பிளாஸ்டிக் கவர்களில் உணவு பொருட்களை விற்க தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..! | சதீஸ்
அரிசி, பருப்பு, சர்க்கரை, பால் உள்ளிட்ட பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்பதற்கு அளிக்கப்பட்ட விதிவிலக்கை திரும்பப் பெற்றதை எதிர்த்து தமிழ்நாடு பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி டி.ஆஷா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்க அளிக்கப்பட்ட விலக்கை ரத்து செய்து 2020ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை முழுமையாக அமல்படுத்துவது சாத்தியமில்லாததால், தடை உத்தரவை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு அனுமதி தர வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
பிளாஸ்டிக் தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நர்மதா சம்பத், எந்த ஒரு ஆய்வும் மேற்கொள்ளாமல் இதற்கு தடை விதிக்கப்பட்டதாக முறையிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அன்றாட உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் பேக்கிங் செய்து விற்பனை செய்வதற்கு, விதிவிலக்கு அளிக்கப்பட்டு, பின்னர் அதை திரும்ப பெற பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடைவிதித்து உத்தரவிட்டனர்.