தமிழ்நாட்டில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம்..!
தமிழ்நாட்டில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கும் நிலையில், மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
12 ஆயிரத்து 616 பள்ளிகளை சேர்ந்த 9 லட்சத்து 38 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இதில் தனித் தேர்வர்கள் 28 ஆயிரம் பேரும், 235 சிறைக் கைதிகளும் அடங்குவர்
பொதுத்தேர்வுக்கான அறைக் கண்காணிப்பு பணியில் 48 ஆயிரத்து 700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை பிடிக்க 4 ஆயிரத்து 591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர், வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு எழுத உள்ள மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் தரப்படுவதாகவும், அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதை தேர்வாக மட்டும் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெற வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளார்.