இரவில் ஒரு வானவில் – சிறுகதை | ஸ்வர்ண ரம்யா

 இரவில் ஒரு வானவில் – சிறுகதை | ஸ்வர்ண ரம்யா

வானவில் மீது சாய்ந்து கொண்டும், சறுக்கிக் கொண்டும் கையில் புத்தகங்களுடன் சிரித்துக் கொண்டிருந்தனர் சிறுவர்கள். வீரமரணத்தை கட்டித்தழுவும் தருணத்திலும் கையில் இந்திய தேசியக் கொடியை கம்பீரமாக ஏந்தி நின்றனர் இராணுவ வீரர்கள். சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தகக் கண்காட்சி நடைபெறவிருப்பதை, செங்கல்பட்டு பேரறிஞர் அண்ணா பேருந்து நிலைய சுவர்கள் முழங்கின.

ஆற்காடு ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரிக் கடையில் ஈக்களுடன் மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தனர். சென்னை – மதுரை அரசுப் பேருந்தின் ஜன்னல் கோடுகள் வழியே அதைக் கவனித்தாள் குமுதா. “பாருடாக் குட்டி, தாத்தாக்கு ஸ்வீட் வாங்கலாம்னா ஒரே கூட்டமா இருக்கு. பஸ் இப்ப கிளம்பிடும்.” என்று மடியிலிருந்த தன் ஆறு மாத குழந்தையிடம் கூறினாள். பாட்டில் பாலால் தொண்டையையும்,  வெப்பமான சிறுநீரால் டயப்பரையும் நனைத்துக் கொண்டிருந்தது குழந்தை. “அக்கா நானும் ஸ்வீட் வாங்கதான் போறேன். உங்களுக்கு என்ன ஸ்வீட் வேணும்னு சொல்லுங்க. நான் வாங்கிட்டு வர்றேன்.” என குமுதாவிடம் அருகிலிருந்த இளம்பெண் கூறினாள். “கால் கிலோ ஜாங்கிரிம்மா” என்று கூறி புன்னகைத்தாள் குமுதா. சில நிமிடங்களில் அவள் ஜாங்கிரியுடன் வர “தேங்க்ஸ்மா” என்றாள்.

“தாத்தாக்கு ஜாங்கிரின்னா ரொம்ப இஷ்டம்டா. ஒரு காலத்துல எல்லாத்தையும் விட நான்னா அவருக்கு உசுரு.” என்றவளின் விழிகளில் மழைத்துளிகள். பேருந்து புறப்பட ஆயத்தமாகும் முரட்டு அசைவுகளும், மெலிதாக வீசிய செங்கைக் காற்றும், அருகிலிருந்த மசூதியின் இரவுத் தொழுகைப் பாடலும் குழந்தையின் உறக்கத்திற்கு ஊஞ்சலாகின.

தொப்பையை இறுக்கி அணைத்த பையுடன் வந்த நடத்துனரிடம் “நத்தம் ஒரு டிக்கெட்!” என்றாள் குமுதா. “குழந்தை அம்மா ஜாடைல இல்லையே, அப்பா ஜாடையோ?” என அவர் கேட்டதும் குமுதாவின் முகம் மாறியது. “எந்த ஜாடையா இருந்த எனக்கென்ன?” என அடுத்த பயணியின் ஜாதகத்தை அலச நகர்ந்தார். பேருந்தின் ஜன்னல் நோக்கி தன் பார்வையை திருப்பினாள் குமுதா. கண்களின் கையில் அகப்படாத இரவுப் பூச்சிகளாய் சாலையோரக் காட்சிகள் பறந்துக் கொண்டிருந்தன. இதே போன்ற ஒரு இரவுப் பேருந்து பயணத்தில், புதுத் தாலிக்கு அடைக்கலம் கொடுத்திருந்த குமுதாவின் கையை அவன் இறுகப் பற்றினான். “உனக்கு நான் இருக்கேன் குமுதா. இனி நம்ம வாழ்க்கை அழகா இருக்கப் போகுது.” என்றான் மனதில் அழுக்குடன். முதலில் வயனாடு போல் அழகாக இருந்த வாழ்க்கை பிறகு வைரஸாக மாறி குமுதாவைச் சுற்றி பரவியது.

‘இனி உனக்காக நான்’ எனக் கூறியவன் ‘உனக்காக மட்டும் நான்’ எனக் கூறும் யோக்கியன் அல்ல என்பதை கர்ப்பிணி குமுதா உணர்ந்தாள்.

மல்லிகா அக்காவின் தையல் கடையில் வேலைக்கு சேர்ந்தாள். மல்லிகாவின் அனுமதியுடன் குமுதாவின் வேலை நேரத்தில், கடையின் ஒரு ஓரத்தில் குழந்தையின் தூலி வாழ்க்கைத் தொடங்கியது.

குமுதா தனியாக இருக்கும் சமயத்தில் கடைக்கு வரும் பெண் வாடிக்கையாளர்கள் குழந்தையைக் கொஞ்சினர். ஆண் வாடிக்கையாளர்களில் சிலர் குமுதாவையும் கொஞ்ச ஆசைப்பட்டனர். வேலையை மாற்றினாள் குமுதா. குழந்தையையும் கூடவே வைத்துக் கொள்ள அனுமதிக்கும் வேலைகளையும், பாதுகாப்பான வாடகை வீடுகளையும் மாற்றிக் கொண்டே இருந்தாள். அவ்வப்போது நத்தத்தில் தன் அம்மா வீட்டிலிருந்து சில வீடுகள் தள்ளியிருந்த தன் அத்தையிடம் மட்டும் கைப்பேசியில் பேசினாள்.

“அத்தை.. அப்பா, அம்மா எப்படி இருக்காங்க? பாக்கணும் போல இருக்கு.”

“நல்லா இருக்காங்க குமுதா. உங்கப்பனோட கோபம் கொஞ்சம்கூட குறையலை. இங்க வந்து கிந்து தொலைச்சுடாதே. உன்னை வெட்டிப் போட்டாத்தான் மனசு ஆறும்னு குதிச்சிட்டிருக்கு அண்ணன்.”

“பேரன் மேலகூட கோபமா அத்தை?”

“அவளே என் பொண்ணு இல்லைங்கறேன். அப்புறம் பேரன் என்ன வேண்டிக் கெடக்குன்னு கேக்குது. உன்கிட்ட பேசணும்னு ஆசையிருந்தும் உங்கப்பாக்கு பயந்து பேசாம, உங்கம்மாதான் கடந்து தவிக்கிறாங்க.”

“அத்தை..அடுத்த தடவை நான் போன் பண்றப்போ அப்பாவுக்குத் தெரியாம அம்மாகிட்ட போனைக் கொடுக்கறிங்களா? பேசணும்போல இருக்கு..” என்றவளின் தொண்டை அடைத்தது.

“சரி குமுதா. அப்புறம் மாப்பிள்ளை நல்லா இருக்காருல்ல? கேட்டேன்னு சொல்லு.”

“ம்..சொல்றேன் அத்தை” என்றவள், ‘பிள்ளையைக் குடுத்துட்டு உங்க மாப்பிள்ளை ஒடிட்டான்’ என மனதில் நொந்து கொண்டாள்.

ஒரு வாரம் கழித்து அம்மாவுடன் பேசுவதற்காக உற்சாகமாக அத்தைக்குப் போன் செய்தாள்.

“அம்மாகிட்ட போனைக் கொடுக்கறிங்களா?” என்று ஆர்வமான குமுதா, குழந்தை புரண்டுவிட்ட செய்தியை அம்மாவுக்கு முதலில் கூற ஆசைப்பட்டாள்.

“என்னடி பேசறே? உனக்கு விஷயமே தெரியாதா? அண்ணன் உன்கிட்ட சொல்றேன்னுச்சு. அண்ணன் சேதி சொல்லியும் நீ வரலைன்னு உன் மேல கோபமா இருந்தேன்.” என சன்னமான குரலில் பேசினாள் அத்தை.

“என்ன அத்தை? என்ன ஆச்சு?” எனப் பதறினாள் குமுதா.

“உன்னையும், உன் புள்ளையையும் பாக்கமயே நெஞ்சு வலில போய்ச் சேர்ந்துட்டாங்க உன் அம்மா. அம்மா செத்ததுக்கு நீதான் காரணம்னு உன்னைத் திட்டிட்டிருக்கு அண்ணன். இப்ப வேணாம். கொஞ்ச மாசம் கழிச்சி புறப்பட்டு வா. அதுக்குள்ள அண்ணன்கிட்ட பேசி அது மனசை மாத்தப் பாக்கறேன்.” என அழுகுரலில் கூறினாள் அத்தை.

“அம்மா!” என அலறினாள் குமுதா.

சில மாதங்கள் கழித்து அப்பா தன்னை மன்னித்து பேரனைக் கொஞ்சுவார் என்ற நம்பிக்கையுடன்…

கலவரமான உணர்வுகளின் நடுவே அரைகுறை தூக்கத்தில் இருந்த குமுதாவை “ஏம்மா எழுந்துரும்மா. நத்தம் வந்துடுச்சு.” என எழுப்பினார் நடத்துனர்.

மங்கலான பார்வையுடன் கண்களைக் கசக்கிய குமுதா சுற்றும் முற்றும் பார்த்தாள். “அண்ணா என் பையைக் காணோம்னா. என் கால்கிட்டயேதான் வெச்சிருந்தேன்.” எனக் குழம்பினாள்.

“நல்லாப் பாரும்மா. ஓடற பஸ்ல எவன் எடுக்கப் போறான்?” என்றார்.

“கொண்டு வந்த ஒரே ஒரு பையைக் காணோம்.” என அழ ஆரம்பித்தாள்.

“இறங்கும்மா. உன் ஒத்தப் பைக்காக இந்த நடுராத்திரி மூன்றரை மணிக்கு போலீசுக்காப் போக முடியும்? மதுரைப் போய் சேரணும்மா. இறங்கு முதல்ல.” என்று இரக்கமில்லாமல் அவளை இறக்கி விட்டார்.

“அண்ணா, குழந்தையோட பால் பவுடர் அதுலதான் இருக்கு. தயவு செஞ்சு கொஞ்சம் தேடிப் பாருங்க.” என்று கெஞ்சிக் கொண்டே பேருந்தைவிட்டு இறங்க மனமில்லாதவளாய் பரிதவித்தாள் குமுதா. இதற்கிடையில் பசியினால் எழுந்த குழந்தையின் அழுகை சத்தத்தால் பிற பயணிகளின் தூக்கம் கலைய ஆரம்பித்தது. “என்னய்யா பஸ்லகூட நிம்மதியா தூங்க விட மாட்டிங்களா?” என ஒரு பொதுநலவாதி அக்கறையுடன் கேட்டான். வேறு வழியில்லாமல் பேருந்தைவிட்டு இறங்கினாள் குமுதா.

“கண்ணா அழாதேடா. கொஞ்சம் நேரம் பொறுமையா இருடா. அம்மா இருக்கேன்.” என்கிற ஆறுதல் வார்த்தைகளால் மேலும் பொறுமையிழந்த குழந்தை ஆறு கட்டை ஸ்ருதியில் அழுகையைத் தொடர்ந்தது.

குழந்தையை தோள்மீது சாய்த்து சமாதானப்படுத்திக் கொண்டே சாலையோரத்தில் கடைகள் ஏதும் திறந்துள்ளதா எனத் தேட ஆரம்பித்தாள் குமுதா. ‘செல்வி டிபன் ஸ்டால்’ என்கிற உணவுக் கடையை

ஒரு நடுவயது பெண்மணி மும்முரமாக திறந்து கொண்டிருப்பதைப் பார்த்து முகம் மலர்ந்தாள். குழந்தையின் அழுகை சத்தம் கேட்ட அந்த பெண்மணி குமுதாவிடம் “குழந்தை ஏன் இப்படி அழுதும்மா? பால் கொடுக்கலையா?” என்றாள்.

நடந்ததை சுருக்கமாக குமுதா கூறியதும் “அடப்பாவமே, பால்காரன் வர்றதுக்கு இன்னும் அரை மணி நேரத்துக்கு மேல ஆகும். கொஞ்சம் வெந்நீர் வெச்சி தர்றேன். சின்ன ஸ்பூன்ல கொஞ்சம் கொஞ்சமா பாப்பாவுக்குக் கொடுத்துப் பாரு. கத்திக் கத்தி பாவம் தொண்டை வத்திருக்கும்.” என அடுப்பைப் பற்ற வைத்தாள். பாலுக்கு ஏங்கிக் கொண்டிருந்த குழந்தை ஆற்றப்பட்ட பச்சைத் தண்ணீரை அழுதபடி கோபமாக தன் நாக்கால் நிராகரித்தது.

“கொஞ்சம் தூரத்துல இருக்கற டீக்கடை திறந்திருக்கான்னு பாக்கறேன்மா.” என்று கூறியபடி ஓட்டமும் நடையுமாக சென்றாள் அந்தப் பெண்மணி.

இடைவிடாது அழுத குழந்தையின் கண்கள் சற்று சொருக ஆரம்பித்தன.

திணறித் திணறி அழுத குழந்தையைப் பார்த்துப் பதறினாள் குமுதா.

அதன் கன்னத்தில் லேசாகத் தட்டியபடி “குட்டி அம்மாவைப் பாருடா.

கடவுளே! என் வயித்தை நிரப்பிட்டு ஓடிட்டான் அந்த ராஸ்கல். என்கூட பேசாமயே என்னை விட்டுப் போய்ட்டா என் அம்மா. என் அப்பா என்னை சேத்துப்பாரான்னுத் தெரியலை. எனக்கு இருக்கற இந்த ஒரே ஒரு உறவையும் என்கிட்டேர்ந்து பிரிச்சிடாதே!” என கைகளைக் கூப்பி வானம் பார்த்து அலறினாள்.

அப்போது சற்றுத் தள்ளி ஒரு சைக்கிளில் குமுதாவின் பையுடன் ஒருவன் வந்தான். சைக்கிளை தன் அருகில் நிறுத்தியவனிடம் எதுவும் பேசாமல் தன் பையை வேகமாகப் பிடுங்கினாள் குமுதா. அவசரமாக பாலைக் கலந்து குழந்தைக்குக் கொடுத்தாள். குழந்தை அமைதியாக பாலைக் குடிக்க ஆரம்பித்த பிறகுதான் குமுதாவுக்கு உயிரே வந்தது.

குமுதாவிடம் தலை குனிந்தபடி, “என்னை மன்னிச்சிடும்மா. வயத்துப் பொழப்புக்குத்தான் இந்த திருட்டு வேலை. வழக்கமா பணம் இருக்கற பைல பால் பவுடரும், பாட்டிலும் இருந்ததை பாத்த உடனே என் மனசு பிசைஞ்சிடுச்சும்மா. இப்ப என் குழந்தை உயிரோட இருந்திருந்தா அதுக்கு ஒரு வயசு ஆகியிருக்கும்.” என்றான்.

அவன் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து, அது வரையில் வேறு திசையில் பார்த்துக் கொண்டிருந்த குமுதா இப்போது அவனைப் பார்த்தாள்.

“நான் ஆசைபட்டு கட்டிக்கிட்ட என் அத்தைப் பொண்ணு கள்ளத் தொடர்பு வரைக்கும் போவான்னு நான் நினைச்சேப் பாக்கலை. அவ மேல கோபப்பட்டு அவளைக் கண்டிச்சேன். என்னை பழி வாங்கறேன்னு குழந்தையைக் கொன்னுட்டு அவளும் விஷம் குடிச்சு செத்துட்டா. இன்னொரு உசுரு என்னால போச்சுன்னா அதை என்னால தாங்க முடியாது.” எனக் கலங்கிய கண்களுடன் கூறினான்.

“நீ கடவுள்கிட்ட புலம்பி அழுததைக் கேட்டேன். எங்க போகணும்னு சொல்லு. நான் உன்னை பத்திரமா கூட்டிக்கிட்டுப் போறேன். என்னை நம்பி வரலாம்.” என சைக்கிளில் ஏறியபடி கூறினான். அவன் வார்த்தைகளில் இருந்த உண்மையை நம்பினாள் குமுதா.

அப்போது ஒரு பாத்திரத்தில் பாலுடன் வந்த உணவுக் கடை பெண்மணி  பால் குடித்து முடித்த குழந்தையைப் பார்த்து ஆறுதல் அடைந்தாள்.

“மாரியாத்தா உன்னைக் கும்பிட்டது வீண் போகலை. நல்ல வேளையா உனக்குத் தெரிஞ்சவரே வந்துட்டாருப் போலருக்கு.” என்றவளுக்கு கைகூப்பி நன்றி தெரிவித்தாள் குமுதா.

குழந்தையுடன் சைக்கிளின் பின்புறம் ஏறியவளிடம் “என் பேர் மாரி. உன் பேர் என்ன?” என்றான்.

“குமுதா” என்றாள்.

“உங்கப்பாவை விட்டா உனக்கும் பாப்பாவுக்கும் யாருமே இல்லைன்னு நினைக்காதே.” என்றான் உண்மையான அக்கறையுடன் மாரி.

******

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...