விவசாயிகள் நாளை டெல்லியில் போராட்டம்..!

 விவசாயிகள் நாளை டெல்லியில் போராட்டம்..!

டெல்லி, ஹரியாணாவில் 200 விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து டெல்லியை நோக்கி பேரணி நடத்த இருப்பதால், டெல்லியில் 144 தடை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் வரும் பிப்.13 அன்று ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. இதற்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பலரும் டெல்லியை நோக்கி புறப்பட்டு வருகின்றனர்.

கடந்த 2021-ம் ஆண்டு ஜன.26-ம் தேதி நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது அம்மாநில தெருக்களில் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் நடந்த மோதல் மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதற்காக விவசாயிகள் பேரணியை எதிர்கொள்ள டெல்லி போலீஸார் அனைத்து விதங்களிலும் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி எல்லைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறை தரப்பில்,

“சில விவசாய அமைப்புகள் நாளை (பிப்.13) பேரணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் கிடைத்தது. வேளாண் பொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வமான அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை டெல்லியில் அமர்ந்து போராட்டம் நடத்துவார்கள் எனவும் தகவல் கிடைத்தது. இதையொட்டி, டெல்லியில் குறிப்பாக வடகிழக்கு டெல்லி பகுதிகளில் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 144-வது பிரிவின்படி தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அண்டை மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு விவசாயிகள்அணி திரண்டால் அதைத் தடுக்க நூற்றுக்கணக்கான போலீஸார் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதே போன்று பஞ்சாப் – ஹரியாணா எல்லைகளில் ‘டெல்லி சலோ பேரணி’யை முறியடிக்கும் விதமாக அம்பாலா, ஜிந்த், ஃப்தேஹாபாத் போன்ற மாவட்ட எல்லைகளை மூடுவதற்கு விரிவான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ஹரியாணாவின் 7 மாவட்டங்களில் இணைய சேவை ரத்து, குறுஞ்செய்திகளுக்கான தடை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாநில காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ‘டெல்லி சலோ’ பேரணியை பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் மறுத்துள்ளன” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...