விஜயகாந்த் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்..!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இந்திய அளவில் உள்ள அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமையகம் இன்று காலை அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் திரைப்பட துறையில் கொடி கட்டி பறந்த நிலையில் அதன் பிறகு அரசியலில் காலூன்றி, அதிலும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் வரை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2006ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
விஜயகாந்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி இரங்கல்
”தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது; தமிழ் திரையுலகின் ஜாம்பவான்; அவரது நடிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைக் கவர்ந்தது; தமிழ்நாடு அரசியலில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய அவர் பொதுச் சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்; அவரது மறைவு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது
விஜயகாந்த் எனது நெருங்கிய நண்பராக இருந்தார்; அவருடன் உரையாடிய தருணங்களை அன்புடன் நினைவுகூர்கிறேன்; அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி :
” சிறந்த நடிகரும், அர்ப்பணிப்புமிக்க தலைவரும், சிறந்த மனிதநேயவாதியுமான விஜயகாந்த் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. சினிமா, அரசியல், சமூக சேவை ஆகியவற்றில் அவர் வழங்கிய அளப்பரிய பங்களிப்பு என்றும் நினைவுகூறப்படும். எனது பிரார்த்தனைகள் அவரது குடும்பத்தினருடனும் எண்ணற்ற ஆதரவாளர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி! – “ என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
”உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர், சகோதரர் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன்; அவர் நல்ல திரைப்படக்கலைஞர்; நல்ல அரசியல் தலைவர்; நல்ல மனிதர்; நல்ல சகோதரர்; ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்து இருக்கிறோம்
சகோதரர் விஜயகாந்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்” என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் :
தேமுதிக தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் திரையுலகிலும், அரசியலிலும் பெரும் ஆளுமையான, கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ளவர், தமிழக மக்கள் அனைவராலும் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்பட்டவர். அவரை இழந்துவாடும், குடும்பத்தினர், தேமுதிக தொண்டர்களுக்கும் மற்றும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி :
”தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்; சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் “ என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி
”தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான விஜயகாந்த உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் ; அவரை இழந்துவாடும் அன்னாரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான மரியாதைக்குரிய பிரேமலதா விஜயகாந்த், குடும்பத்தினர் மற்றும் அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ள, மக்களால் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்தின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்” என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் எம்பி
”தேமுதிக தலைவர் அண்ணன் கேப்டன் விஜயகாந்தின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகுந்த துயருற்றேன் ; அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கும் தமிழ்நாடு அரசியலுக்கும் பேரிழப்பு ; விஜயகாந்தை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், கட்சி தோழர்கள், ரசிகர்கள், திரையுலகினர் ஆகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்” – என திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் :
”தமிழ்த் திரையுலகிலும், அரசியலிலும் தமக்கென தவிர்க்க முடியாத இடத்தை வென்றெடுத்தவர் விஜயகாந்த். அரசியலைக் கடந்து அவர் மீது எனக்கு தனிப்பட்ட அன்பு உண்டு; அவருக்கும் என் மீது மரியாதை உண்டு. மிகுந்த இரக்க குணமும், மனிதநேயமும் கொண்டவர். திரைத் தொழிலாளர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவர் மீதும் எல்லையில்லாத அன்பும், அக்கறையும் காட்டியவர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் மறைவு அவரது இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை :
”தேமுதிக தலைவர், மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் காலமானார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது ; ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதர்; உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர்.
தன்னலமற்ற தலைவர்; தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர்; கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்; சொல்லொன்று செயலொன்று என்றில்லாது, சொன்ன சொல் வழி நின்றவர்; பாசாங்கில்லாத மனிதர்; பாரதப் பிரதமர் பேரன்பைப் பெற்றவர்.
கேப்டன் விஜயகாந்தின் மறைவு, தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு; அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும், தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் :
தமிழ்த்திரைத்துறையில் தமது கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகனாகத் திகழ்ந்த ஆகச்சிறந்த திரைக்கலைஞர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், தமிழ்நாட்டின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்புச்சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
தம்மை நாடி வந்த மக்கள் அனைவருக்கும் பசியாற உணவளித்த மனிதநேயவாதி. தமிழ்த்திரைத்துறையிலும், அரசியல் துறையிலும் அவர் படைத்த சாதனைகள் காலத்தால் அழியாதவை. கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் தமிழ்நாட்டு மக்கள் மனங்களில் என்றென்றும் நீங்காது நிலைத்திருக்கும். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் அம்மையார் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், அன்புத்தம்பிகள் விசய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், உலகெங்கும் வாழும் அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி :
”தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும், புரட்சிக் கலைஞருமான கேப்டன் விஜயகாந்தின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். விஜயகாந்த் அவர்கள் ஏழை,எளிய மக்கள் மீது மிகுந்த அன்பும், பரிவும் கொண்டவர். பழகுவதற்கு இனிமையானவர், பண்பாளர். மக்கள் நலத்திட்டங்களை ஆண்டுதோறும் கட்சியின் சார்பாக சிறப்புடன் தொடர்ந்து செய்து வந்தவர்.
விஜயகாந்த் மறைவு தமிழ்த் திரையுலகத்திற்கும், அரசியலுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கலைத்துறையினருக்கும், தே.மு.தி.க. கட்சியினருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ
”தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நம்மை விட்டுப் பிரிந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே என்கிற கொள்கை அடிப்படையில் எளியவருக்கு அதிகம்உதவிகளைச் செய்து வந்தவர். தமிழ் திரையுலகத்திற்கும் தமிழ்நாட்டின் அரசியல் களத்திற்கும் அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. மனிதநேயமிக்க செயற்பாட்டாளர் திரு விஜயகாந்த் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார்.
மஜக பொதுச் செயலாளார் தமீமுன் அன்சாரி :
”தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனைப்படுகிறோம். கட்சி அரசியலை கடந்து அவரது மரணம் சோக அலையை உருவாக்கியிருக்கிறது. திரையுலகம் ஒரு ஆளுமையை இழந்திருக்கிறது. தமிழ்நாட்டு அரசியல் ஒரு மனிதநேயரை இழந்திருக்கிறது. அவரை இழந்து தவிக்கும் அவரது மனைவியா பிரேமலதா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், அவரது அபிமானிகளுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்” என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.