தமிழ்நாட்டில் ரூ.9,000 கோடி முதலீடு செய்த டாடா நிறுவனம்..!

 தமிழ்நாட்டில் ரூ.9,000 கோடி முதலீடு செய்த டாடா நிறுவனம்..!

தமிழ்நாட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.9,000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசு மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ரூ.9,000 கோடியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடங்கும் புதிய வாகன உற்பத்தி தொழிற்சாலையில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (13.3.2024) முகாம் அலுவலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.

வாகன உற்பத்தித் திட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 5 ஆண்டுகளில், 9000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இத்தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வாகனத் தொழிற்சாலை அமைக்கப்படுவதற்காக,  தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் வே. விஷ்ணு, இ.ஆ.ப., மற்றும் டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் தலைமை நிதி அலுவலர் P.B. பாலாஜி ஆகியோரிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர்  டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர்  வி.அருண் ராய், இ.ஆ.ப., தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., மற்றும் டாடா குழுமத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...