கோட்டாபய இன்று இலங்கை ஜனாதிபதியாக பதவி ஏற்பு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், கோட்டாபயாவின் சகோதரருமான மஹிந்தாவின் பிறந்தநாள் நாளை என்பதால் அநுராதபுரத்தில் உள்ள பெளத்த விகாரை ஒன்றில் இந்த பதவியேற்பு விழா இந்த தினத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபஷ தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார்
கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாக ட்விட்டரில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி பதிவிட்டுள்ளார்.
“இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இருநாடுகளுக்கும், அதன் குடிமக்களுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் சகோதரத்துவ உறவுகளை ஆழப்படுத்துவதற்கும், பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்” என்று தனது ட்விட்டர் பதிவில் நரேந்திர மோதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கைக்கான புதிய பயணம் தொடங்கியுள்ள நிலையில், அனைத்து இலங்கையர்களும் இந்தப் பயணத்தின் அங்கமாக இருப்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும். பிரசாரத்தில் ஈடுபட்டதைப் போன்றே அமைதியாகவும், கண்ணியத்துடனும், ஒழுக்கத்துடனும் நாம் கொண்டாடலாம்” என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார் கோட்டாபய ராஜபக்ஷ. அந்த அறிக்கையை அவர் தமது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.