“பெட்டிக்கடை பொண்ணு” (சிறுகதை) | நேசா

தினசரி வந்து நிற்கும் அதே மெயின் ரோட்டில் வந்து நின்றாள் அனுபமா, இன்றும் ரோட்டோரக் கடையில் இருந்த அந்தப் பெண் இவளையேப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

பெரிய நகரத்தின் எல்லையில் கொஞ்சம் உள்ளடக்கிய காலனியில் இருந்தது அனுபமாவின் வீடு. வீட்டில் இருந்து மெயின் ரோடு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது, எனவே தனது ஐ.டி. வேலைக்காக தினமும் அந்த ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து கம்பனி ஏற்பாடு செய்து இருக்கும் காருக்காக இங்கே காத்திருந்து வண்டியில் ஏறி செல்வது வழக்கம். இன்று இரவு நேரப் பணி அதற்காக இரவு ஏழு மணிக்கு நின்று கொண்டிருக்கிறாள்.

கடந்த இரண்டு வருடங்களாக நடக்கும் செயல் தான், இப்போது சில மாதமாக அங்கே இருக்கும் சிறு பெட்டிக் கடையிலிருந்து அந்தப் பெண் இவளையே பார்த்துக் கொண்டிருக்கிறாள், அதுவும் இதுபோல் இரவு நேரம் எனும் போது ஆட்கள் நடமாட்டம் குறைந்திருக்கும் இந்த வேளையில் அவள் கண் கொட்டாமல் பார்ப்பது அனுபமாவிற்கு கலக்கத்தைக் கொடுத்தது.

இதற்கு முன் அந்தப் பெண்ணை இங்கே பார்த்தது இல்லை கடந்த சில மாதங்களாக தான் இங்கே இருக்கிறாள், அதிலும் சமீபகாலமாக தான் அவளது பார்வையில் தீவிரம் தெரிந்தது, “இது என்ன இந்தப் பெண் தினமும் நம்மை இப்படி பார்க்கிறாளே ஏன்?” அவளுக்கு இன்று காலையில் தினசரியில் வாசித்த செய்தி நினைவிற்கு வந்தது ‘பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த பெண் கழுத்தில் இருந்த செயினைப் பறித்து சென்றனர். செயினைப் பறித்தவன் தினமும் அருகில் இருந்த கடையில் நோட்டம் விட்டு இப்படி செய்து இருக்கிறான்’ என்று போட்டு இருந்தது அதுவும் இவர்களது பகுதிக்கு அருகில் இருக்கும் இடம் தான்.

செய்தி நினைவிற்கு வரவும் அவளுக்கு இப்போது பயம் வந்து நெஞ்சில் சம்மணம் போட்டு உட்கார்ந்தது, ’தினமும் இங்கே தனியாக நிற்பதைக் கண்டு நம் கழுத்தில் இருக்கும் செயினைப் பறிக்க ஏதேனும் திட்டம் போடுகிறாளோ? இந்த செயின் வேண்டாம் என்று சொன்னால் அம்மா கேட்டால் தானே?’ துப்பட்டாவால் கழுத்தை நன்றாக மூடி நின்று கொண்டாள்.

கார் வருகிறதா என ரோட்டைப் பார்த்துக் கொண்டே லேசான ஓரப்பார்வையில் கடையையும் நோட்டம் விட்டாள். இப்போது அந்தப் பெண் கடையிலிருந்து இறங்கி வந்தாள் கூடவே வாட்டசாட்டமான ஆள் ஒருவனும் வந்தான். அனுபமாவுக்கு குலை நடுங்க ஆரம்பித்தது, ‘ஐயோ இந்த காராவது சீக்கிரம் வந்து தொலைக்கக் கூடாதா? கடவுளே காப்பாத்து’ மனதிற்குள் வேண்டிக் கொண்டே திரும்பிப் பார்க்க அந்தப் பெண் சமீபித்திருந்தாள், இருந்தாலும் கவனிக்காதது போல பாவனை செய்தாள்.

“ஏம்மா ஒரு நிமிஷம்” சொல்லிக் கொண்டே அருகில் வந்தாள் அந்தப் பெண்.

‘ஏதாவது பேச்சுக் கொடுத்துக் கொண்டே அருகில் வருவார்கள், அவர்களிடம் பேச்சு கொடுக்காதே’ இந்த நேரம் பார்த்து அப்பாவின் அறிவுரை நியாபகத்திற்கு வந்தது.

கார் வருகிறதா என பார்ப்பது போல ரோட்டின் உட்புறமாகச் சென்றாள், “பாத்து மா ஏதாவது வண்டி வேகமா வரப் போகுது” அருகில் வந்து நின்றாள் அந்தப் பெண்.

அனுபமா முகத்தில் திகில் தெரிய படபடப்புடன் பார்த்தாள், “அய்யே, நம்ம பாத்து இந்தப் பொண்ணு பயந்துடுச்சி போல கவிதா” சொல்லிக் கொண்டே சிரித்தான் அந்த ஆள்.

“அப்படியாம்மா?” அவள் லேசாக முறுவலித்தாள் பிறகு, “இந்த நேரத்துக்கு வேலைக்குப் போகறதுக்கு காருக்காக தானே நிக்கறே?”

‘ஐயோ தினமும் எவ்வளவு நல்லா நோட்டம் விட்டு இருக்காங்க பாரு, சரியா சொல்றாங்களே’ மனதுக்குள் பட்சி பறந்தது, “ஆமாம்” என்றாள் திக்கித்திணறி.

“இன்னைக்கு காலையில பேப்பர் படிக்கலை, இங்க தான் நிறைய செயின் பறிச்சிட்டு போற சம்பவம் நடக்குதே இப்படி துணைக்கு யாரும் இல்லாமல் தினமும் வர்றியே யாரையாவது கூட்டிட்டு வரக் கூடாது” அனுபமாவின் பயம் சட்டென்று குறைய ஆரம்பித்தது, “கூட வரதுக்கு யாரும் இல்லை” என்றாள் மெதுவாக.

“இந்த ஆளை கல்யாணம் முடிச்சி இங்க வந்து மூணு மாசம் ஆகுது நான் தான் தினமும் பார்க்கிறேனே தனியா வந்து பயந்துகிட்டே நிக்கிறியே அதான் ஒரு யோசனை சொல்லலாம்னு வந்தேன். நீ ஒன்னும் பயப்படாதே அதோ அங்க இருக்கறது எங்க கடை தான் கார் வர்ற வரைக்கும் அங்க வந்து உட்கார்ந்து இரு, கார் வந்ததும் ஹாரன் அடிக்கச் சொல்லு அப்புறம் போய் ஏறிக்கோ. ஊருல என் தங்கச்சி கூட உன்னாட்டமா தான் இருப்பா, அவளை எங்கேயும் தனியா விட்டது இல்லை, இப்ப என்ன பண்றாளோ?” என அவளது தங்கையை எண்ணி கவலை கொண்டாலும் இவளைப் பார்த்து சிரித்தாள் அந்தப் பெண்.

உதவி செய்வதற்காகப் பார்த்த அந்தப் பெண்ணை தவறாக நினைத்து விட்டோமே என தன்னையே நொந்து கொண்ட அனுபமா, “சரிக்கா” என அவளுடன் சேர்ந்து பெட்டிக் கடைக்கு நடந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!