பயணிகளுக்கு அவஸ்தையளிக்கும் கிளாம்பாக்கம்
போதிய பேருந்து வசதி இல்லாததால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையில் நேற்று இரவு பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததால் நேற்று இரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் இப்போது பயணிகளின் பெரும் தலைவலியாக குறிப்பாக தென்மாவட்ட மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் பேருந்து நிலையமாக கிளாம்பாக்கம் திகழ்கிறது. சரியான பேருந்து வசதி செய்யப்படாததே இதற்கு காரணம் என மக்கள் குறை கூறுகின்றனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே தென்மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளும், ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. அதன்படி தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்பட்டு வருகிறது.
பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்தே போதிய பேருந்து வசதி இல்லை என மக்கள் பல விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். ஆம்னி பேருந்து நிர்வாகிகளும் கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றி செல்வது தான் வசதியாக இருக்கும் என்றும் மக்களும் அதையே தான் விரும்புகின்றனர் எனவும் கூறியிருந்தனர். ஆனால் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்து கிளாம்பாக்கத்தில் இருந்து தான் புறப்படவேண்டும் என தமிழக அரசு கட்டன் ரைட்டாக தெரிவித்தது.
அந்தவகையில் நேற்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையில் திருச்சி செல்ல போதிய பேருந்து வசதி இல்லை என்றும் பல மணி நேரம் காத்திருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பல மணிநேரம் காத்திருந்த பயணிகள் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஏறுபட்டனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் நிர்வாகிகள் கூடுதல் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்படும் என பயணிகளிடம் உறுதி அளித்தனர்.
மேலும் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சில சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.