முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக கடந்த 17 வருடங்களாக கர்நாடகா கருவூலத்தில் உள்ள 11,344 சேலைகள், 750 ஜோடி காலணிகள், சால்வைகள் போன்ற 27 வகையான பொருட்களை ஏலம் விட்டு அதில் வரும் நிதியை கொண்டு சொத்துக் குவிப்பு வழக்கிற்கு செலவிட்ட தொகையை ஈடு செய்ய வேண்டுமென பெங்களூர் சிட்டி சிவில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்மமூர்த்தி 2022 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் மாநகர சிவில் மற்றும் செஷன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் ஆர்.டி.ஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி மனுவில் முகாந்திரம் உள்ளது என கூறி நீதிபதி ராமச்சந்திர டி ஹூத்தார் உத்தரவு பிறப்பித்தார்.
அந்த தீர்ப்பில் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை உடனடியாக விற்பனை செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு சரியானது எனவும் உடனடியாக கர்நாடகா அரசு மற்றும் நீதித்துறை சிறப்பு வழக்கறிஞரை நியமித்து அனைத்து சொத்துகளையும் ஏலம் விட்டு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் கர்நாடக அரசு சொத்து குவிப்பு
வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 27 வகையான பொருட்களை ஏலம் விடுவதற்கு கிரண் எஸ் ஜவாலி என்ற வழக்கறிஞரை நியமித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் நரசிம்ம மூர்த்தி தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடுவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது தங்கம், வைரம், ரூபி, மரகதம், முத்துக்கள் பல வண்ண கற்கள் போன்றவை பதிக்கப்பட்ட 30 கிலோ நகைகள் மட்டுமே கர்நாடகா அரசின் கருவூலத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
ஆதலால் ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு வசம் உள்ள நகைகள் தவிர, இதர 28 வகையான பொருட்களை கர்நாடக நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என ஆர்.டி.ஐ.ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தனது கடிதத்தில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கோடி கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என கர்நாடக உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறைக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கு நடத்தப்பட்டதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் கர்நாடக அரசுக்கு 5 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.