மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டு பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.! | சதீஸ்
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டில் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையாக கருதப்படுவது பொங்கல் பண்டிகையாகும். உழவர் திருநாளாக கருதப்படும் பொங்கல் அன்று புத்தாடை அணிந்து, பொங்கல் வைத்து, கரும்பை ருசித்து மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுவர். தமிழ்நாட்டை தாண்டி உழவுத் தொழிலை போற்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பெயர்களில் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்னும் ஓரிரு தினங்களில் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வருகிற ஜனவரி 14 ஆம் தேதி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாட உள்ளார். அவரது இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நடத்திய அந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அதே போல இந்த ஆண்டும் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பொங்கல் விழாவை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கொண்டாட உள்ளார். இந்த நிகழ்வில் தமிழகத்தின் முக்கியமான நபர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைப்பட பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.