ஓவியர் ரவி வர்மா
பிரபல ஓவியர் ரவி வர்மா பிறந்த தினம்!
ராஜா ரவி வர்மா (1848-1906) பெயரில் ‘ராஜா’ என இருப்பதால் இவர் ராஜா அல்ல. ஆனால் திருவனந்தபுரம் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர். கேரள மக்களின் ‘மறுமக்கத் தாயம்’ பாரம்பரியத்தின்படி அவரது மாமாவின் பெயரான ‘ராஜ ராஜவர்மாவில் வரும் ‘ராஜ’ என்ற பட்டம் அவருடைய பெயருடன் 1904ல் சேர்க்கப்பட்டு, அப்போது முதல் ராஜா ரவி வர்மா என்றே அழைக்கப் பட்டார்.
அவரது ஓவியங்களில் பல இராமாயணம், மகாபாரதம் போன்ற இந்திய இதிகாசக் காட்சிகளை ஐரோப்பியக் கலை அம்சங்களுடன் இழைத்து வரையப்பட்டவை. தஞ்சாவூர் ஓவியக் கலைப் பாரம்பரியத்தில் முறையான பயிற்சி பெற்றவர்.
கிளிமானூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்த அவர் 14 வயதில் திருவனந்தபுரம் சென்று அரச குடும்ப ஓவியராகி, அரண்மனை ஓவியர் ராமசாமி நாயுடுவிடமும் பின்னர் டச்சு ஓவியரான தியோடர் ஜென்சனிடமும் பயிற்சி பெற்றார்.
தைலவண்ண ஓவியங்களில் உள்ள நுணுக்கங்களை தஞ்சாவூர் அரண்மனை ஓவியரான அழகிரி நாயுடுவிடமும் அறிந்துகொண்டார். திருவிதாங்கூர் அரசர் ஆயில்யம் திருநாள் மகாராஜா இவரது ஓவியக்கலை பயிற்சிக்குப் புரவலராக இருந்தார்.
அவரது ஓவியங்களில் கையில் விளக்கேந்திய காரிகை, நளதமயந்தி, ஆலயத்தில் பிச்சை அளிக்கும் பெண்மணி பழத்துடன் பாவை, தூது சென்ற கிருஷ்ணர், ரிஷிகன்யா, ஜடாயு சகுந்தலை, துஷ்யந்தனுக்கு மடல் எழுதும் சகுந்தலை போன்ற ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை.
கேரளாவின் மாவேலிக்கரை அரச குடும்பத்தைச் சேர்ந்த மகா பிரபாவை திருமணம் செய்துகொண்டு அவரது எஞ்சிய வாழ்நாள்களை மைசூர், பரோடா மற்றும் பிற இந்திய நகரங்களில் கழித்தார்.
1873ல் வியன்னாவில் நடைபெற்ற உலக அளவிலான ஓவியக் கண்காட்சியில் அவரது ஓவியம் முதற் பரிசு பெற்றது.
1893ல் சிகாகோவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியிலும் அவரது ஓவியங்கள், இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றன. 1904ல் இங்கிலாந்து அரசரின் சார்பாக ‘கேசரி- ஹிந்த்’ என்ற தங்கப்பதக்கம் வைஸ்ராய் கர்சன் பிரபுவால் வழங்கப்பட்டது.
20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இன்று வரை பூஜையறையிலும், வரவேற்பறையிலும் அனைவராலும் பயன்படுத்தப்படும் விநாயகர், மகா விஷ்ணு, பரமசிவன், லட்சுமி, சரஸ்வதி, வள்ளி தெய்வானையுடன் மயில் மீது முருகன் அமர்ந்திருக்கும் ஓவியம், ராமர் பட்டாபிஷேகக் காட்சி ஆகிய தெய்வப் படங்கள் ராஜா ரவி வர்மா வின் கை வண்ணத்தில் உருவான வைகளே! நமது கடவுளர்களுக்கும் இந்தியப் பெண்மணிகளுக்கும் ‘உரு’ கொடுத்தவர் என்ற பெருமையும் ரவிவர்மாவுக்கு உண்டு.
கடவுள் படங்கள் தவிர்த்து மைசூர் மகாராஜா சாமராஜேந்திர உடையார், மகாராணி லட்சுமி பாயி, புதுக்கோட்டை ராணி ஜானகி சுப்பம்மா, அவர்க ளது பாய் சாகிப், உதயப்பூர் மகாராஜா தர்பார் காட்சி, பரோடா சமஸ்தானத்து மன்னர் என அரச குடும்பத் தினர் விருப்பத்தை ஏற்று ஓவியங்களைத் தீட்டினார்.
இன்றும்` இவரது ஓவியங்கள் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரா ஆர்ட் காலரியில் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளதுடன், இவரது ஓவியங்கள் பல நூல் வடிவம் பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக, ரூபிகா சாவ்ளா எழுத்தோ வியத்துடன், மார்பிள் பதிப்பகம் மிகப் பெரிய அளவில் நூலாக வெளியிட்டிருக்கிறது.