வரலாற்றில் இன்று – 08.12.2019 – பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன்
பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன்
சுதந்திரப் போராட்ட வீரர் பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன் 1897ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி மத்தியப்பிரதேச மாநிலம் ஷாஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள பயானா கிராமத்தில் பிறந்தார்.
1920ஆம் ஆண்டு காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்தார். அதனால் இவர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு அதில் கலந்து கொண்டார்.
சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்தது. பாலகங்காதர திலகர், அன்னி பெசன்ட் அம்மையார் ஆகியோருடனும் இவருக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. இவர் சிறந்த பேச்சாளர். இவருடைய உணர்ச்சிமிக்க உரைகளால் மக்களிடையே விடுதலை உணர்வை ஏற்படுத்தினார். உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றார்.
இவரது ஊர்மிளா என்ற காவியம் பெரிதும் போற்றப்படும் இந்தி இலக்கியமாக இன்றளவும் திகழ்கிறது. 1960ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது பெற்றார். நாட்டின் சுதந்திரத்திற்கும், வளர்ச்சிக்கும் முன்னுரிமை கொடுத்து தொண்டாற்றியவரான பாலகிருஷ்ண சர்மா நவீன் 1960ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1864ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டது.
1976ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி இந்திய டென்னிஸ் வீராங்கனை நிருபமா வைத்தியநாதன் கோயம்புத்தூரில் பிறந்தார்.
1985ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி சார்க் அமைப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது.
2002ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி தமிழ் கவிஞர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான கு. இராமலிங்கம் மறைந்தார்.