இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.11.2024)

 இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.11.2024)

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாளின்று

குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை மற்றும் பாகுபாடு, அதிகார வன்முறை, கருச்சிதைவு, பால்ய விவாகம் என பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் களைத் தடுக்கும் முயற்சியாகக் கொண்டு வரப்பட்டதே ‘சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்’. இது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 25-ந் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்ணுரிமை காப்பது, பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பது மற்றும் கண்டிப்பது, பெண்களின் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவற்றை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் 90 சதவிகிதம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், உடன் இருப்பவர்கள், பணியிடம் மற்றும் பயிலும் இடங்களில் உள்ளவர்களால் ஏற்படுகிறது என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. நாட்டின் முன்னேற்றம், தனிப்பட்ட குடும்பத்தின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. குடும்பத்தின் முன்னேற்றம், அதில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தில் அடங்கியுள்ளது. இதை உணர்ந்து, வருங்கால தலைமுறைக்குப் பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தை புரியவைத்து வளர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு நல்லவற்றை போதித்து வளர்ப்பதில் பெரும்பங்கு தாயைச் சார்ந்தது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தவிர்ப்பது, பெண்களை மதித்து நடப்பது போன்றவற்றை, ஆண் குழந்தைகளுக்கு பெண்கள் தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். மாற்றத்துக்கான செயல்பாடு நம்மிடம் இருந்தே தொடங்கட்டும்.

பிடல் காஸ்ட்ரோ நினைவு தினம்

கியூபாவின் தலைவர் பிடல் காஸ்ட்ரோ 1926-ம் ஆண்டுஆகஸ்ட் 13ம் தேதி பிறந்து 2016-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி மறைந்தார். கியூபாவில் அவர் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம். 1959-ல் புரட்சி மூலம் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தினார். 1959 முதல் 1976 வரை கியூபா பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை அதிபராகவும் பதவி வகித்தார். கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். உலகிலேயே 49 ஆண்டுகள் ஒரு நாட்டை ஆட்சி செய்தவர் என்ற பெருமை பிடல் காஸ்ட்ரோவை மட்டுமே சேரும். அமெரிக்க அரசு கியூபாவை தன் பக்கம் இழுக்க பார்த்தது. ஆனால், கியூபாவின் வளங்கள் எல்லாம் கியூபா மக்களுக்கே சொந்தம் என்று பிடல் உறுதியாக இருந்தார். கல்வி, மருத்துவம் இலவசம் என்று சமூக புரட்சியை ஏற்படுத்தினார்.

பிரபல வயலின் கலைஞர் துவாரம் வெங்கடசாமி நாயுடு (Dwaram Venkataswamy Naidu) நினைவு தினம் இன்று (நவம்பர் 25).

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1893 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் நாள் தீபாவளி நன்னாளில் பிறந்தார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வளர்ந்தார். தந்தை இசைஞானம் உள்ளவர். வயலின் வாசிப்பார். அண்ணன் வெங்கடகிருஷ்ணய்யா, வயலின் வித்வான். வீட்டில் அடிக்கடி நடக்கும் பஜனையில் வெங்கடசாமி பாடுவார். பார்வைத் திறன் குறைந்த இவரை மாணவர்கள் கேலி செய்ததால், இவரது பள்ளிப் படிப்பைத் தந்தை நிறுத்திவிட்டார். சிறுவனுக்கு வயலின் வாசிப்பதில் இருந்த ஆர்வத்தை அறிந்த அண்ணன், தானே முதல் குருவாகி தம்பிக்குக் கற்றுக்கொடுத்தார். வயலினை இவர் அனாயாசமாக கையாள்வதைக் கண்ட அண்ணன், இவரது இசை ஞானத்தை வளர்க்க வீணை சேஷண்ணா, சங்கமேஸ்வர சாஸ்திரி, கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர் உள்ளிட்ட பிரபல வித்வான்களின் கச்சேரிகளுக்கு அழைத்துச் சென்றார். அவற்றைக் கேட்டும், பயிற்சி செய்தும் தன் இசை ஞானத்தைப் பட்டை தீட்டிக்கொண்டார் வெங்கடசாமி. விஜயநகரம் மஹாராஜா இசைக் கல்லூரியில் இசைப்படிப்பில் சேர 1919-ஆம் ஆண்டில் விண்ணப்பித்தார். நேர்முகத் தேர்வில் இவரது வயலின் வாசிப்பைக் கேட்ட கல்லூரி நிர்வாகம் இவரை கல்லூரிப் பேராசிரியராகவே நியமித்தது. சென்னையில் 1927-ஆம் ஆண்டில் காங்கிரஸ் மாநாட்டையொட்டி நடந்த இசை மாநாட்டில் வாசித்தார். காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளை, அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், பல்லடம் சஞ்சீவிராவ், முசிறி சுப்பிரமணிய ஐயர் ஆகியோருக்குப் பக்கவாத்தியம் வாசித்தார். பார்வையற்றோர் நல நிதிக்காக பல கச்சேரிகள் நடத்தியுள்ளார். அகில இந்திய வானொலியிலும் பல நிகழ்ச்சிகளில் வாசித்துள்ளார். ஏராளமான இசைத்தட்டுகள் வெளியானதால் பிரபலமடைந்தார். கர்னாடக இசையை அதன் பாரம்பரியத் தன்மை மாறாமல் கையாண்டவர். தனக்கென தனி பாணியை வகுத்துக்கொண்டவர். தனி வயலின் கச்சேரி நடத்திய முதல் கலைஞர் இவர்தான். இவரது முதல் தனிக் கச்சேரி 1938-ஆம் ஆண்டில் வேலூரில் நடந்தது. விஜயநகரம் மஹாராஜா கல்லூரி முதல்வராக 1936-ஆம் ஆண்டில் ல் பொறுப்பேற்றார். இசை குறித்து பல கட்டுரைகளை எழுதியுள்ளார். தனது மாணவர்களுக்கு நண்பனாக, வழிகாட்டியாக, தத்துவ ஆசானாகவும் திகழ்ந்தார். மாணவர்கள் தினமும் பயிற்சி செய்யவேண்டும் என்று வலியுறுத்துவார். ‘பயிற்சியை ஒருநாள் விட்டால், உங்கள் தவறுகளை நீங்களே கண்டுபிடித்துவிடலாம். 2 நாட்கள் விட்டால், உங்கள் தவறுகளை இரசிகர்கள் கண்டுபிடிப்பார்கள்’ என்பார். சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி, பத்ம ஸ்ரீ உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். ஆந்திரப் பல்கலைக்கழகம் ‘’கலா ப்ரபூர்ண’’ என்ற கவுரவ முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. இப்பட்டம் பெற்ற முதல் இசைக் கலைஞர் இவர். இந்திய மக்களுக்கு சரஸ்வதியின் கொடையாக கிடைத்தவர் இவர் என்றார் சக்கரவர்த்தி ராஜகோப்லாச்சாரியார். இசைக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட துவாரம் வெங்கடசாமி நாயுடு 1964-ஆம் ஆண்டு ஆந்திர சங்கீத நாடக அகாடமி விழாவுக்காக ஹைதராபாத் சென்றபோது மாரடைப்பால் காலமானார். அப்போது அவருக்கு வயது 71. இவரது பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு 1993-ல் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

ஒரு பேரழிவுப் புயல், கொரிங்கா என்ற துறைமுக நகரைத் தாக்கிய நாள்

புயலைக் குறிக்க, சைக்ளோன் என்ற ஆங்கிலச் சொல் உருவாகக் காரணமான ஒரு பேரழிவுப் புயல், கொரிங்கா என்ற துறைமுக நகரைத் தாக்கிய நாள் நவம்பர் 25. இந்தப் புயலின் பேரழிவுக்குப்பின் மீண்டெழ முடியாத அந்நகரம் இன்று ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஒரு சிறு கிராமமாக எஞ்சியுள்ளது. காற்றின் வேகம் போன்றவை கணிக்கப்பட்டாத இந்தப் புயலின்போது 40 அடி உயரத்திற்கு நீர்மட்டம் உயர்ந்து, கப்பல்களும், படகுகளுமாக சுமார் இருபாதாயிரம் கலங்கள் நகருக்குள் அடித்துவரப்பட்டன. உலகம் முழுவதும் இதுவரை ஏற்பட்டுள்ள வெப்பமண்டலப் புயல்களில், மூன்றாவது மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய இந்தப் புயலில் சுமார் 3 லட்சம் பேர் உயிரிழந்தனர். 1881இல் வியட்னாமில் 3 லட்சம் பேரை பலிவாங்கிய ஹைஃபோங் சூறாவளியியும் இதற்கிணையாக மூன்றாவது இடத்தில் குறிப்பிடப்படுகிறது. உலகம் முழுவதும் இதுவரை ஏற்பட்டுள்ள, மிக அதிக உயிர்ப் பலிகொண்ட 10 புயல்கள், சூறாவளிகள் முதலானவற்றில், 7 வங்காள விரிகுடாவில்தான் ஏற்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பாக, 1789இல் கொரிங்காவைத் தாக்கிய ஒரு பெரும் புயலில் சுமார் 20 ஆயிரம் பேர் பலியானாலும், மீண்டெழுந்த அந்தத் துறைமுக நகரம், 1839 புயலுக்குப்பின் (தனுஷ்கோடியைப் போன்று!), மறுகட்டுமானம் செய்யப்படாமல் சிறிய கிராமமாக சுருங்கிப்போனது. இப்பகுதியில் ஏற்படும் புயல்களைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை ஜர்னல் ஆஃப் த ஆஷியாட்டிக் சொசைட்டிக்கு எழுதியபோதுதான், ஹென்றி பிடிங்டன், சைக்ளோன் என்ற சொல்லை உருவாக்கினார். ஆங்கிலேய வணிகக் கப்பல் தளபதியாக வங்கத்திற்கு வந்த இவர் அங்கேயே தங்கியதுடன், புயல்களில் சிக்கிய பல கப்பல்களை ஆய்வு செய்து, புயலின் மையப்பகுதி அமைதியாக இருப்பதாகவும், அதன் வெளிப்பகுதி புவியின் தெற்கு அரைக்கோளத்தில் கடிகாரச் சுற்றிலும், வடக்கு அரைக்கோளத்தில் எதிர்ப்புறமாகவும் சுழல்வதைக் கண்டறிந்தார். பாம்பு உடலைச் சுற்றுவதுபோல என்பதைக் குறிக்க சைக்ளோன் என்ற சொல்லை உருவாக்கிய இவர், புயல்களை மாலுமிகள் எதிர்கொள்ள வழிகாட்டும் நூலையும் எழுதினார். வங்கத்தின் நிலவியல் அருங்காட்சியக் காப்பாளராகவும் இருந்த பிடிங்டன், புயலால் தாக்கப்படும் வாய்ப்புகள் அதிகமென்பதால், கல்கத்தாவின் தென்கிழக்குப் பகுதியில் துறைமுகம் அமைக்க வேண்டாமென்று அறிவுறுத்தினாலும், 1858இல் அவர் மறைவுக்குப்பின் அமைக்கப்பட்ட அத்துறைமுகம் 1867இல் ஏற்பட்ட புயலில் அழிந்ததும் குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தின் கடைசிப் படைகள் அமெரிக்காவைவிட்டு வெளியேறிய நாள்

1783 – இங்கிலாந்தின் கடைசிப் படைகள் அமெரிக்காவைவிட்டு வெளியேறிய நாள் இங்கிலாந்தால் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட 13 குடியேற்றங்களுக்கும், இங்கிலாந்துக்கும் 1775இலிருந்து 1783 வரை நடந்த போர் அமெரிக்க புரட்சிப் போர் அல்லது அமெரிக்க விடுதலைப்போர் என்று அழைக்கப்படுகிறது. ஃபிரான்சு, ஸ்பெயின், நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவில் குடியேற்றங்களை ஏற்படுத்தியிருந்தாலும், மேற்குறிப்பிட்ட 13 குடியேற்றங்களும் இங்கிலாந்தால் உருவாக்கப்பட்டவையே. புரியும்படிச் சொன்னால், இந்தியா போன்ற மற்ற நாடுகளை இங்கிலாந்து அடிமைப்படுத்தியபோது, இங்கிலாந்தை எதிர்த்து அந்தந்த நாட்டு மக்கள் சுதந்திரப்போர் நடத்தினர். ஆனால், அமெரிக்காவில் குடியேறிய இங்கிலாந்துக்காரர்களே, இங்கிலாந்தின் ஆட்சியை எதிர்த்து நடத்திய சுதந்திரப்போர் இது! இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதில் தங்களுக்கு வாக்குரிமை இல்லாத நிலையில், அது எடுக்கும் முடிவுகள் தங்களைக் கட்டுப்படுத்துவதா என்ற அதிருப்தியில் இருந்தவர்கள்மீது, 1765இல் பத்திரச் சட்டம் மூலம் வரியும் விதிக்கப்பட்டதால், விடுதலையின் மைந்தர்கள் என்ற அமைப்பு உருவானது. பத்திரச்சட்டம் 1766இல் விலக்கிக்கொள்ளப்பட்டாலும், இங்கிலாந்து கருவூலத்துறைத் தலைவர் டவுன்ஷெண்ட் கொண்டுவந்த வரிகளுக்கான எதிர்ப்பின் உச்ச நிகழ்வாக போஸ்டன் தேநீர் விருந்து என்றழைக்கப்படும், கப்பல் நிறைய இங்கிலாந்துத் தேயிலையைக் கடலில் கொட்டிய போராட்டம் நடந்தது. மக்கள் படைகளிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்ற இங்கிலாந்து ராணுவம் முயற்சித்ததைத் தொடர்ந்து 1775 ஏப்ரலில் இது நேரடிப் போராக மாறியது. 1775 ஜூனில் அமெரிக்க விடுதலைப்படை அமைக்கப்பட்டது. 1776 ஜூலையில் அமெரிக்கா தன்னிச்சையாகத் தாங்கள் விடுதலை பெற்றுவிட்டதாகப் பிரகடனம் செய்து கொண்டாலும், போர் தொடர்ந்தது. 1778இல் அமெரிக்க விடுதலைப்படையுடன் ஃப்ரான்சு இணைந்து கொண்டது. ஸ்பெயினும் உதவிக்கு வந்தது. ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையிலான படையிடம் இங்கிலாந்துப் படை 1781இல் சரணடைந்தது. அமெரிக்காவை அங்கீகரிக்கும் ஒப்பந்தத்தில் 1783 செப்டம்பர் 3 அன்று பாரீசில் இங்கிலாந்து கையெழுத்திட்டது. அப்படியாக வெளியேற்ற நாள் என்று இன்றும் நவம்பர் 25 அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...