இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது..!

 இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது..!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், இன்றுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைகிறது.

கடந்த 2019ம் ஆண்டை போலவே, இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தை பொறுத்த வரையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன. திமுகவை பொறுத்த அளவில், 21 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கியுள்ளது. மற்ற தொகுதிகளில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் களம் காண்கின்றன.

வேட்பாளர் பட்டியலை பொறுத்த அளவில், தென் சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை – தயாநிதி மாறன், வட சென்னை – கலாநிதி வீராசாமி, ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர் பாலு, காஞ்சிபுரம் – செல்வம், வேலூர் – கதிர் ஆனந்த், அரக்கோணம் – ஜெகத்ரட்சகன், திருவண்ணாமலை – சி.என் அண்ணாதுரை, ஆரணி – தரணி வேந்தன், கள்ளக்குறிச்சி – மலையரசன், தருமபுரி – ஆர். மணி, கோவை – கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி – ஈஸ்வர சாமி, சேலம் – செல்வ கணபதி, ஈரோடு – பிரகாஷ், நீலகிரி – ஆ ராசா, தஞ்சாவூர் – ச.முரசொலி, பெரம்பலூர் – அருண் நேரு, தேனி – தங்க தமிழ்ச்செல்வன், தென்காசி – ராணி ஸ்ரீகுமார், தூத்துக்குடி – கனிமொழி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தென் மாவட்டங்களில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 7 தொகுதிகளை தனது கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ளது. தென்காசி, தூத்துக்குடி மற்றும் தேனி ஆகிய தொகுதிகளில் மட்டுமே திமுக நேரடியாக களமிறங்கியுள்ளது.

அதிமுகவை பொறுத்த அளவில், 7 தொகுதிகளை தனது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி 33 தொகுதிகளில் நேரடியாக களம் காண்கிறது. இதில் வடசென்னை, தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி (தனி) கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி என 18 தொகுதிகளில் திமுகவுடன் நேரடியாக மோதுகிறது.

பாஜகவை பொறுத்த அளவில், மத்திய சென்னை, பொள்ளாச்சி, தென்காசி, தஞ்சாவூர் என 4 தொகுதிகளில் திமுகவுடன் நேரடியாக மோதுகிறது. இந்த தேர்தலில் திமுக vs அதிமுக vs பாஜக vs நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுவதால் தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் நிலையில், இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கியது. பங்குனி உத்திரமான நேற்று முன் தினம் மட்டும் 405 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர். தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி உட்பட நேற்று 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இன்று திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். இன்றுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைகிறது.

நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. அதேபோல, மார்ச் 30ம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...