வயநாட்டில் உள்ள கல்பெட்டா பகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி..!
வயநாட்டில் உள்ள கல்பெட்டா பகுதியில் பேரணியாக சென்று ராகுல் காந்தி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
கேரள மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே கேரளாவில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில், நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். இந்நிலையில், இந்தாண்டு மக்களவை தேர்தலில், வயநாடு தொகுதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் அறிவித்தது.
அதன்படி காங். கட்சி சார்பில் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக ராகுல் காந்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி தொண்டர்களுடன் பேரணியாக சென்றார். வேட்புமனு தாக்கலின்போது, காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஏற்கனவே வயநாட்டு தொகுதியில் போட்டியிட I.N.D.I.A. கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் அதே தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.