கேப்டன் விஜயகாந்துக்கு நடிகர்கள் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தப்படும் – நடிகர் கார்த்தி | சதீஸ்
விஜயகாந்த் மறைவுக்கு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி வராமல் இருந்தது குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்தன. புத்தாண்டு கொண்டாட்டம் முடித்து விட்டு கூலாக வந்து நடிகர்கள் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி டிராமா செய்வார்கள் என ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்து இருந்தனர். இந்நிலையில், நடிகர் கார்த்தி இது என் வாழ்நாள் முழுவதுமே ஒரு குறையாக இருக்கும் என கலங்கியபடி பேசி கேப்டன் விஜயகாந்த் இரங்கல் கூட்டம் நடத்தப்படும் தேதி குறித்தும் அறிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 28ம் தேதி நடிகரும் முன்னாள் நடிகர் சங்க தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 71. ஆனால், நடிகர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் அனைவருமே அந்த நேரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக வெளிநாடுகளுக்கு சென்று விட்டதால் வர முடியவில்லை.
நடிகர் விஷால் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த செய்தி அறிந்தும் “மன்னிச்சிடுங்க அண்ணே, இந்நேரம் நான் அங்க உங்க கூட இருந்திருக்கணும்.. இப்படியெல்லாம் நடக்கும்னு தெரியாதுண்ணே.. உங்களை போலவே நானும் நிறைய பேருக்கு நல்லது செய்வேன்” என கலங்கிய கண்களுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
நடிகர் சூர்யாவும் தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டில் புத்தாண்டு கொண்டாடி வந்த நிலையில், விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டதுமே காரில் சென்றுக் கொண்டிருந்தபடியே அவரது பெருமைகளை பேசி, தான் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியவில்லையே என வருத்தப்பட்டு பேசியிருந்தார்.
நடிகர் கார்த்தி விஜயகாந்த் மறைவு செய்தி அறிந்ததும் இரங்கல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், சென்னை திரும்பிய கார்த்தி விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் தழு தழுத்த குரலில் கலங்கிய உள்ளத்தோடு “விஜயகாந்த் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாதது என் வாழ்நாள் முழுவதும் குறையாகவே இருக்கும்” என்றார்.
மேலும், வரும் ஜனவரி 19ம் தேதி பொங்கல் பண்டிகை எல்லாம் முடிந்த பிறகு கேப்டன் விஜயகாந்துக்கு நடிகர்கள் சங்கம் சார்பில் மிகப்பெரியளவிலான இரங்கல் கூட்டம் நடத்தப்படும் என்றும் நடிகர் கார்த்தி அறிவித்துள்ளார்.