அமெரிக்க எழுத்தாளர் மாயா ஆஞ்சலோ எழுதிய புத்தகங்களின் தமிழ்ப் பதிப்பை வெளியிட்டது அமெரிக்க துணைத் தூதரகம்..!

 அமெரிக்க எழுத்தாளர் மாயா ஆஞ்சலோ எழுதிய புத்தகங்களின் தமிழ்ப் பதிப்பை வெளியிட்டது அமெரிக்க துணைத் தூதரகம்..!

அமெரிக்க எழுத்தாளர் மாயா ஆஞ்சலோ எழுதிய இரண்டு புத்தகங்களின் அதிகாரப்பூர்வ தமிழ்ப் பதிப்பை சென்னையில் உள்ள‌ அமெரிக்க துணைத் தூதரகம் வெளியிட்டது.

முனைவர் மாயா ஆஞ்சலோவின் (1928-2014) இயற்பெயர் மார்கரெட் ஆன் ஜான்ஸன்.  இவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞர்,  பாடகர்,  வரலாற்றாசிரியர் மற்றும் மனித உரிமைப் போராளி.  இவர் ஏழு சுயவரலாற்று நூல்களை எழுதியிருக்கிறார்.  மூன்று கட்டுரைத் தொகுப்புகளும் பல கவிதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.  இவரது படைப்புகள் நாடகங்களிலும்,  திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் எடுத்தாளப்பட்டுள்ளன.

பல்வேறு விருதுகளையும் 50 க்கும் மேற்பட்ட மதிப்புறு முனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளார்.  2000-ம் ஆண்டில் கலைகளுக்கான தேசிய விருதைப் பெற்றார்.  2010-ல் அமெரிக்காவின் மிக உயரிய விருதான,  விடுதலைக்கான அதிபர் பதக்கத்தை முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வழங்கினார்.

இந்த நிலையில்,  முனைவர் மாயா ஆஞ்சலோவின் இரண்டு முக்கிய படைப்புகளை, காலச்சுவடு பதிப்பகத்துடன் இணைந்து சென்னையில் உள்ள‌ அமெரிக்க துணைத் தூதரகம் தமிழில் வெளியிட்டுள்ளது.  மாயா ஆஞ்சலோவின் தன் வரலாற்று தொகுப்பான “கூண்டுப்பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும்”,  புனைகதை சாராத பிரிவில் விற்பனையில் சிறப்பிடம் பெற்ற ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண்ணின் முதல் படைப்பாகும்.

“என்றாலும் நான் எழுகிறேன்” கவிதைத் தொகுப்பு 32 கவிதைகளை உள்ளடக்கியது. பிரபலமான கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.  “கூண்டுப்பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும்” புத்தகத்தை பெர்னார்ட் சந்திராவும், “என்றாலும் நான் எழுகிறேன்” புத்தகத்தை ஆர். சிவகுமாரும் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர்.

அமெரிக்க தூதரக மையத்தின் கலையரங்கில் இன்று (மார்ச்.15) இவ்வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்ற‌து.  மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி மற்றும் எழுத்தாளர்-சமூக ஆர்வலர் சல்மா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொது உறவு நல அமைச்சக ஆலோசகர் குளோரியா பெர்பனா,  அமெரிக்க துணைத் தூதரகத்தின் பொது உறவு நல அலுவலர் ஸ்காட் ஹார்ட்மன்,  அமெரிக்க துணைத் தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் சமந்தா ஜாக்சன்,  காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணன் சுந்தரம் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து,  அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய அலுவலகத்தின் ஊடக மற்றும் பொது உறவு நல பிரிவு துணை இயக்குநர் ஆன் சேஷாத்ரி கூறியதாவது:  “மாயா ஆஞ்சலோ படைப்புகளின் மொழிபெயர்ப்பு பல்வேறு மொழிகளில் வந்திருந்தாலும்,  அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பு ஏதும் தமிழில் வரவில்லை.

பதிப்பாளர்களுடன் இணைந்து நீண்ட காலம் பணியாற்றி சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்தின் பொது உறவு நலப்பிரிவு இந்த மொழிபெயர்ப்புகளை சாத்தியம் ஆக்கியுள்ளது.  படைப்புகளில் அவர் மையப்படுத்தும் சகிப்புத்தன்மை, நீதி மற்றும் சமத்துவம் தென்னிந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள‌ தமிழ் வாசகர்களிடம் சென்றடையும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...