நீயெனதின்னுயிர் – 8 – ஷெண்பா

 நீயெனதின்னுயிர் – 8 – ஷெண்பா
ஒரு நிலைக்கு மேல் தாள முடியாமல், கோபத்துடன் ஹோம் தியேட்டர் இருந்த அறைக்குள் நுழைந்த சீமா, இரு காதுகளையும் பொத்திக்கொண்டாள்.
“விக்ரம்! சிஸ்டம் வால்யூமை கம்மி பண்ணு; என் காது வலிக்குது. எனக்கு ஹாலில் உட்காரவே முடியலை; தலைவலி வந்திடும் போல இருக்கு” என்று ஏறக்குறைய கத்தினாள்.
அதைச் சற்றும் காதில் வாங்கிக்கொள்ளாமல், கைகளை பின்னந்தலையில் கோர்த்துக்கொண்டு, ஈசி சேரில் சாய்ந்து அமர்ந்திருந்தான் விக்ரம். கோபத்துடன் மியூசிக் சிஸ்டத்தின் ஃப்ளக்கைப் பிடுங்கி எறிந்தாள் சீமா.
சப்தம் நின்று போகவும் கண்களைத் திறந்தவன், “ஏய்! ஃப்ளக்கைக் போடு!” என்று கத்தினான்.
“சும்மா கத்தாதே. உனக்கு மட்டும் தான் கோபம் வருமா? எங்களுக்கு வராதா? கோபம் வந்தால், காரை எடுத்துக்கிட்டு ஊரை சுத்தணும், இல்லைன்னா மியூசிக் சிஸ்டத்தை அலற விடணும். உன் காதைச் செவிடாக்கிக்கணும்னா, நீ தனியா இருக்கும் போது ஆக்கிக்க; ஏன், எங்க எல்லோர் காதையும் சேர்த்து செவிடாக்குற? கேட்க ஆளில்லாமல் ஓரேடியா ஆடிட்டு இருக்க; இதெல்லாம் நல்லதில்ல… சொல்லிட்டேன்!” என்று இடைவெளி விடாமல் பேசினாள் சீமா.
விக்ரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்னடா! முறைக்கிற? உன் கூடச் சண்டை போட, எனக்கு இப்போ நேரம் இல்லை. சொல்ல வந்ததைச் சொல்லிட்டுக் கிளம்பறேன். அதுக்கு அப்புறம், இந்த வீடே இடிந்து தலையில் விழும் அளவுக்குச் சத்தமா வச்சிட்டு உட்கார்ந்திரு. நான், நைட் டின்னருக்கு வைஷாலியோடு வெளியே போறேன். வர லேட் ஆகும்; தேடாதே!” என்றவள் கதவை நோக்கி நடந்தாள்.
வைஷாலி என்றதும் நிதானத்திற்கு வந்தவனுக்கு, எந்த ஹோட்டல் என்று கேட்க வேண்டுமென்று துடித்த நாக்கை, அடக்குவது சிரமமாக இருந்தது. எழுந்து நின்றவன் தலையைக் கோதிக் கொண்டு, ‘இவளாவது வாயைத் திறந்து, நீயும் வான்னு ஒரு வார்த்தை சொல்றாளான்னு பாரு… ராட்சசி!’ என்று மனத்திற்குள் திட்டிக்கொண்டான்.
கைப்பையுடன் தன் அறையிலிருந்து வெளியே வந்தவள், ஹாலில் நின்றிருந்தவனைக் கடந்து சென்று, கார் சாவியை எடுத்தாள். விக்ரமின் இழுத்துப் பிடித்த பொறுமை பறந்து போனது. அவளை அழைக்க நினைக்கும் போதே, “விக்ரம்!” என்றபடி அவனை நோக்கித் திரும்பினாள்.
‘அவளது அழைப்பால், அவனுக்குள் ஆர்ட்டீஷியன் ஊற்றைப் போல் சந்தோஷம் பெருக்கெடுத்தது. இப்போதாவது கூப்பிடணும்னு தோணியிருக்கே, இந்தக் கூமுட்டைக்கு!’ என்று நினைத்துக் கொண்டவன், கனகாரியமாக முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அவளைப் பார்த்தான்.
‘என்கிட்டயேவா?’ என்று மனத்திற்குள் சிரித்துக் கொண்டவள், “நீ மத்தியானம் சாப்பிடாததால் மீந்த சாப்பாட்டை, ஃப்ரிட்ஜில் வச்சிருக்கேன். சாப்பிடணும்னு தோணினா, சூடு பண்ணிச் சாப்பிடு!” என்றாள். கைக்கடிகாரத்தைப் பார்த்தவள், “ஹய்யோ! மணியாகிடுச்சி, எட்டு மணிக்கு பீனிக்ஸ்ல டேபிள் புக் பண்ணியிருக்கேன். வரேன் விக்ரம்” என்று கிளம்பினாள்.
சீமாவும், வைஷாலியும் பேசிக்கொண்டே ஹோட்டலுக்குள் நுழைய, எதிர்பாராமல் ஒருவன் வைஷாலி மீது இடித்துக் கொண்டு வேகமாக வெளியேறினான்.
ஒரு நொடி தடுமாறி விழ இருந்தவளை, தாங்கிப் பிடித்துக் கொண்டாள் சீமா. “ஏய்! அறிவிருக்கா உனக்கு?” என்று கத்திய சீமாவை, திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றான் அவன்.
“உனக்கு ஒண்ணும் ஆகலையே வைஷாலி?” என்று பரிவுடன் கேட்டாள்.
“இல்லக்கா… ஐயம் ஓகே!” என்றபடி இடித்தவனின் முகத்தை நினைவில் கொண்டுவர முயன்றவளுக்கு, அவனை எங்கோ பார்த்திருக்கிறோம் என்று நினைவு வந்தது.
“என்ன சொன்ன… அக்காவா?” ஆச்சரியத்துடன் சீமா கேட்டதும் தான், தான் சொன்ன வார்த்தையையே உணர்ந்தாள் வைஷாலி.
“ஏன்… அக்கான்னு சொல்லக்கூடாதா? அப்போ, ஆன்ட்டீன்னு சொல்லட்டுமா?” என்று குறும்பு பேசினாள்.
செல்லமாக முறைத்த சீமா, “அது எதுக்கு? பாட்டின்னு கூப்பிடு, இன்னும் பொருத்தமா இருக்கும்” என்றாள்.
“உங்க ஆசை அதுதான்னா, அப்படியே கூப்பிடுறேன்!” என்று குறும்பாய் பதில் சொன்னாள் வைஷாலி.
“உன்னை… சரியான அறுந்தவாலு!” என்று முதுகில் தட்ட, சிரிப்புடன் இருவரும் தங்களுக்காக ரிசர்வ் செய்திருந்த டேபிளுக்குச் சென்று அமர்ந்தனர்.
ஆர்டர் எடுக்க வந்த வெய்ட்டரிடம், “ஒரு பத்து நிமிடம் கழித்து வாங்க; ஒருத்தர் வரணும்” என்றாள் சீமா.
“யாருக்கா? உங்க ஃப்ரெண்ட்ஸ் யாராவது வராங்களா?” என்று கேட்டாள் வைஷாலி.
“ஆமாம். முக்கியமான வி.ஐ.பி.” என்று புன்னகைத்தாள்.
தோளைக் குலுக்கிய வைஷாலி, “என்னிடம் ஏதோ பேசணும்னு சொன்னீங்க. ஆனால், இது வரைக்கும் என்ன விஷயம்னு சொல்லவேயில்லையே?” என்றாள்.
அதுவரை எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்ற தவிப்பை வெளிக்காட்டாதிருந்த சீமா, தனக்குச் சாதகமான அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டாள்.
“நீ… நீ… விக்ரமை உனக்குப் பிடிக்குமா வைஷாலி?” கேட்டுவிட்ட போதிலும், ‘இதை எப்படி எடுத்துக் கொள்வாளோ?’ என்று சீமாவிற்கு உள்ளுக்குள் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது.
சற்று அசட்டையாக இருந்த வைஷாலி, நிமிர்ந்து அமர்ந்தாள். கண்கள் மின்ன, “நிச்சயமா! எனக்கு விக்ரம் சாரை ரொம்பவே பிடிக்கும்” என்றாள் உற்சாகமாக.
தடுமாறித் திணறுவாள், மழுப்புவாள் என்று நினைத்திருந்த சீமாவிற்கு, அவளது வெளிப்படையான பதில் ஆச்சரியமூட்டியது. “பிடிக்கும்ன்னா, ஏன் பிடிக்கும்? எதுக்குப் பிடிக்கும்?” என்று ஆர்வத்துடன் கேட்டாள்.
“பிடிக்கும்னா பிடிக்கும். ஏன் எதுக்குன்னு காரணமெல்லாம் சொல்லத் தெரியாது. சிலரைப் பார்த்ததும், நமக்குப் பிடிக்காமல் போயிடும். ஆனால், ஏன்னு கேட்டா, நமக்கு அதுக்கான காரணம் தெரியாது. இதுவும் அப்படித்தான்” என்ற வைஷாலி, புன்னகைத்தாள்.
“இன்னைக்கு நடந்த ஒரு விஷயத்தை உனக்குச் சொல்றேன்; உன் மனசுல பட்டதைச் சொல்லு!” என்றவள், “உனக்கு விக்ரமோட செக்ரெட்டரி ராகவைத் தெரியும் தானே?”
“ம், தெரியும்” என்றாள்.
“இன்னைக்கு, அவங்க ரெண்டு பேருக்குள்ளும் ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் ஆகிப்போச்சு…” என்றவள் விக்ரம் சொன்னவற்றையும், அதன் பிறகு நடந்தவற்றையும் சொல்ல, வைஷாலி இமைக்காமல் கேட்டுக் கொண்டாள்.
“நான் ஏத்தனையோ முறை சொல்லியிருக்கேன். ஆனா, இவன் கேட்டால் தானே. ராகவ் இவனுக்குப் பர்சனல் செக்ரெட்டரி தான். அதுக்காக, அவனோட பர்சனல் லைப்ல விக்ரம் நுழையலாமா? ராகவுக்குப் ஃபோன் செய்து கேட்டதும், அவன் என்ன மூடில் இருந்தானோ தெரியாது, டக்குனு என் குடும்ப விஷயத்தில் நீங்க தலையிடாதீங்கன்னு சொல்லிட்டான்” என்று சீமா சொன்னதைக் கேட்டு திகைத்துப் போனாள் வைஷாலி.
“யாராக இருந்தாலும், அவங்களோட சொந்த விஷயத்தைக் கேட்டா கோபம் வரத்தானே செய்யும்? உடனே சாருக்கு மூக்குக்கு மேல கோபம் வந்திடுச்சி.  காரை எடுத்துட்டு வெளியே போயிட்டான். போனையும் சைலண்ட்ல போட்டுட்டாச்சு. ஈவ்னிங் வீட்டுக்கு வந்தவன், மியூசிக் சிஸ்டத்தை அலறவிட்டுட்டு உட்கார்ந்திருக்கான். என்னால் தாங்க முடியலை.
கோபம்… நினைச்சதை செய்யணும்ங்கற பிடிவாதம்… இதெல்லாம் எங்கே போய் முடியும்னு தெரியலை. அவனோட மனசுல என்ன இருக்குன்னு சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது. அவன் நல்லவன் தான்; ஆனால், இந்த மாதிரிக் குணம் இருந்தால் கல்யாணத்துக்குப் பிறகு, இவன் எப்படி இருப்பானோன்னு நினைச்சாலே, சில சமயம் ரொம்பப் பயமா இருக்கு!” என்றாள் கவலையுடன்.
வைஷாலி சட்டெனச் சிரித்தாள். “சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க, அவரோட வாழ்க்கைல உங்களுக்கு இருக்கும் அக்கறை, நிச்சயமா பாராட்டப்பட வேண்டியது. ஆனால், நீங்க அநாவசியமா கவலைப்படறீங்கன்னு நினைக்கிறேன். அவர், ராகவோட குடும்பத்தைத் தன் குடும்பமாக நினைத்ததால் தான் உரிமையா கேட்டிருக் கார்!” என்றாள்.
“நல்லவேளை, நீயாவது என்னைப் புரிஞ்சிட்டு இருக்கியே… தேங்க்ஸ் வைஷாலி!” என்றபடி அவளருகிலிருந்த இருக்கையில் வந்தமர்ந்தான் விக்ரம்.
புன்னகையுடன், “ஹலோ சார்!” என்றாள்.
“நீ எங்கே இங்கே வந்த?” சிடுசிடுத்தாள் சீமா.
“சாப்பிடத்தான். ஏன்? என் இமேஜை இன்னும் டேமேஜ் பண்ணமுடியாமல் போச்சேன்னு கவலையா உனக்கு?”
“உன்கிட்ட எனக்கென்ன பயம்? நீ இருக்கும் போதே சொல்வேன்…” – வீம்புடன் சொன்னவள், “உனக்குத் தான் சாப்பாட்டை ஃப்ரிட்ஜ்ல வச்சிட்டு வந்தேனே…?”
“எனக்கு, ஹோட்டல்ல சாப்பிடணும் போல இருந்தது.”
“அதுக்கு இதே ஹோட்டலுக்கு வந்து, நான் ரிசர்வ் பண்ணின டேபிளுக்கே வந்து உட்காரணுமா?” என்றாள்.
இருவரது செல்லச் சண்டையையும் பார்த்த வைஷாலிக்கு, சிரிப்பாக வந்தது. அவர்களது பேச்சில், மருந்துக்குக் கூடத் தீவிரமில்லை என்று புரிந்த போதும், ஒருவரையொருவர் விடாமல் வம்பிழுப்பதை, ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நான் உன்னைப் பார்த்தா வந்தேன்? வைஷாலியைப் பார்த்து வந்தேன்” என்றவன், “ஏன் வைஷாலி, நான் உன்னோடு சேர்ந்து சாப்பிடக்கூடாதா?” என்று கேட்டான்.
“அதுக்கென்ன சார்… தாராளமா!” என்று உற்சாக மாகச் சொன்னவள், சீமாவைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தாள்.
“வைஷாலி! நீ என் பக்கமா இல்லை, அவன் பக்கமா?” என்றாள்.
‘இது இப்போதைக்கு முடியாது போலிருக்கே!’ என்று நினைத்தவள், “நானா… நடுவுல கொஞ்சம் காணாமல் போன பக்கம்!” என்று நொந்தபடி சொன்னாள்.
விக்ரம் சிரிப்பை அடக்கியபடி, “சீமா! அவளை எதுக்கு நீ வம்புக்கு இழுக்கற? என்கிட்ட பேசு” என்றான்.
“டிரீட் கொடுக்கறேன்னு சொல்லி, அவளைக் கூட்டிட்டு வந்தது நான். பில் நான்தான் பே பண்ணணும். ஞாபகம் வச்சுக்க” -செல்லமாக மிரட்டினாள் சீமா.
“ஏன், நான் டிரீட் கொடுக்கமாட்டேனா? இல்லை, பில்லுக்குப் பணம் கொடுக்கமாட்டேனா?” என்றான் வீராப்பாக.
“யார் சொன்னது நீ கொடுக்கமாட்டேன்னு! இப்போ மட்டும் என்ன, நீ தானே பில்லுக்குப் பணம் கொடுக்கப்போற!” என்று சிரிக்காமல் சொன்னாள் சீமா.
அவளது பதிலைக் கேட்ட விக்ரம், ‘அடிப்பாவி! இதுக்கா இத்தனை பில்டப் உனக்கு?’ என்பது போல் பார்க்க, அவனது முகம் போன போக்கைப் பார்த்து, பெண்கள் இருவரும் அடக்கமாட்டாமல் சிரித்தனர்.
புன்னகைத்தபடியே திரும்பிய சீமா, திகைத்த பார்வையுடன் தங்களையே பார்த்துக்கொண்டிருந்த ராகவைப் பார்த்ததும், “ஹாய் ராகவ்!” என்று கையசைக்க, விக்ரமும், வைஷாலியும் ஒருசேரத் திரும்பிப் பார்த்தனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...