மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கோலகலமாக தொடங்கியது..!

 மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கோலகலமாக தொடங்கியது..!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும், சித்திரை மாதம் நடைபெறக்கூடிய சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி, உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பக்தர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருவிழாவாக சித்திரை திருவிழா அமைந்துள்ளது.

இந்த ஆண்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா, ஏப்ரல் 12 முதல் 23-ம் தேதி வரை 12 நாட்கள் கொண்டாடப்படவுள்ள நிலையில், இன்று சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. கோயில் கம்பத்தடி மண்டபத்தின் அருகேயுள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடி மரத்தில் தர்ப்பை புற்களால் அலங்கரிக்கப்பட்டு, வெண்பட்டுகள் சுற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கல வாத்தியங்கள் இசைக்க, தங்கக் கொடிமரத்தில் உற்சவ கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக கொடிமரத்தின் முன்பாக மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் சுவாமிக்கும், அம்மனுக்கும் பல்வேறு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து திருவிழா நாட்களில், தினமும் காலை, மாலை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் பரிவார மூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பட்டு, 4 மாசி வீதிகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். ஏப்ரல் 19-ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும், 20-ம் தேதி திக் விஜயமும், விழாவின் சிகர நிகழ்ச்சியாக 21-ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 22-ம் தேதி மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.

அதேபோல் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 19 முதல் 28-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. ஏப்ரல் 21-ம் தேதி தேதி மாலை 6.10 மணி முதல் 6.25 மணிக்குள் கள்ளழகர் அழகர் மலையிலிருந்து மதுரையை நோக்கி புறப்படுகிறார். ஏப்ரல் 22-ம் தேதி காலை மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்வு நடைபெறுகிறது. ஏப்ரல் 23-ம் தேதி அதிகாலை 5.51 மணியிலிருந்து 6.10 மணிக்குள் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது. தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்வும் நடைபெறுகிறது.

ஏப்ரல் 24-ம் தேதி தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பார். அதனைத் தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய கள்ளழகர் தசாவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஏப்ரல் 25-ம் தேதி மோகினி அவதாரத்தில் எழுந்தருளும் கள்ளழகர், பிற்பகல் ராஜாங்க அலங்காரத்தில் எழுந்தருளி சேதுபதி மண்டபத்திற்குப் புறப்படுவார். ஏப்ரல் 26-ம் தேதி அதிகாலை பூ-பல்லக்கில் எழுந்தருளும் கள்ளழகர், அழகர் மலையை நோக்கி புறப்படுவார். ஏப்ரல் 27-ம் தேதி காலை 10.32 மணி முதல் 11 மணிக்குள் கள்ளழகர் அழகர் மலைக்கு வந்தடைவார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...