வைரலாகும் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி..!
நீட் தேர்வு கட்டாயமில்லை, நீட் மற்றும் க்யூட் தேர்வுகள் மாநிலத்தின் விருப்பத்திற்கு உட்பட்டது என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவருமான ப.சிதம்பரம் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
“காலத்தை கை வெல்லும்” என்ற லட்சினையுடன் நியாய பத்திரம் என்ற பெயரில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 48 பக்கங்கள் கொண்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முகப்பில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் புன்னகையுடன் கை அசைக்கும் படம் இடம் பெற்றுள்ளது. அதன் கீழ் பகுதியில், பொதுமக்கள் மத்தியில் ராகுல்காந்தி நடைபயணமாக சென்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில், விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கான முக்கிய வாக்குறுதிகள் மற்றும் இலவச திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் மற்றும் க்யூட் தேர்வுகள் மாநிலத்தின் விருப்பத்திற்கு உட்பட்டது என்றும், 2025 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை கொண்டு வரப்படாது, தேசிய கல்விக்கொள்கை மாநில அரசுகளின் ஆலோசனைக்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்படும் உள்ளிட்டவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சங்களாக உள்ளன.