கேப்ஸ்யூல் (நாவல்) | பாலகணேஷ்

 கேப்ஸ்யூல் (நாவல்) | பாலகணேஷ்

இது பாஸ்ட்ஃபுட் காலம். எதையும் சீக்கிரம் முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்ற எண்ணம் இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகிற ஒன்று.

ஆயிரம் பக்க நாவலைக் கொடுத்து படிக்கச் சொன்னால் யோசிக்கிறார்கள். அதே ஆறு பக்கங்களென்றால் உடனே தயார்..!

இந்தத் தலைமுறைக்காகத் தமிழின் சில புகழ்பெற்ற நாவல்களை அவற்றின் கருத்து கெடாமல் கேப்ஸ்யூல்களாக சுருக்கி இங்கே உங்களுக்குத் தந்திருக்கிறேன்.

சிவகாமியின் சபதம் | கல்கி

அமரர் கல்கி எழுதிய ‘சிவகாமியின் சபதம்’ நாவல். அவர் இறந்து 58 ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப்படுகிறது இந்தக் கதை. அதனுள் கொட்டிக் கிடக்கும் வீரம், காதல், ஹாஸ்யம் உள்ளிட்ட பல உணர்ச்சிகள் படிப்பவர்களுக்குள் இறங்கிச் செல்லும். அவற்றை இந்த கேப்ஸ்யூல் வடிவத்தில் உங்களால் பெற இயலாது என்பதுதான் குறை.

சிவகாமியின் சபதம்

முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை

பல்லவ மன்னர் வம்சத்தில் பெரும்புகழ் பெற்றிருந்த மகேந்திர பல்லவரின் ஆட்சிக் காலம். திருவெண்காட்டிலிருந்து காஞ்சியிலுள்ள நாவுக்கரசர் மடத்தில் சேர்ந்து படிப்பதற்காக வருகிறான் பரஞ்சோதி என்ற வாலிபன். வழியில் அவன் தூங்கும் போது அவனைக் கடிக்க இருந்த பாம்பைக் கொன்று அவனைக் காப்பாற்றுகிறார் கொடூர முகமுடைய நாகநந்தி என்னும் புத்தபிட்சு. இருவரும் காஞ்சிக்கு வரும் போது கோட்டைக் கதவுகள் சாத்தப்பட்டு நகரெங்கும் பெரும் பரபரப்பு இருக்கிறது. பிட்சு போய்விட, தனியே வரும் பரஞ்சோதி ஒரு முதியவரும் இளம் பெண்ணும் மதம் பிடித்த யானையிடம் சிக்க இருந்த நிலையில் வேலை எறிந்து யானையை காயப்படுத்த, அது பரஞ்சோதியைத் துரத்துகிறது. ஓடுகிறான்.

அந்த முதியவர் அந்நாளில் புகழ்பெற்று விளங்கிய சிற்பி ஆயனர். இளம்பெண் அவர் மகள் சிவகாமி. அன்று நடந்த சிவகாமியின் நாட்டிய அரங்கேற்றத்தின் பாதியில் அவசரத் தகவல் காரணமாக மகேந்திர பல்லவர் சென்றுவிட, அரங்கேற்றம் தடைபட்டு திரும்பிக் கொண்டிருந்த போதுதான் பரஞ்சோதியால் காப்பாற்றப்பட்டனர். அவர்களைக் காப்பாற்ற வந்த மகேந்திர பல்லவர், சாளுக்கிய மன்னன் புலிகேசி பெரும் சைன்னியத்துடன் பல்லவ எல்லைக்குள் பிரவேசித்துவிட்ட தடகவல் வந்ததால்தான் செல்ல நேர்ந்தது என்று ஆயனரிடம் கூற, அவர் மகன் – மாமல்லன் என்ற சிறப்புப் பெயர் கொண்ட – நரசிம்ம வர்மனின் கண்களும் சிவகாமியின் கண்களும் சந்தித்து கதை பேசுகின்றன.

யானையிடமிருந்து தப்பி தன் பயண மூட்டையைத் தேடிவரும் பரஞ்சோதியை ஒற்றன் என சந்தேகப்பட்டு, பல்லவ வீரர்கள் சிறையிலிடுகின்றனர். இரவில் நாகநந்தி பிட்சு அவனைக் காப்பாற்றி கோட்டையைத் தாண்டி நகருக்கு வெளியே அழைத்துச் செல்கிறார். ஆயனச் சிற்பியிடம், ‘உங்கள் நண்பரின் மகன்’ என்று அறிமுகப் படுத்துகிறார். அழியாத அஜந்தா வர்ணக் கலவையை அறிய வேண்டு மென்ற ஆயனரின் ஆர்வத்தைப் பயன்படுத்தி பரஞ்சோதியை நாகார்ஜுன மலைக்கு அனுப்பும்படி ஆலோசனை சொல்கிறார். அவனிடம் கபடமாக புலிகேசிக்கு ஒரு ஓலை கொடுத்து விடுகிறார்.

மாமல்லரிடம் போருக்கு வர வேண்டாம் என்றும், கோட்டையை பாதுகாக்கும்படியும் பணித்து விட்டு ஒற்றர் தலைவன் வீரபாகு என்ற வேடத்தில் வரும் மகேந்திர பல்லவர் வழியில் பரஞ்சோதியை சந்திக்கிறார். இரவில் அவனை மயக்கப் புகையால் தூங்கச் செய்து அவன் கொண்டுவந்த ஓலையை மாற்றி விடுகிறார். சாளுக்கிய வீரர்களிடம் சிக்கி சக்கரவர்த்தி புலிகேசியின் முன் நிறுத்தப்படும் பரஞ்சோதியை சாமர்த்தியமாகக் காப்பாற்றி, ஆற்றின் அக்கரையிலுள்ள பல்லவர் பாசறைக்கு அழைத்து வருகிறார் மகேந்திரர். அங்கே வந்த பின்புதான் அவர்தான் மகேந்திர சக்கரவர்த்தி என்பதை அறிந்து வியக்கிறான் பரஞ்சோதி.

அடுத்தபகுதி – 2

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...