“பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை..!
மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியானது.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவருமான ப.சிதம்பரம் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
“காலத்தை கை வெல்லும்” என்ற லட்சினையுடன் நியாய பத்திரம் என்ற பெயரில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 48 பக்கங்கள் கொண்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முகப்பில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் புன்னகையுடன் கை அசைக்கும் படம் இடம் பெற்றுள்ளது. அதன் கீழ் பகுதியில், பொதுமக்கள் மத்தியில் ராகுல்காந்தி நடைபயணமாக சென்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில், விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கான முக்கிய வாக்குறுதிகள் மற்றும் இலவச திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது?
காங்கிரஸைப் பொறுத்தவரை, அதன் தேர்தல் அறிக்கையானது கட்சியின் ஐந்து நீதிக் கொள்கைகளான ‘ சமூக நீதி’, ‘விவசாயிகள் நீதி’, ‘பெண்கள் நீதி’, ‘தொழிலாளர் நீதி’ மற்றும் ‘இளைஞர் நீதி’ ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. ‘இளைஞர் நீதி’யின் கீழ் கட்சி பேசிய ஐந்து உத்தரவாதங்களில், 30 லட்சம் அரசு வேலைகள் வழங்குவதாகவும், ஓர் ஆண்டுக்கு தொழிற்பயிற்சித் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்குவதாகவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
சமூக நீதி
‘சமூக நீதி’யின் கீழ் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கும், 50 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்தப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ளது.
விவசாயிகளுக்கு…
குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP), கடன் தள்ளுபடி கமிஷன் உருவாக்கம் மற்றும் ‘கிசான் நியாய்’ திட்டத்தின் கீழ் GST இல்லா விவசாயம் ஆகியவற்றுக்கு சட்டபூர்வமான அந்தஸ்து அளிப்பதாக காங்கிரஸ் உறுதியளித்துள்ளது.
தொழிலாளர்களுக்கு…
தொழிலாளர்களுக்கு சுகாதார உரிமையை வழங்குவதாகவும், நாளொன்றுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ 400 மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை உறுதி செய்வதாகவும் காங்கிரஸ் உறுதியளித்துள்ளது.
பெண்களுக்கு….
‘நரி நியாய்’ திட்டத்தின் கீழ், ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு, ஆண்டுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வழங்குவது உட்பட, பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.