என்னுடைய கணவர் அரசியலுக்கு வராதது வருத்தமாக தான் உள்ளது– திருமதி லதா ரஜினிகாந்த்..! | சதீஸ்

 என்னுடைய கணவர் அரசியலுக்கு வராதது வருத்தமாக தான் உள்ளது– திருமதி லதா ரஜினிகாந்த்..! | சதீஸ்

இன்றைய காலகட்டத்தில் என்னுடைய கணவர் அரசியலுக்கு வராதது எனக்கு வருத்தமாக தான் உள்ளது. என்னுடைய கணவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் எனக்கு மிகவும் பிடிக்கும் என லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தை தயாரிப்பதற்காக மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட் முரளி, ‘ஆட் பீரோ’ நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹாவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றார். இதற்காக முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்து கையெழுத்து இட்டிருந்தார். பின்னர் முரளி கடனாக பெற்ற பணத்தை அபிர்சந்த் நஹாருக்கு திரும்ப அளிக்காததால் முரளி, லதா ரஜினிகாந்த் மீது கடந்த 2015-ம் ஆண்டு அபிர்சந்த் நஹார் பெங்களூரு மாநகர 6-வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். பெங்களூரு நீதிமன்றத்தில் 2015ம் ஆண்டு தொடர்ந்த இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வருகிறது.

புகாரின் அடிப்படையில் லதா ரஜினிகாந்த் மீது 196, 199, 420, 463 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்ட போது தன் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி லதா ரஜினிகாந்த் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மூன்று வழக்குகளை ரத்து செய்த நீதிமன்றம் 463 பிரிவில் உள்ள வழக்கை மட்டும் விசாரிக்க உத்தரவிட்டது.

அந்த வழக்கையும் ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணையில், லதா ரஜினிகாந்தின் விசாரணையை பெங்களூரு நீதிமன்றமே மேற்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனால், பெங்களூரு கூடுதல் மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் லதா ரஜினிகாந்த் ஆஜராக வேண்டும் என்றும் இல்லை என்றால் பிரிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்தது. அதன்படி, இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரான லதா ரஜினிகாந்திற்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லதா ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

”ஒரு முக்கியமான தருணத்தில் உங்களை நான் சந்தித்து வருகிறேன். கோச்சடையான் படத்திற்கு கடன் வாங்கினார்கள் அதற்கு நான் அத்தாச்சிக்கு கையெழுத்திட்டேன். தலையில் துப்பட்டா அணிந்து சென்றதாக சமூக வலைதளங்களில் என்னை தவறாக பேசுகிறார்கள். நான் எதற்கும் பயப்படவில்லை. நியாயத்திற்காக் தான் நான் சென்றேன்.

என்னை தாக்குவதற்கான காரணம் நான் ஒரு பெண் என்பதால் தான். நியாத்திற்கு ரஜினிகாந்த் கூட துணையாக இருப்பார். சட்ட ரீதியாக நான் எப்படி வழக்கை அணுக வேண்டுமோ, அப்படி அணுகினேன். இந்த கோச்சடையான் படம் குறித்து பல ஊடகங்கள் தவறாக சித்தரித்து வருகிறது. குடும்பத்தில் நடக்கும் விஷயம் என்றால் பக்கத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும்.

இதனால் நானும் என்னுடைய கணவரும் மனதால் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளோம். நீதிமன்றங்களின் பொது மக்களுக்கு நியாயம் கிடைக்குமா என்ற நிலைமை தற்போது உள்ளது. நீதி என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் என்னுடைய கணவர் அரசியலுக்கு வராதது எனக்கு வருத்தமாக தான் உள்ளது. என்னுடைய கணவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் எனக்கு மிகவும் பிடிக்கும்.

மான நஷ்ட வழக்கு போடுவதற்கு நான் யோசனை செய்து கொண்டு இருக்கிறேன். என் கணவர் அரசியல் வருவதற்காக என்னுடன் ரகசியமாக அதிகமாக பேசி உள்ளார்” இவ்வாறு லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...