திருவொற்றியூர் வடிவுடையம்மன் அம்மன் கோயில் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்..!
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் உள்ள வட்டப்பாறை அம்மன் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் வட்டப்பாறை அம்மன் மிக முக்கியமான ஒரு அம்மனாக திகழ்கிறார். சோழர் காலத்தில் கோயில் விரிவாக்கப்பட்டபோது வடக்கு நோக்கி வதம் செய்வது போன்று அம்மன் சிலை அமைக்கப்பட்டு யானை வடிவில் விமானம் அமைக்கப்பட்டு இருப்பது மிக விசேஷமாக பார்க்கப்படுகிறது.
இந்த கோயிலில் வட்டப்பாறை அம்மனின் உற்சவம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. நேற்று (மே. 1) கோயில் பிரகாரத்தில் உள்ள வட்டப்பாறை அம்மன் சன்னதி வாசலில் பூசாரிகள் யாக குண்டம் அமைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இதையடுத்து கொடிமரத்திற்கு மஞ்சள், சந்தனம், பால் உள்ளிட்டவை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் பக்தர்கள் முன்னிலையில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து அம்மன் விமான பல்லாக்கி நான்கு மாட வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், இந்நிகழ்வில் வரும் 7-ம் தேதி வரை வட்டப்பாறை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் உற்சவர் நான்கு மாட வீதிகளில் சுவாமி வீதி உலா உற்சவம் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது.