“கேப்டன்” விஜயகாந்த் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார் .
விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமையகம் இன்று காலை அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் திரைப்பட துறையில் கொடி கட்டி பறந்த நிலையில் அதன் பிறகு அரசியலில் காலூன்றி, அதிலும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் வரை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2006ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
விஜயகாந்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து விஜயகாந்தின் துணைவியாரும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து ஆறுதல் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திமுக எம்பி டிஆர். பாலு , அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.