குற்றால அருவிகளில் குளிக்க தடை..!
குற்றால அருவிகளில் வரும் 21 ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், நகர்புறங்களிலும் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பழைய குற்றால அருவியில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அஸ்வின் என்ற 17 வயது சிறுவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.
இருப்பினும் இன்று காலை முதல் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் குறைந்து சீராக கொட்டுகிறது. இருப்பினும் தென்காசி மாவட்டத்திற்கு இன்று முதல் 21 ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குற்றால அருவிகளில் வருகிற 21-ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதனுடன் பேரருவி தடாகத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தீயணைப்பு துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.