தேமுதிக நிறுவனத் தலைவர் நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது!

 தேமுதிக நிறுவனத் தலைவர் நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது!

மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் நடிகர் விஜயகாந்துக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது அறிவித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அண்மையில் காலமானார். விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்னையில் திரண்டிருந்தனர். விஜயகாந்துக்கு மத்திய அரசு சார்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உருக்கமாகவே அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி ஊடகங்களில் வெளியிட்ட கட்டுரை பெரும் பேசுபொருளானது. விஜயகாந்த் உருவாக்கிய தேமுதிக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணக்கமானதாக இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தேமுதிகவை எந்த ஒரு கட்சியுமே கண்டு கொள்ளாமல்தான் இருந்தது. டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்துக்கு கூட தேமுதிகவை அழைக்கவில்லை பாஜக.

அதேநேரத்தில் விஜயகாந்த் மறைவுக்குப் பின்னர் அக்கட்சியினரே நெஞ்சுருகி நெகிழ்ந்து போகும் வகையில் இடைவிடாமல் உருகிக் கொண்டிருக்கிறது பாஜக. இதன் அடுத்த கட்டமாக, தற்போது கலைத்துறையில் சேவையாற்றியதற்காக விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருதை அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இனி தேமுதிக, பாஜகவை விட்டு இம்மியும் கூட நகராது என்கிற அரசியல் நகர்வு உறுதியாகி இருக்கிறது.

ஏற்கனவே எந்த கூட்டணிக்கு போவது என தத்தளித்துக் கொண்டிருந்த தேமுதிகவுக்கு செத்தும் கொடுத்த சீதக்காதி போல தாம் மறைந்து ஒருவழியாக பாஜகவிடம் அடைக்கலமாகும் சூழ்நிலையை விஜயகாந்த் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் என்பதுதான் யதார்த்தம். ஏற்கனவே பாஜகவுடன் இணைந்து மத்திய அமைச்சராகிவிடலாம் என கனவு கொண்டிருக்கிறார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். ஆனால் டெல்லி மேலிடமோ, தேமுதிகவை பாஜகவுடன் இணைத்துவிடுங்கள்; அப்புறம் பார்க்கலாம் என பதில் தந்திருக்கிறது என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் பாஜகவின் கரங்களை தேமுதிக இறுகப் பற்றித்தான் ஆக வேண்டும் அல்லது பாஜக ஜோதியில் தேமுதிக கரைந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்கியிருக்கிறது விஜயகாந்துக்கான பத்ம பூஷன் விருது அறிவிப்பு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இருப்பினும் இதற்கெல்லாம் அசைகிறவர் பிரேமலதா கிடையாது. அவர் எப்போது என்ன முடிவு எடுக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது என்பதுதான் வரலாறு. எனவே பாஜக அஸ்திரம் பலிக்குமா அல்லது புஸ்வானம் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனவும் மூத்த பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...