மூத்தவ – சிறுக​தை

 மூத்தவ – சிறுக​தை

மூத்தவ

“உங்களுக்கு எத்தனை தடவை சொன்னாலும் அறிவே வராதா..?” வந்ததும் வராததுமாக நிலைப்படியைப் பிடித்தபடி கத்தினான் ஆறுமுகம். பதில் சொல்லாது உக்கார்ந்திருந்தார் மூர்த்தி.

மகனின் சத்தம் கேட்டு அடுப்படியில் இருந்து ஈரக்கையை முந்தானையில் துடைத்தபடி வந்த லெட்சுமி, “ஏய் எதுக்குடா இப்ப வந்ததும் வராததுமா வாசல்ல நின்னு கத்துறே… எதுவாயிருந்தாலும் வீட்டுக்குள்ள வந்து பேசு” என்றாள் சத்தமாக.

“வாசல்ல நின்னு கத்துறதால உங்க கவுரவம் கொறஞ்சி போகுதாக்கும்… ஏங்கத்துறேன்னு என்னையக் கேக்குறியே… என்ன பண்ணுனாருன்னு அவரைக் கேட்டியா… நீ எப்படிக் கேப்பே… மேயுற மாட்டைக் கெடுக்குற நக்குற மாடு மாதிரி அந்தாளைக் கெடுக்குறதே நீதானே… எதையும் கேட்டுக்காதே…” நின்ற நிலையில் இருந்து மாறாமல் கத்தினான்.

தெருவில் ஒரு சில தலைகள் தன் வீட்டையே பார்ப்பதைப் பார்த்த லெட்சுமி ‘இங்க என்ன ஆடுதுன்னு பாக்குறாளுக’ என்று முணங்கியபடி “அப்பா… நான் நக்குற மாடாவே இருக்கேன்… நீ முதல்ல உள்ள வா.. வாசல்ல நின்னு கத்தாம…” என்றாள் கோபமாய்.

“எங்கிட்ட கத்து… அவருக்கிட்ட எதுவும் கேக்காதே…” என்றபடி உள்ளே வந்தான் ஆறுமுகம்.

“அவரு என்ன பண்ணுறாரு… எங்கே போறாருன்னு எனக்கென்ன தெரியும்… நீயும் வந்ததும் வராததுமா அடியுமில்லாம முடியுமில்லாமச் சாமியாடுறே… என்னன்னு சொன்னாத்தானே தெரியும்…”

“ம்… அவரு என்ன பண்ணுறாருன்னு உனக்கு ஒன்னும் தெரியாது பாவம்… பப்பா பாரு… செய்யிறதையும் செஞ்சிட்டு எவனையோ பேசுறான் என்னக்கென்னன்னு பேசாம இருக்காரு பாரு… சரி… தண்ணி கொண்டா…”

செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தவள், “காபி போடவாடா..?” என்றாள்.

“ஆமா… அதுதான் இப்பக் குறைச்சல்…”

“என்னதான்டா உன்னோட பிரச்சினை…?”

“அப்ப உனக்கு ஒண்ணுமே தெரியாது…”

“தெரிஞ்சா நா ஏன் உங்கிட்ட கேக்கப் போறேன்…”

“சரித்தான்… இம்புட்டுக் கத்துறேன்…. ஒண்ணுமே தெரியாத மாதிரி அவரு உக்காந்திருக்காரு…. நீ எனக்குத் தெரியாது என்னடா பிரச்சினையின்னு எங்கிட்டயே கேக்குறே…. ஆனா ரெண்டு பேரும் இருக்கியலே ஆத்தாடி ஆத்தா… ஜாடிக்கேத்த மூடிங்கிறது இங்கதான் பொருந்தும்.”

“இங்கேருடா என்ன ஏதுன்னு சொல்றதுன்னாச் சொல்லு இல்லேன்னா விட்டுத்தொலை… என்ன ஏதுன்னு ஒரு எழவும் தெரியாத என்னையும் சேத்துத் திட்டாம….” சேலைத் தலைப்பை ஒதறி இடுப்பில் சொருகிக் கொண்டாள்.

“இப்ப என்னவாம்… தம்பி வந்ததுல இருந்து குதிக்கிறாக… வாசல்ல நின்னுக்கிட்டு குரல் கொடுத்தாத்தான் பக்கத்து வீட்டுக்காரனெல்லாம் இவுகளை பெரிய மசுருன்னு பாப்பாகளாமோ… பேசாம இருக்கோம்ன்னா தப்புப் பண்ணிட்டோம்ன்னு அர்த்தமில்லை… பிரச்சினை வேண்டாமேன்னுதான் அர்த்தம்…” வாயைத் திறந்தார் மூர்த்தி.

“செய்யிறதையும் செஞ்சிட்டு பேச்சப் பாத்தியாம்மா… மசுரு மட்டையின்னு… பிரச்சினை பண்ணுவாராமே… எங்கே பண்ணச் சொல்லு…”

“அவந்தான் கோபமாப் பேசுறான்னா நீங்க ஏன் இப்ப திடீர்ன்னு கத்துறிய… சும்மா இருக்க மாட்டியலா…”

“பின்ன என்ன… என்ன செய்யக் கூடாததை செஞ்சிபுட்டாக… வாசல்ல நின்னுக்கிட்டு வானத்துக்கும் பூமிக்குமாக் குதிக்கிறாக… வண்டிய நிறுத்தாம ரோட்டுல நின்னு கத்த வேண்டியதுதானே…”

“அப்ப நீங்க செஞ்சது சரிங்கிறியளா…?” எழுந்தபடிக் கேட்டான் ஆறுமுகம்.

“ஆமா… என்னைப் பொறுத்தவரை அது சரிதான்… உங்கிட்ட பத்தவைக்க வந்தவனுக்கு அறிவிருந்தா சொல்ல வந்திருப்பானா…”

“டேய் நீ உக்காரு முதல்ல… ஏங்க விடுங்களேன்…” லெட்சுமி கெஞ்ச, உட்கார்ந்தவன் “ஓ எனக்கிட்ட சொன்னவங்களுக்கு அறிவில்லை… ஆனா உங்களுக்கு நிறைய இருக்கு அறிவ்வ்வ்வு… அப்படித்தானே..” பிரச்சினையைத் தொடர்ந்தான்.

“ஆமா… அது இருந்ததாலதான் நீங்க இன்னைக்கு இஞ்சினியரா இருக்கீக… உங்க தம்பி வாத்தியாரா இருக்காக… இல்லேன்னா உழவுதான் ஓட்டியிருப்பீக…”

“உங்க அறிவாலதான் எங்களைப் படிக்க வச்சீக… சரிதான்… ஆனா உங்க புத்தி எங்களுக்கு வர வேண்டாம்….” நக்கலாகச் சொன்னான்.

“சுட்டுப் போட்டாலும் எம்புத்தி உங்களுக்கு வராது தெரிஞ்சிக்க…”

“அம்மா… தேவையில்லாமப் பேசுறாரு… அவரு செஞ்சதை நியாயப் படுத்துறாரு…. கோவத்தை மேலும் மேலும் கிளப்பிக்கிட்டு இருக்காரு…”

“ஏங்க என்ன பண்ணுனீங்க… இப்ப எதுக்கு அவனுக்கிட்ட கத்துறிய…”

“என்னத்தை பண்ணிட்டேன்… இவருக்கு ஓலை அனுப்புனவுக உனக்குச் சொல்லலையாக்கும்…”

“புரியிற மாதிரிச் சொல்லுங்க… எதுக்கு கத்துறிய… எனக்கிட்ட யாரும் எதுவும் சொல்லலை…”

“ஏன் இவுக மட்டும் வந்திருக்காக…  சின்னவனுக்குச் சொல்லி அவனையும் வரச்சொல்லியிருக்க வேண்டியதுதானே என்னைய ஏவங்கேக்க…”

“அவனுக்குத்தான் எதுவுமில்லையே… யாரு எப்படிப் போனா என்ன… நாந்தானே எல்லாத்துக்கு அலைய வேண்டியிருக்கு…”

“அப்பா சாமி… நீ எங்களுக்காக அலைய வேண்டாம்… எங்கள நாங்க பாத்துப்போம்…”

“பேச்சை மாத்தாதீக… உங்களுக்காக அலையுறேன்னு சொன்னேனா… நாங்கேட்டதுக்கு பதில் சொல்லுங்க…”

“என்னன்னுதான் சொல்லித் தொலைங்களேன்… அப்பனும் மகனும்.. ஒரு எழவும் புரிய மாட்டேங்குது…”

“என்னத்தைச் சொல்ல… சவுந்தரத்தைப் போய் பாத்துட்டு வந்தேன்… அங்க ஏன் போனேன்னு ஏவங்கேட்டுக்கிட்டு வந்து நிக்கிறாரு…”

“சவுந்தரத்தையா…?” சுவரில் சாய்ந்து உட்கார்ந்து ‘எதுக்கு அங்க போனீக… எந்தாலி அறுக்கவா…?” கத்தினாள்.

“ஏய்… இந்தா… நிறுத்து… கூப்பாடு போடாம… இப்ப என்னத்துக்கு ஒப்பாரி வைக்கிறே… அவளைப் போயி பாத்ததுனால என்ன வந்துருச்சு வீட்டுல… எழவா விழுந்திருச்சி…”

“அம்மா.. பேச்சைப் பாத்தியா… ஏன் போனீங்கன்னு கேட்டா, எழவு விழுகலையேன்னு திருப்பிக் கேக்குறார் பாரு…”

“ஏன்டா… உங்காத்தா பேச்சுக்குப் பேச்சு எழவுன்னு சொல்றது உனக்குக் கேக்கல… நாங் கேட்டது மட்டும் சுட்டுக்கிச்சோ..?”

“எழவு விழுகணுமா… அந்தச் சிறுக்கி பண்ணுனது பத்தாதா… இன்னும் எழவு விழணுமா..?” அழுகையோடு கத்தினாள்.

“அவ அப்படி என்ன பண்ணிட்டா… இந்தா நிக்கிறாகளே இவரு பொறக்குறதுக்கு முன்னாடி அவதான் இந்த வீட்டுல மகளா வளர்ந்தா… அவள நான் உந்தங்கச்சியாவா பார்த்தேன்…. எம்மகளாத்தானே பார்த்தேன்… இவுகளையும் இவுக தம்பியையும் தங்கச்சியையும் நீ வளர்த்ததைவிட அவதானே வளர்த்தா… வயக்காட்டுல நாம கிடக்க… வீட்டு வேலை, சாப்பாடு, ஆடு, மாடு, பத்தாததுக்கு புள்ளைங்கன்னு எல்லாத்தையும் இழுத்துப் போட்டுத்தானே பாத்தா… அவளப் படிக்க வச்சிருந்தா இவுகளுக்கு மேல சம்பாரிச்சிக்கிட்டு இருந்திருப்பா… நம்ம வீடுன்னு வாழ்ந்தவள இன்னைக்கு நான் போயிப் பாத்ததுல என்ன தப்புங்கிறேன்….”

“தப்பில்லைங்க… தப்பில்லை… நீங்க அவள புள்ளயாப் பாத்தீங்கதான்… ஆனா அவ ஒரு அப்பனுக்கு உள்ள மரியாதையைக் கொடுத்தாளா…. எவங்கூடவோ ஓடிப்போயி நம்மள மட்டுமில்லாம பெத்தவுகளையும் தலை குனிய வச்சவதானே அவ… நீங்க வளர்த்துத்தான் அவ கெட்டுப் பொயிட்டான்னு ஊரே பேசுச்சே…  அவ ஓடிப்போனதாலதானே எங்கப்பா வெசத்தைக் குடிச்சிட்டு செத்தாரு… நீங்க கயிரெடுத்துக்கிட்டு நின்னீக… ஊரும் உறவுமுல்ல உங்களைக் காப்பாத்துச்சு… அதெல்லாம் மறக்க முடியுமா…?”

“மறக்க முடியாதுதான்… பக்கத்து ஊருல இருக்க எம்புள்ள சாகக் கெடக்கான்னு சேதி கேட்டு மறக்க முடியாம சுமக்குறேன்னு என்னால் இருக்க முடியலையே… இப்ப நான் போய் பாத்ததுல என்ன தப்புங்கிறீக… கடைசி வரைக்கும் துரோகம் செஞ்சிட்டான்னு தூக்கிச் சொமக்கச் சொல்றீங்களா…”

“அவ செத்தா என்ன… வாழ்ந்தா என்ன… எப்படி நீங்க அங்க போவீங்க… அங்க பொயிட்டு வந்து எங்கிட்ட சொல்லாம மறைச்சிருக்கீங்க… அப்ப நான் உங்களுக்குப் பெரிசில்லை… அவ பெரிசாப் பொயிட்டா அப்படித்தானே… அன்னைக்கி தொங்கியிருந்தீங்கன்னா நானும் எம்புள்ளயளுமுல்ல அநாதையா நின்னிருப்போம்… அவ பண்ணுனதுக்கு அனுபவிக்கிறா… அதுக்கு நாம என்ன பண்ண முடியும்…”

“உங்கிட்ட சொன்னா இந்தா இப்ப வைக்கிறியே ஒப்பாரி அது மாதிரி… ஓன்னு ஒப்பாரி வச்சி ஊருக்காரன் சொல்றதுக்கு முன்னாடி உம்மவனுக்குச் சொல்லிவிட்டு இந்தா இன்னைக்கு வந்து குதிக்கிறாரே இதை அன்னைக்கே வந்து குதிக்க வச்சிருப்பே… வேறென்ன செஞ்சிருக்கப் போறே… கூடப் பொறந்த உசிரு போகப் போகுதேன்னு ஒரு எட்டு போயி பாத்திருக்கப் போறியா…. இல்லையே… நீதான் அவ செஞ்ச துரோகத்தை தூக்கிச் சொமக்குறியே…”

“அவளை நான் எதுக்குப் பாக்கணும்..?”

“ஆமா அவ துரோகம் பண்ணிட்டா இந்தா பெத்ததுக உன்னய வச்சிப் பாக்குறாக இம்புட்டுக் குதிக்கிறானே இவம் பொண்டாட்டியோ சின்னவன் பொண்டாட்டியோ ஒரு நாள் அத்தை இங்க வந்து இருந்துட்டுப் போங்கன்னு சொல்லியிருப்பாங்களா? அவ ஓடுனா இவனுக பொண்டாட்டிக பின்னால ஓடுனானுங்க”

“பேச்சை மாத்த என்னென்னமோ பேசுறாரும்மா… அம்மா… இவரு இனி அந்த வீட்டுப்பக்கம் போகவே கூடாது… போனா நடக்குறது வேற… அம்புட்டுத்தான் சொல்லி வையி…”

“என்னடா நடக்கும்…. என்ன நடக்குங்கிறேன்…? அதையும் சொல்லிரு…”

“இந்த மனுசனோட காலம் பூராம் இதே பாடுதான்டா எனக்கு… இந்தாளுக்கு புத்தி கெட்டுப் போச்சுடா… இனிப் போனா அவ வீட்டுலயே இருந்துக்கட்டும்… நாம எதுக்கு அப்புறம்…” மூக்கை முந்தானையில் சிந்தினாள்.

“எத்தனை வருசத்துக்குத்தான் அவ துரோகம் செஞ்சிட்டான்னு தூக்கிச் சுமக்கச் சொல்றீங்க… அவ செஞ்சது நமக்குத் துரோகம்… ஆனா அவ நல்லாத்தானே இருந்தா… நாம பாத்துச் செஞ்சி வச்சிருந்தாக்கூட அப்படி ஒரு வாழ்க்கை அவளுக்கு அமைஞ்சிருக்காது புரிஞ்சிக்கங்க…” என்றவர் ஆறுமுகம் பக்கம் பார்த்து “இன்னைக்கு கத்துறியே உன்னோட வளர்ச்சியில எங்களை விட அதிகம் சந்தோஷப்பட்டவ அவதான் தெரியுமா…? தப்புப் பண்ணிட்டேன்னு நம்ம முகத்துல முழிக்காம ஒதுங்கியிருந்தவ அவ.. அன்னைக்கு நான் வந்திருக்கேன்னு சொன்னதும் முகத்தை திருப்பிக்கிட்டா…”

“ஓ… மாமனைப் பார்த்ததும் நாடகமாடுனாளாக்கும்…” கடுப்பாய்க் கேட்டாள் லெட்சுமி.

“சாகக் கெடக்கவ எதுக்கு நாடகமாடணும்… நான் போயி அவ முகத்தைத் திருப்பிப் பார்த்ததும் பேசமுடியாத நெலமையில கண்ணீரா ஊத்துறா… அதுலயே எல்லாம் கரைஞ்சி போச்சுடி… அவ செஞ்சது… நாம பட்டது எல்லாம் கண்ணீரா போயிருச்சு… இனி என்ன இருக்கு தூக்கிச் சொமக்க…”

“ஆயிரம் சொன்னாலும் நீங்க அங்க போனது தப்பு… இனிமே போக்கூடாது அம்புட்டுத்தான்…” வேகமாய்ச் சொன்னான் ஆறுமுகம்.

ஒண்ணுமே பேசாமல் அமர்ந்திருந்தாள் லெட்சுமி.

“அவ செத்தா… பாடை தூக்குறது நானாத்தான் இருக்கும்… நீங்க ரெண்டு பேரும் என்ன செய்யணுமோ செஞ்சிக்கங்க… ஆனா அவ என்னோட மூத்த புள்ளைங்கிறத மட்டும் மறந்துடாதீங்க…” என்றபடி துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு அவர்களின் பதிலுக்குக் காத்திருக்காமல் படியிறங்கியவரின் கண்ணீர் முன்படியில் விழுந்தது.

-‘பரிவை’ சே.குமார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...