‛நெல்லை டூ அயோத்தி ராமர் கோவில்’ சுற்றுலா ரயில் அறிமுகம்..!

 ‛நெல்லை டூ அயோத்தி ராமர் கோவில்’ சுற்றுலா ரயில் அறிமுகம்..!

திருநெல்வேலியில் இருந்து திருச்சி வழியாக புண்ணிய தீர்த்த யாத்திரை என்ற பெயரில் உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசி வரை சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 9 நாள் பயணத்துக்கான இந்த சுற்றுலா ரயில் அடுத்த மாதம் 6ம் தேதி பயணத்தை தொடங்குகிறது.

இந்தியாவில் பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு பொதுமக்கள் சென்று வர வசதியாக சுற்றுலா ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பிரத்யேகமாக பாரத் கவுரவ் சுற்றுலா ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தான் நெல்லையில் இருந்து திருச்சி வழியாக உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி வரை சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மொத்தம் 9 நாட்கள் ஆன்மிக சுற்றுலா பயணத்தை மேற்கொள்ள உள்ளது. விரும்பும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து ரயிலில் பயணிக்கலாம்.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐஆர்சிடிசியானது சுற்றுலா பயணிகளுக்காக பிரத்யேக பாரத் கவுரவ் சுற்றுலா ரயிலை அறிமுகம் செய்துள்ளது. இதில் 11 ஸ்லீப்பர் கோச்சுகள் உள்பட 14 பெட்டிகள் உள்ளன.

பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் ஐஆர்சிடிசி தென்மண்டலம் சார்பில் நெல்லையில் இருந்து புண்ணிய தீர்த்த யாத்திரை என்ற பெயரில் சுற்றுப்பயணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா ரயில் நெல்லையில் இருந்து தொடங்கி கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் மற்றும் சென்னை வழியாக காசி, திரிவேணி சங்கமம் (பிரயாக்ராஜ்), கயா மற்றும் அயோத்யா ஆகிய புண்ணிய தலங்களுக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 9 நாட்களுக்கான (8 இரவுகள்) சுற்றுப்பயணம் அடுத்தமாதம் (ஜுன்) 6ம் தேதி தொடங்குகிறது. இதில் ஒரு நபருக்கு டிக்கெட் கட்டணமாக ரூ.18,550 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான கட்டணம் என்பது
ரூ.17,560 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின்போது அயோத்தி ராமர் கோவில், சராயு ஆறு, பிரக்யாராஜில் உள்ள திரிவேணி சங்கமம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாத் கோவில் காசி விசாலாக்சி கோவில், சார்நாத், கயாவில் உள்ள விஷ்ணு பாத் கோவில்களை பயணிகள் பார்வையிடலாம். மத்திய, மாநில மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் இந்த சுற்றுலா ரெயிலில் பயணித்தால் எல்டிசி சான்றிதழ்களை பெறலாம்.

மேலும் தகவல்களுக்கு www.irctctourism.com என்ற இணையதள முகவரி சென்று Bharat Gaurav Train என்பதை கிளிக் செய்து கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ளலாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...