி நேரம் கடந்து போன நிலையில் சரியாக அவர்கள் முடிவு செய்தபடி நான்கு சரக்கு லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக கிளம்பின.

 

கந்தவேல் முன்னே செல்ல நான்காவது லாரியின் பின் குமாரவேல் பின் தொடர அமைதியான அந்த இருட்டு நேரத்தில் லாரிகளின் ஊர்வலம் எந்த வித பிரச்சனையுமின்றி தொடர்ந்தது. ஒவ்வொரு சிறிய தெருக்களிலும் காவல் இருந்த தாண்டவம் ஆட்கள் அந்த தெருவை வண்டிகள் கடந்ததும் ..அவர்களும் குமாரவேலுவின் காரை பின் தொடர்ந்தனர். கிளம்பும் போது ஆறு வண்டிகளில் தொடங்கிய ஊர்வலம் முடியும் போது பதினைந்தாகி இருந்தது.

 

கடற்கரையில் வண்டிகள் நிறுத்தப்பட்டதும் கார்களில் பின் தொடர்ந்த ஆட்கள் மட மடவென்று இறங்கி லாரிகளின் அருகில் சுற்றி நின்று கொண்டனர். சிறிது நேரம் வரை அமைதியாக இருந்த இடம் திடீரென்று பலர் ஓடி வருவது போல தெரியவும், தாண்டவம் ஆட்கள் உஷாராகினர். குமாரவேல் பெருமிதத்துடன் தன் அண்ணனைப் பார்த்து” நான் சொன்னேன் இல்ல..அவன் இங்கே தான் ஆளை இறக்குவான்னு.” என்றான்.

 

அதற்குள் அங்கு பெரிய கலவர பூமியாக இரு தரப்பு ஆட்களும் மோதிக் கொள்ள,தாண்டவம் ஆட்களில் சிலர் லாரியிடம் ஆர்ஜேவின் ஆட்கள் நெருங்காதாவாறு பாதுகாப்பாக நின்று கொண்டனர். இதன் நடுவே கடலில் சுற்றிக் கொண்டிருந்த படகுகள் வந்து சேர, ஒரு பக்கம் சண்டை மற்றொரு பக்கம் லாரியில் இருந்த சரக்குகள் அவசரம் அவசரமாக படகுகளுக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்தன. கந்தவேலுவின் கண்களோ ஆர்ஜேவை தேடியது ஆனால் அவன் வந்ததற்கான அறிகுறி எங்கும் தென்படவில்லை.

 

படகுளில் சரக்குகள் ஏற்றப்பட்டு ஆட்களும் ஏறியதும் அங்கிருந்து விரைவாக நகர்ந்தன. கரையில் நடந்து கொண்டிருந்த சண்டையில் ஆர்ஜேவின் ஆட்கள் வெகுவாக சேதப்பட அவர்கள் மெல்ல பின் வாங்கினார்கள். அதை கண்டு கந்தவேலுவும் , குமாரவேலுவும் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டனர்…” சாதிச்சிடோம்ன்னு நினைக்கிறன் கந்தா” என்றான் குமாரவேலு.

 

அதற்கு” இதுல சந்தேகம் என்ன குமரா….சரக்கு கடலுக்கு போயாச்சு…ஆர்ஜேவோட ஆட்கள் ஓட ஆரம்பிச்சுட்டானுங்க…….நாம சாதிச்சிடோம்டா குமாரு” என்று சொல்லி அவனை பாய்ந்து தழுவிக் கொண்டான்.

 

அதன் பின் ஆர்ஜேவின் ஆட்கள் மொத்தமாக ஓடி விட அண்ணன் தம்பி இருவரும் தங்கள் ஆட்களை பார்த்து தங்கள் சந்தோஷத்தை தெரிவித்து விட்டு காரில் ஏறி அமர்ந்து சரக்கு கப்பலுக்கு மாறிய பிறகு போகலாம் என்ற எண்ணத்துடன் அமர்ந்திருந்தனர்.

 

படகுகள் கப்பலை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது……படகுகளுக்கும் கப்பலுக்கும் இருந்த தூரம் குறைந்து வரும் நேரம்……..திடீரென்று நான்கு புறங்களில் இருந்தும் ஸ்பீட் போட்களில் வந்து சுற்றி வளைத்தனர்.  கப்பல்களிடம் நெருங்கும் படகுகளை பெருமிதமாக பார்த்துக் கொண்டிருந்த கந்தனும், குமாரவேலுவும் அதிர்ந்து போய் காரை விட்டு இறங்கி கரையோரம் ஓடினர்…..

 

விசைப் படகுகளை சுற்றி வளைத்த ஆர்ஜேவின் கூட்டம் தங்கள் ஸ்பீட் போட்டில் இருந்து படகுகளுக்கு பாய்ந்து இறங்கி அங்கிருந்த ஆட்களை தாக்கி அவர்களை தூக்கி தண்ணீரில் வீசி விட்டு படகுகளில் இருந்த சரக்கு பெட்டிகளை தங்கள் போட்டிற்கு மாற்றினர். இவை அனைத்தும் அங்கு வந்த போட்களில் சற்று பெரிய போட்டில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ஆர்ஜேவின் முன்னிலையில் நடை பெற்றது. படைகளில் சண்டை நடக்கத் தொடங்கியதும் கப்பல் வேகமெடுத்து அங்கிருந்து கிளம்பி வெகு தூரம் சென்று விட்டது.

 

கந்தவேலும், குமாரவேலும் செய்வதறியாது இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். ஆர்ஜே வந்து நடுக்கடலில் தாக்குவான் என்று சற்றும் எதிர்பார்க்காததால் அவர்களிடம் படகுகளை கூட வைத்துக் கொள்ளவில்லை. அவர்களின் கண்முன்னே அனைத்து சரக்குகள் இடம் மாற்றபப்ட்டன. அனைத்தையும் மாற்றிய பின் ஸ்பீட் போட்கள் கிளம்ப…..ஆர்ஜேவின் போட் மட்டும் ஆள் இல்லாமல் இருந்த அனைத்து படகுகளையும் சுற்றி வந்தது. பிறகு ஓரிடத்தில் படகை நிறுத்தி விட்டு ஒவ்வொரு படகுகளிளும் இறங்கி பெட்ரோலை ஊற்றி விட்டு வந்து தன் போட்டில் ஏறிக் கொண்டான். அங்கிருந்த மெல்ல திரும்பி இவர்கள் இருவரையும் பார்த்து  கையசைத்து விட்டு ஒரு தீக்குச்சியை பற்ற வைத்து அதை படகுகளின் மேல் போட்டு விட்டு வேகமாக சென்றான்.

 

அவர்களின் கண்முன்னே சரக்கும் போய் படகுகளும் வெடித்து சிதற அதிர்ச்சியில் அப்படியே மண்ணில் அமர்ந்து விட்டனர். அந்த நேரம் கந்தவேலுவின் போன் அடிக்க..அதை பார்த்தவன் மனமோ பயத்தில் நடுங்க ஆரம்பித்தது……” அப்பா போன் பண்றாங்க குமாரு……..கிழிச்சிடுவேன்னு சொன்னேனடா…..இப்படி எல்லாத்தையும் ஏமாந்து போய் நிற்கிறோமேடா?” என்று வாய் விட்டு புலம்பினான்.

 

இருவரும் வீட்டிற்கு போக பயந்து அங்கேயே அமர்ந்திருக்க……தாண்டவமோ போன் விடாமல் இருவருக்கும் மாற்றி மாற்றி அடிக்க,ஒரு நேரம் பதில் சொல்ல இயலாமல் போனை ஸ்விட்ச் ஆப் செய்து  தூக்கி போட்டு அமர்ந்திருந்தனர்.

 

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9 | அத்தியாயம் – 10 |

 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...