மகாகவி பாரதியார் விருது’ பெறும் கவிஞர் பழனி பாரதி

 மகாகவி பாரதியார் விருது’ பெறும் கவிஞர் பழனி பாரதி

மகாகவி பாரதியார் விருது’ பெறும் கவிஞர் பழனி பாரதிக்கு என் அன்பான வாழ்த்துக்கள் 💕
*
“உன் தலையிலிருந்து
தோளில்

தோளிலிருந்தது
மார்பில்

மார்பிலிருந்து
மடியில்

நெடுநல்வாடையில்
நீள் நெடுஞ்சாலையில்
பாடிக்கொண்டே உதிர்கிறது
ஒரு பூ.”

  • பழநிபாரதி
    *
    யாரிடமும் இல்லாத ஒரு மாயத் தூரிகை கொண்டு வரையும் நவீன ஓவியங்கள் கவிஞர் பழநிபாரதியின் கவிதைகள். தனித்துவம் கொண்ட சொற்சிற்பங்கள் அவை.

40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கவிதையிலும், திரைப்படப் பாடல்களிலும் இலக்கியத்திலும், சமூகத்தை அன்றாடம் பாதிக்கும் பிரச்சனைகளின் மீது கவனம் செலுத்தி அவற்றைப் பற்றிச் சமூக நீதிக் கண்ணோட்டத்தோடு தன் கருத்துக்களை வெளிப்படுத்துவதிலும், இதழியலிலும் இடைவிடாது தொடர்ந்து இயங்கி வருபவர் பழனி பாரதி.

பாரதி எனும் பெயருக்குப் பெருமை சேர்ப்பவர். மகாகவி பாரதியின் சமூக நீதியும், பெண்ணிய நோக்கும் இயல்பாகவே பழனி பாரதியின் எழுத்துக்களில் ‘பொந்திடை வைத்த அக்கினிக் குஞ்சாக’ பொதிந்திருப்பதை நாம் எளிதில் இனங்காண முடியும்.

அவருடைய ‘வனரஞ்சனி’ கவிதைத் தொகுப்பு அழியாத காதல் உணர்வின் கவிதை ஓவியங்கள். அதன் புதிய சொற்கோவைகள் புல்லரிப்பை ஏற்படுத்துபவை. எண்ணற்ற கற்பனைகளை சில சொற்களின் மூலமாகவே உருவாக்கும் சொல் ஓவியங்கள்.

ஏராளமான படங்களில் நூற்றுக்கணக்கான பாடல்கள் அவர் எழுதியிருந்தாலும் ‘காதலுக்கு மரியாதை’ அவர் கவிதைக்குச் செய்த மரியாதை. அந்தப் படத்தின் பாடல்கள் தமிழ் அறிந்த மக்கள் வாழும் உலகெங்கும் இண்டு இடுக்கு விடாமல் உள்ளே நுழைந்து விட்டவை.

‘குங்குமம்’ இதழில் அவர் தொடர்ந்து எழுதிய கட்டுரைகள் ‘காற்றின் கையெழுத்து’ பத்தி எழுத்தில் தடம் பதித்த ஓர் இலக்கியவாதியின் ஆவணம்.

பத்துக்கும் மேற்பட்ட
அவருடைய ஒவ்வொரு கவிதைத் தொகுதியும் ஒன்றில் ஒன்று வேறுப்பட்டு தனித்துவம் கொண்ட படைப்புகளாகத் திகழ்ந்து வருகின்றன. அரசியல், காதல், சுற்றுச்சூழல் என்று பலவிதமான கருப்பொருட்களை அற உணர்வு மேலோங்க அழகியல் குறையாமல் எழுதும் கவிஞர் பழனி பாரதி என்பதை அவற்றில் காணலாம்.

அண்ணல் அம்பேத்கரின் வரிகளாகப் பலரும் மேற்கோள் காட்டி வரும் ,

“சாதிகள் மட்டும்
சமுதாயம் என்றால்
வீசும் காற்றிலும்
விஷம் பரவட்டும்” என்பது

1981 இல் வெளிவந்த ‘நெருப்புப் பார்வைகள்’ எனும் பழனிபாரதியின் முதல் தொகுதியில் இடம் பெற்ற வரிகளாகும்.

சமூக விஞ்ஞானி அண்ணல் அம்பேத்கரின் வரிகளாக எண்ணப்படும் அளவுக்கு இளம் வயதிலேயே உயரமாகச் சிந்தித்தவர் பழனிபாரதி என்பதுதான் அவரது ஆர்பாட்டம் இல்லாத பெருமை.

‘தாய்’ பத்திரிக்கைக்கு துணை ஆசிரியராக இருந்த 90-களில் இருந்து தொடர்ந்து இளம் கவிஞர்களுக்கு, இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கமளிக்கும் ஈர இதயம் அவருக்கு இருப்பதைக் கவனித்து வருகிறேன் . எப்போதும் அவரைச் சுற்றி இளம் படைப்பாளர்கள் குழுமி, அவர் இருக்கும் பகுதியில் பசுமைச் சூழல் படர்ந்து ஒரு ஈரக் காற்று வீசுவதை பார்த்து மகிழ்ந்திருகிறேன்.

அவரது ஆரம்ப காலக் கவிதை தொகுதியான – தொண்ணூறுகளில் வெளிவந்த- ‘வெளிநடப்பு’ நூலைப் படித்துவிட்டு நேரடி அறிமுகம் இல்லாத நாட்களில் அவருக்கு நான் எழுதிய கடிதம் ஒன்றினை நீண்ட காலம் கழித்து நேரில் சந்தித்தபோது அது தன்னிடம் இருப்பதைக் கூறியபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நட்பின் விதை கண்ணுக்குத் தெரியாமல் வளர்ந்து காற்றுவெளியில் மறைந்தவாறு தலையசைத்தது.

அவர் பணியாற்றிய ‘அரங்கேற்றம்’ இதழில் ‘பீடத்தில் அமர்ந்த பிறகு…’ என்ற என் கவிதையை வெளியிட்டது என் ஆரம்ப கால அங்கீகாரங்களில் ஒன்று. அந்தக் கவிதையைப் படித்து விட்டு அறிஞர் ஔவை நடராஜன் என்னை பாராட்டியபோது நான் மனதுக்குள் நண்பர் பழனி பாரதிக்குத்தான் நன்றியை தெரிவித்தேன்.

‘மீன்கள் உறங்கும் குளம்’ எனும் என் ஹைக்கூ கவிதை நூலுக்கு ‘பாஷாவும் பிருந்தா சாரதியும் தட்டான் பூச்சிகளும்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய அழகான அணித்துரை ஹைக்கூ கவிதை குறித்த அற்புதமான ஒரு கட்டுரையாகும்.

இப்போதும் அண்ணன் அறிவுமதியின் ‘தை’ இதழில் கவிதைகளைக் கோர்ப்பதில் வெளியே தெரியாமல் மறைந்திருந்து பணியாற்றும் அவரது இதழியல் பணிகள் அழகியலும் சமூகவியலும் நிறைந்த தீக்கொன்றையின் பூச்சர வேலைப்பாடுகள் . எண்ணற்ற புதிய கவிஞர்களை அடையாளம் கண்டு அதில் அரங்கேற்றி வருகிறார்.

புதிதாக வெளிவந்திருக்கும் ‘படிமங்கள் உறங்குவதில்லை’ எனும் கவிதைத் தொகுதிக்கு மூத்த கவிஞர் கலாப்ரியா எழுதிய அணிந்துரையைப் படித்ததிலிருந்து அதைப் படிக்கும் ஆர்வம் மேலிட்டு வருகிறது. அதில் அவர் எழுதியிருப்பதைப் போலவே பழனி பாரதி அடைய வேண்டிய உயரங்களும் பெறவேண்டிய விருதுகளும் இன்னும் நிறைய இருக்கின்றன. சொல்லப்போனால் அவர் அடைய வேண்டிய உயரம் என்பது அவரது அகத்தில் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது. தன் உயரத்தைத் தான் உரைக்காது தனக்குள் உள்ளடங்கி இருக்கும் விதையின் மௌனம் அவரது அடக்கம். அது புறத்தில்
வெளிப்பட்டு நாம் காண்பதற்கான ஒரு தருணமாகவே இந்த மகாகவி பாரதியார் விருதை நான் காண்கிறேன்.

என் இனிய நண்பர் கவிஞர், பாடல் ஆசிரியர் பழனி பாரதி Palani Bharathi அவர்கள் பாரதியார் விருது பெறும் இந்த இனிய நேரத்தில்
அவரை அணைத்துக் கொள்வதிலும் வாழ்த்து கூறுவதிலும் பெரிதும் மகிழ்கிறேன்.

by

Brindha Sarathy

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...