மக்ளே(சிறுகதை)

 மக்ளே(சிறுகதை)

மக்ளே சிறுகதை

மண்ணுக்கு அடியில் கிடைக்கும் நிலக்கரியின் கருமையென, மேனி கறுத்த மேகங்கள், தென்றலை சுமைத் தாங்கியாய்  தழுவி கொள்ள, குறும்புக்கார தென்றல் தழுவலின் அடுத்த கட்டத்திற்கு காய் நகர்த்த நாணிக் கொண்ட மேகங்கள், காமத்தில் வெப்பமடைந்து மழையென ஈரம் காட்டின . .

மழையில் நனைந்தபடி சின்னமலை கிராமத்திற்கு செல்லும் மண் சாலையில் அழுக்கடைந்த  நிலையில் ஒழுங்கற்ற மீசை தாடியோடு கிழிந்தபோன  உடையில்  வைதேகி காத்து இருந்தாள் விஜயகாந்த் போல அந்த  பாலத்தில் வீற்று இருந்தான்  கருப்பன்  என்ற முருகன் 

களைந்து கொண்டியிருந்த  மேகக்கூட்டங்களை மீறி,  முகம் காட்ட விளைந்த கதிர் அவன், மது குடித்து  சிவந்ததைப்போல  காணப்பட, அந்த அந்தி வானத்து சூரியனில்  முத்தழகி  முகம் தெரிவதாக முருகனுக்கு தோன்றியது. ..

“வா முருகா” என்றழைப்பது  போன்றோசை, அவன் மனதுக்குள்  கேட்க, வானத்து சூரியனை  முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தான். முத்தழகி வருவாள் என்ற நம்பிக்கையில்   

மேக ஆடையை விலக்கிடமுயன்ற தென்றலின் குறும்பில் வெட்கம் கொண்ட மரங்கள்.முகம் மூடி, தலைக்  கவிழ,  பூமியின்  மஞ்சணை  விரிப்பாக பூக்கள் மாறின..எங்கிருந்தோ தென்றலில் கலந்து  வந்த காட்டு செம்பருத்தி இதழ் ஓன்று  முருகன் முகத்தில் இருக்கையை தேட, அவன் விழிகளில் வடிந்த நீர், செம்பருத்தி இதழில்  முத்தழகி  என்ற பெயரை எழுதத்  தொடங்கியது. 

மேற்கு தொடர்ச்சி மலையின் அடையாளமாக திகழும் பேச்சிப்பாறை பகுதியில்  அமைத்துள்ள  சின்னமலை  கிராமம், அழகுத்தாயின் சீதனப் பொருளாய். எங்கு நோக்கினும் இறைவனின்  கவர்ச்சி படத்தின் துள்ளல் காட்சிகள்…

மலை சாரலில்  நாணியோடும் நீரின் மிசையினால், நிலமகளின் முகத்தில் வியர்வை துளிகள் பரதம் கட்ட, அத்துளிகள் காதலின் கடைசி அத்தியாத்தில் தம்மை மறந்த  காதலர்களின்  மேனியில்  தோன்றும் காம வடுக்களாக கவர்ச்சி ஊட்ட,   பச்சை மகள் இலக்கண பரிசாய்  பருவம் எய்தி  சின்ன மலை கிராமத்தில் சிரித்தாள்.

விஞ்ஞானத்தின் எந்த எச்சமும் எட்டாத அக்குக்கிராமத்தில், காதல் மட்டும் எப்படி எட்டி பார்த்தது  என்பதற்கு  இன்றுவரை  விடை  கிடைக்கவில்லை. மன்மதன்  வித்தைக்காரனாகவே  இருந்தான்… அந்த வித்தையில் களவு போன முத்தழகியும் முருகனும் இந்த கிராமத்தின்  காதல் சின்னங்கள்…

சின்ன மலை கிராமத்தில் உள்ளவர்கள்,  படிப்பதற்கு  பக்கத்து ஊரான  மார்த்தாண்டத்திற்கு தான் வரவேண்டும். மரவள்ளி கிழங்கு, வாழை மரங்கள் என இயற்கை கன்னியின்  மினுக்களில் பச்சை நிலவாய் பவனி  வரும் மார்த்தாண்டத்தில் பிரபலமாக இருந்த  காளை சந்தை போல, கிறித்தவ  கல்லூரியும் அறியப்படும் பெயராக இருந்தது. 

அக்கல்லூரியில் தாவரவியல் பிரிவில் தன்னை அடையாளப்படுத்தி  கொண்டவன் பழங்குடி வகுப்பை சார்ந்த முருகன்..பழங்குடி  வம்சத்தில்  மழைக்கு கூட யாரும் பள்ளி பக்கம்  ஒதுங்கியது கிடையாது.  ஒதுங்க  ஆசைப்பட்டாலும் அவர்களை தீட்டாக நினைத்த இன்னொரு சாதி, படிப்பின் கதவுகளை  சாதியின் சதையில் வேலி அமைத்து  காவல் காத்து கொண்டு இருந்தது

சபை ஒன்றின் உதவியில்  படிக்க ஆரம்பித்த முருகன், ஏதோ யோகத்தில் கல்லூரி வரை வந்து விட்டான்.  பலரின் கண்களை அது உறுத்திக் கொண்டு இருந்தது.

முத்தழகி வேதியல் பிரிவில் நிலவாய் வலம் வரும் பொன்னோவியத்தின் நிஜ பிம்பம். குளித்து முடித்து, தலை காய வேண்டும் என்பதற்காக கூந்தலை அவிழ்த்து விட்டபடி, அவள் கல்லூரிக்கு நடந்து  வரும் போது, கூந்தலின் நீர் வெட்கத்தில் நழுவி,  வானத்தில் அடிக்கப்பட்ட வர்ணம், மலை முகட்டில் வடிவதுபோல அவளின் பின்புறத்தில் கவர்ச்சி கதை எழுதுவது, பிரம்மனை வம்புக்கு இழுக்கும் செய்தி. 

இளைஞர் கூட்டம் முத்தழகியின் இடை அசைவில் இலக்கணங்களை  கற்று கொண்டு இருந்தனமுத்தழகியை பார்ப்பதற்கு என்று அண்ணாச்சி தோசை கடையில் மாணவர்கள் தவம் கிடப்பார்கள்.

கல்லூரியின்  அருகாமையில்  ஓலைகுடிசையில். கிராமத்து மணம் மாறாமல்அண்ணாச்சி தோசை கடை இருந்தது.   அக்கடையில் தோசை  மட்டும்தான் விற்பனை செய்யப்படும் சட்டையெதுவும்  போடாமல் வெறும் துண்டை மட்டும் கட்டி கொண்டு  முறுக்கு மீசையோடு தோசை  தயாரிக்கும்  நபரை அண்ணாச்சி என்று  அழைத்ததால், அக்கடை சாதிய மொழியை பிரகடனபடுத்திக்க கொண்டு இருந்தது…

பெரும்பாலும்   முருகன் அந்த கடையின் அருகாமையில்தான் இருப்பான். ஒரு நாளும் கடைக்குள் அவன் அனுமதிக்கபட்டது இல்லை அவன் உள்ளே  சென்றால் தீட்டு ஆகிவிடும் என சாதி சதைகள் கொக்கரித்து இருந்தன. அவனுக்கு மட்டும் அல்ல, அவனை போல தாழ்ந்த சாதியில் ஜனித்த அனைவருக்கும் இந்த அவலம் அரங்கேறி கொண்டு இருந்தது. சமூகம் இட்ட அடையாளத்தின்  கொடூரம் முருகனுக்கு  தெரிந்து இருந்ததால்  அதற்காக அவன் கவலைப்பட்டது இல்லை. 

கல்லூரியில் கவின் கலை மன்றத்தின்  சார்பில்  கவிதை போட்டி ஓன்று ஏற்பாடானது. மாணவர்கள் எல்லோரும்  கண்டிப்பாக   கலந்து கொள்ள வேண்டும் என நிர்வாகம் கிடுக்கி பிடி போட முருகன் விருப்பு  இன்றி அக்கவிதை போட்டியில் கலந்து கொண்டான்.

சாதி வெறியின் கொடுமைகளை சாடி முருகன் கவிதை ஒன்றை எழுதினான். போட்டியில் கலந்துகொண்ட முத்தழகியும் ஏறக்குறைய முருகனின் கருத்தை சார்ந்து  தன் கவிதையை படைத்தது  இருந்தாள். 

இருவரின் எழுத்துக்களும் ஒரே பாணியில் இருந்ததால், திருத்திய நடுவர்களுக்கு வியப்பு. வார்த்தையின் ஜாலங்கள், கருத்து, குறிப்பிட்ட வர்ணனைகள் எல்லாம் ஒரே அளவீட்டில் பயணித்து  இருந்தன. இருவரும் முன்னமே சேர்ந்து  முடிவு எடுக்க   வாய்ப்புமில்லை, தலைப்பு போட்டி ஆரம்பிக்கும் போதுதான் கொடுக்கப்பட்டது…

இருவரின் கருத்தியலும்  ஒரே  இலக்கை நோக்கி  பயணிக்கின்றன என்பதை புரிந்து கொண்ட  நடுவர்கள், முதல் பரிசை இருவருக்கும் கொடுக்க முடிவு செய்து மேடைக்கு அழைத்தார்கள். முருகனும் முத்தழகியும் முதல் முதலாக பார்வையை பகிர்ந்து கொள்ள வேதியல் இங்கு வினை களம் காண  முத்தழகி வில்லயென பாய்ந்த முருகனின் பார்வையில் கொஞ்சம் தாக்குண்டு தடுமாறினாள்… நட்புக்கான ஏக்கம் அது.

பரிசு பெற்று விட்டு  வெளியே வந்த முருகனை தேடி  வந்த முத்தழகி   அறிமுகம் செய்து கொண்டு, நாம  இருவரும்  முதல் பரிசு பெற்று உள்ளோம். வாங்க அண்ணாச்சி தோசை கடையில் சிற்றுண்டி சாப்பிட்ட படி கொஞ்சம் தமிழ் சார்ந்த விடயங்களை பேசுவோம். உங்களுக்கு  தமிழ் என்றால் உயிர் என்பது எனக்கு தெரியும் என்றாள்

முருகன் சிரித்தபடி, தமிழ் எனக்கு மட்டும் அல்ல, தமிழராக பிறந்த ஒவ்வொருவருக்கும் உயிர்தானே… உங்களுடன் இதுதான்  எனக்கு   முதல்  சந்திப்பு  இன்னொரு நாள் பார்க்கலாமே, என்றபடி  அவள் அழைப்பை  தட்டி கழித்து செல்ல  முற்பட்டான். அவள் விடுவதாக இல்லை. முடியாத சுழலில் அண்ணாச்சி தோசை கடைக்கு அவளுடன் போக ஒத்து கொண்டான்.

கடைக்கு  உள்ளே முருகனை   கண்ட அண்ணாச்சி கத்த தொடங்கினார். சாதி கெட்ட பயலுக்கு கடைக்குள்ள வர எவ்வளவு தைரியம். ஏலே..ஆண்ட பரம்பரைடா நாங்க… நாய்க நீங்க எங்களுக்கு சரிசமமா  உக்காரருவிகளோ… சுடு தண்ணியை மூஞ்சில ஊத்திருவேன். போல இங்கிட்டு இருந்து என்று சாதி உணர்வை காட்டினார்… 

 முருகன் கூனி குறுகி போய்  வெளியே வந்து கடையின் பக்கத்தில் இருந்த மாமரத்தில் அருகில் அமர்ந்தான். சாதியின் கோரமுகத்தை கண்டு. செய்வது 

அறியாமல் தவித்த  முத்தழகி,  முருகன் அவமானபட்டு விட்டானே என்ற ஆத்திரத்தில்.வாங்கிய  சிற்றுண்டியை கடைக்கு  வெளியே எடுத்து வந்து, முருகன் அமர்ந்து இருந்த இடத்தில் உட்கார்ந்து  உண்ண  தொடங்கினாள். விடயம் காட்டுத்  தீயென கல்லூரிக்குள் பரவதொடங்கியது. 

நம்ம சாதி பொண்ணு கீழ் சாதி நாய்க்கூட எப்படி போய் உட்கார்ந்து சாப்பிடலாம்… அவளை பிடித்து இழுத்துகிட்டு வாங்கல… பேராசிரியர்  ஒருவர் சத்தமிட, மாணவர்கள் சிலர் ஓடி வந்து  முத்தழகியை இழுத்து கொண்டு போக முற்பட்டனர். முத்தழகி அங்கிருந்து நழுவ கூடாது  என்பதில் உறுதியாக இருந்து, முருகன் கையை பிடித்துக் கொண்டாள். கதை வேறு விதமாக திசை திரும்ப ஆரம்பித்தது… ஆணும் பெண்ணும்  சிரித்தாலே கதை கட்டும் உலகம் இவர்களை சும்மா  விடுமா ?

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...