இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதிகமாக இருக்கும்-இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. பல மாவட்டங்களில் வெயில் சதமடிக்கிறது.
இந்தியாவில் மகாராஷ்டிரா, மும்பை போன்ற மாநிலங்கள் கடும் வெயிலில் வதைகின்றன. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் இயல்பை விட இந்தாண்டு தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 5 முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 106 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் ஜூன் 8 ஆம் தேதிக்குள் மழை வர வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் மட்டும் இயல்பைவிட குறைந்த அளவு மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழை காலத்தின் ஆரம்பப் பகுதியில் எல் நினோ காலநிலை நிகழ்வு வலுவிழக்கும், அதே வேளையில் ஏற்கெனவே பலமிழந்திருந்த எல் நினோ காலநிலை நிலவரம் வளர்ச்சி பெரும்போது பருவமழைக்கு உதவியாக இருக்கும். இதனால் பருவமழை சராசரிக்கும் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த 22 எல் நினோ ஆண்டுகளில், பெரும்பாலானவற்றில் இந்தியாவில் சராசரி அல்லது அதற்கு அதிகமான அளவே பருவமழை பெய்துள்ளது. 1974 மற்றும் 2000-ஆம் ஆண்டுகளில் மட்டுமே இது பொய்த்து சராசரிக்கும் குறைவாக மழை பெய்துள்ளது என்று ஐஎம்டி மேற்கோள் காட்டியுள்ளது.